Saturday, 6 April 2013


சுவாசிக்கும் மக்கள் அனைவரும் மரம் நட வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

“”மரங்கள் தான் மனிதர்களின் நுரையீரல். நம்மை நாம் காத்து கொள்ள வேண்டுமென்றால், மரங்களை காப்பது அவசியம்,” என, சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார்.சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இந்திராகாந்தி பரியவரன் புரஸ்கார் விருது, ஈஷா யோகா மையத்தின், “பசுமை கரங்கள்’ திட்டத்துக்கு கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், கடந்த 5ம் தேதி டில்லியில், இந்த விருதை வழங்கினார்.

ஆன்மிகவாதியான உங்களுக்கு, அதிக எண்ணிக்கையில் மரம் நட வேண்டுமென்ற எண்ணம் எப்படி எழுந்தது?

மரங்கள் வெளிவிடும் காற்றை, நாம் சுவாசிக்கிறோம்; நாம் வெளிவிடும் காற்றை, மரங்கள் சுவாசிக்கின்றன. அந்த வகையில், மரங்கள் தான் நம் நுரையீரலாக செயல்படுகின் றன. நுரையீரலை பாதுகாப்பது நமது கடமை இல்லையா? அந்த வகையில், நம்மை நாம் காத்துக் கொள்ள, மரங்களை காப்பாற்ற வேண்டும். மரம், மண் என அனைத்தும், நம்மில் ஒரு பகுதி தான் என்ற எண்ணம் இருந்தால், மரம் வளர்ப்பதில் தானாக ஆர்வம் வந்துவிடும்.அதனால், மரங்கள் நடுவதை ஓர் இயக்கமாக ஆரம்பித்தோம். இதற்காக ஊர், ஊராக 10 ஆண்டுகளாக பிரசாரம் மேற் கொண்டோம். முதலில், மக்கள் மனதில் மரங்களை நட்டோம். மக்கள் அதன் அவசியத்தை உணர்ந்த பிறகு, மனதில் நடப் பட்ட மரங்களை மண்ணுக்கு மாற்றுவது எளிதாகிவிட்டது.இதில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரும், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் இல்லை. அன்றன்றைக்கு உழைத்தால் தான், அன்றைய தினத்தை ஓட்ட முடியுமென்ற நிலையில் இருப்பவர்கள். தாங்களாகவே ஆர்வமாக வந்தவர்கள். இது தான் வெற்றிக்கு அடிப்படை காரணம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நடப்பட்ட மரங்களின் தற்போதைய நிலை என்ன என்பதை கண்காணிக்கிறீர்களா?

இதுவரை நட்டுள்ள 82 லட்சம் மரங்களும், தனியார் நிலத்திலேயே நடப்பட்டுள் ளன. ஒவ்வொருவர் பொறுப்பிலும் இரண்டு மரங்களுக்கு மேல் தருவதில்லை. சரியாக வளராத மரங்களுக்கு பதில், புதிய மரங்கள் தரப்பட்டுள்ளன. இத்தகைய தொடர் கண்காணிப்பால், எங்கள் பணி 70 சதவீதத்துக்கும் மேல், சில இடங்களில் 90 சதவீதத்துக்கு மேல் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இந்த பணி எப்படி ஆரம்பித்தது?
ஐ.நா.,வின் துணை அமைப்பு ஒன்று இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், “2025ம் ஆண்டில், தென் மாநிலங்களின் 60 சதவீத நிலம், பாலைவனமாக மாறும்’ என கணித்தது. இதை பார்த்த பிறகு, நான் தமிழகம் முழுவதும் ஒரு சுற்றுப் பயணம் மேற் கொண் டேன். அப்போது எனக்கு ஓர் உண்மை புரிந்தது. நாடு பாலைவனமாக 2025ம் ஆண்டு வரை காத்திருக்க தேவையில்லை; அது வெகு சீக்கிரத்திலேயே நடந்துவிடும் என்பது.அதன் பிறகே, மரங்களை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு உணர்ந்தும் பணியை தீவிரப்படுத்தினேன்.
இதுவரை எத்தனை மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதற்கு ஏதும் பலன் கிடைத்ததா?

