குழந்தைகளுக்கு வெண்டைக்காய் கொடுப்பது அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும் !!
வெண்டைக்காயில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.
வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையை காபிப் பொடியாகப் பயன்படுத்துகிறார்க்ள.
கொழுப்பை கரைக்கும்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.
வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.
ஆண்மையை அதிகரிக்கும்
வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.
சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.
நன்மை தரும் பாக்டீரியா
இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப்படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம்.
வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் (laxative.) உள்ளது. இது உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாய்வு கோளாறுகளை தடுக்கிறது. வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும்.
இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்.
No comments:
Post a Comment