சத்குரு அவர்களை வரவேற்று....
(2010 ஆம் ஆண்டு..மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அயல்நாட்டுப் பயணங்களிலிருந்து சத்குரு திரும்பினார். சுவாமி ஆதிரூபா கேட்டபடி சத்குருவை வரவேற்று எழுதித் தந்த பாடல் இது...)
பல்லவி
வருக வருக எங்கள் வான்மழையே-எங்கள்
வாழ்வில் இனிக்கிற தேன்துளியே
தருக தருக உந்தன் தரிசனமே-எட்டுத்
திசைகள் அளந்துவரும் பூரணமே
சரணம்-1
திருவடி பாராமல் திருமுகம் காணாமல்
தினமொரு யுகமாய் கழிந்தது
குருநிழல் சேராமல் அருள்மொழி கேளாமல்
திசைகளும் இருளாய் இருந்தது
மாதங்கள் பறந்தன மாதவமே
மனமெங்கும் நிறைந்தது உன்முகமே
வான்வழி வந்தது எம்தவமே-எங்கள்
வாசலில் நின்றது வானகமே
சரணம்-2
ஒளிதரும் கிழக்காக கலங்கரை விளக்காக
பகலிலும் இரவிலும் துணைநீ
துளிவினை படியாமல் தொடர்கதை தொடராமல்
தூயவனே எங்கள் கதிநீ
நீவரும் திசையினில் கண்ணிருக்க-உன்
நினைவினில் எப்போதும் நெஞ்சிருக்க
தாய்முகம் தேடிடும் சேய்களைப்போல்-எங்கள்
தவிப்பிலும் உந்தன் சிரிப்பிருக்க....
வருக வருக எங்கள் வான்மழையே-எங்கள்
வாழ்வில் இனிக்கிற தேன்துளியே
தருக தருக உந்தன் தரிசனமே-எட்டுத்
திசைகள் அளந்துவரும் பூரணமே
No comments:
Post a Comment