நாங்கள் நட்ட மரங்கள் குறித்த துல்லியமான கணக்கு, என்னிடம் இப்போது இல்லை. ஆனால், ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் பசுமைத்தன்மை 4.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ஒருபுள்ளி விபரம் நிரூபிக்கிறது.

இந்த விருது, உங்களுக்கு ஊக்கம் அளித்துள்ளதா?

* இது, எனது தனிப்பட்ட சாதனையோ, ஈஷா மையத்தின் சாதனையோ இல்லை. இந்த திட்டத்தில் தாமாக முன்வந்து சேர்ந்த சாமானிய மக்களின் சாதனை. எனவே, இந்த சாதனை மற்றும் விருதுக்கான பயன்கள், மரம் வளர்ப்பில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சாமானிய மக்களையே சாரும்.
மரம் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறதா?
உலகிலேயே தமிழகம் தான், 12 ஆயிரம் ஆண்டுகளாக விவசாயத்தை தொடர்ந்து தொழிலாக செய்து வரும் ஒரே சமூகம். வேறு எங்கும் இதுபோல் இல்லை. தென் அமெரிக்காவில் ஒரு சில இடங்களில் மட்டும் இது போன்று இருந்ததாக சொல்லப்படுகிறது.இத்தனை ஆயிரம் ஆண்டுகள், வளமாக காத்து வந்த மண்ணை நம் தலைமுறையில் பாழ்படுத்தி விட்டோம். பயிர் வளர்ப்பும், மரம் வளர்ப்பும் நம்முடன் ஒன்றியவை. வர்த்தகம் சார்ந்த பயிர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால், மண் வளத்தை காக்க தவறிவிட்டோம். முன்பு 120 அடியில் தண்ணீர் கிடைத்த நிலை மாறி, இன்று 1400 அடிவரைக்கும், “போர்’ போட வேண்டிய நிலை உள்ளது.கிராமங்களில் உள்ளவர்கள், முன்பு வசதியற்றவர்களாக இருந்தாலும், வலுவான உடல் கொண்டவர்களாக இருந்தனர்.

ஆனால் இன்று கிராமங்களில், மற்ற எல்லாம் இருக்கிறது; ஆரோக்கியம் இல்லை. இதற்கு காரணம், நமக்கு தேவையான சத்தான உணவுகளை பயிர் செய்யவில்லை. எலும்பு வளர்ச்சி கூட முழுமை பெறாத அரைகுறை மனிதனாக தான் பலரும் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும்.மரங்களை வளர்ப்பது நம் அடிப்படை கடமைகளில் ஒன்று என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். யார் யார் எல்லாம் சுவாசிக்கின்றனரோ, அவர்கள் எல்லாம் மரங்கள் நட வேண்டும். மூச்சு விடாதவர்கள், மரங்களை பேண வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு ஜக்கி வாசுதேவ் கூறினார்.

கின்னஸ் சாதனை : மத்திய அரசு வழங்கும், இந்திராகாந்தி பரியவரன் புரஸ்கார் விருது, ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கமும், வெள்ளி தாமரை கோப்பையும், சான்றிதழும் அடங்கியது. 2008ம் ஆண்டுக்கான விருது “பசுமை கரங்கள்’ திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.ஈஷா யோகா மையம் மூன்று லட்சம் தன்னார்வ தொண்டர்கள் மூலம், ஐந்து ஆண்டுகளில் 82 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் மேலும் 10.6 கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டுள்ளது. 2006ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி, 8 லட்சத்து 52 ஆயிரத்து 587 மரக்கன்றுகளை 2 லட்சத்து 56 ஆயிரத்து 289 தன்னார்வ தொண்டர்களை கொண்டு, தமிழகத்திலுள்ள 27 மாவட் டங்களில் 6,284 இடங்களில் நட்டது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment