Sunday, 15 April 2012

ஜன கன மன என்று எங்காவது ஒலிக்க ஆரம்பித்தால் போதும், தன்னை அறியாத அளவுக்கு மதுவினாலோ பணத்தினாலோ போதை ஏறி போனவர்கள் தவிர, மூப்பேறி போனவர்களும் கால் ஊன்ற முடியாதவர்களும் கூட எழுந்து நிற்க முனையும் அளவுக்கு தேசிய கீதத்தின் மீது பற்று வைத்திருக்கும் நாடு இந்தியா.இனம், மதம், மொழி மற்றும் மாநில வித்தியாசம் இல்லாமல் தேசிய கீதத்திற்கு மரியாதை தரும் இந்திய மக்கள், இந்த தேசத்தின் மீது எந்த அளவுக்கு அக்கறை வைத்துள்ளார்கள்?

அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவு கண்டால் பொருமித்தள்ளும் இந்தியர்கள் எத்தனை பேர் இங்கு காணாமல் போன வங்கிகள் எத்தனை என்பதை அறிவார்கள்?

சச்சினோ தோனியோ சரியாக விலாயாடாமல் போனால் அவர்களின் வீட்டில் கல்லெறியும் மக்கள் எத்தனை பேர் அரசியல்வாதியோ ஒரு பணக்காரனோ தவறு செய்தால் அவர்களின் வீட்டில் கல்லேரிந்தார்கள்?

நைஜீரியாவிலும் கம்போடியாவிலும் பட்டினியால் இறக்கும் உயிர்களை கண்டு கண்ணீர் விடும் இந்திய மக்கள், தினம் தினம் தெருவில் பார்க்கும் எத்தனை பிச்சைக்காரர்களுக்கு ஒரு ரூபாய் தானம் செய்திருப்பார்கள்?

சாம், ஜேகப், பீட்டர், மார்டின் என்று தனக்கு கூலி தரும் வெளிநாட்டினனின் பெயரை மனப்பாடமாய் வைத்து அவனிடம் சொந்தக்காரன்போல் பேசி பழகும் IT கம்பெனி கூலிக்காரர்கள் எத்தனை பேருக்கு அவர்கள் வீட்டில் அலுவகத்தில் வேலை செய்யும் துணி துவைப்பவர் பெயரோ சுத்தம் செய்பவர் பெயரோ தெரியும்?

ஏன் இந்த அக்கறையின்மை? ஏன் இந்த போலி வேடம்? ஏன் இந்த இரு முகம்? ஏன் இந்த பாரபட்சம்?
தேசத்தின் மீது அக்கறை உண்டு என்று நடிக்கும் திராவிடன் ஒவ்வொருவனும் தான் செய்யும் தவறுகளை மறைக்க பார்க்கிறான், அல்லது நியாயப்படுத்த பார்க்கிறான்.
அப்படி நடக்கும் தவறுகளின் உச்சகட்டமாய் தவறுகளின் திருவுறுவையே தேசத்தின் தலைமையிலும் ஒவ்வொரு மாநிலத்தின், ஊரின், கிராமத்தின் தலைமையிலும் அமர வைத்து அழகு பார்க்கும் மக்களையும் தவறுகளையும் அவர்கள் அறியும் வண்ணம் தெரிவிப்பதே இந்த பதிவின் நோக்கம்.

அரசுப்பேருந்துகளில் 50 பைசா திருட்டும், ஸ்பெக்ட்ரம் வழக்கில் லட்சக்கணக்கான கோடிகள் திருட்டும் மக்கள் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்.
பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதையும் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதையும் அரசு நினைத்தால் நிறுத்தியிருக்கலாம்.
அனால் திருட்டுக்கள் நடந்துக்கொண்டே இருக்கின்றன. வசை பாடும் மக்கள் தவறுகள் செய்துகொண்டே இருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment