நம் கலாச்சாரத்தில் கர்ப்பிணிப் பெண்களை கர்ப்பக் காலத்தின் பிற்பகுதியில் தனியாக வைத்துப் பராமரித்திருக்கிறார்கள், அது எதனால்?
சத்குரு: புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையின் மண்டையோட்டைக் கவனித்திருக்கிறீர்களா? மண்டையோடு முழுமையாக இருக்காது. உச்சியில் சிறிய பகுதி தோலால்தான் மூடப்பட்டிருக்கும். பிறந்த குழந்தை மிகவும் மென்மையாகக் கையாளப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம். அப்பகுதி ‘பிரம்மரந்திரா’ என்று அழைக்கப்படுகிறது. ‘ரந்திரா’ என்றால் சிறிய துளை அல்லது வழி என்று அர்த்தம். பெண்ணின் வயிற்றில் கரு ஒரு பிண்டமாக இருக்கும்போது, இந்த துளை வாயிலாகத்தான் புதிய உயிர் இறங்குகிறது. இந்த உடல் தனக்குத் தகுதியானதுதானா என்று கருவில் புகுந்த உயிரானது கடைசி நிமிடம் வரை தேர்வு செய்யும். அந்த அளவு விழிப்புணர்வு அந்த உயிருக்கு இருக்கிறது.
ஒரு வேளை இந்த உடல் தனக்குத் தகுதியானதல்ல என்று அந்த உயிர் உணர்ந்தால், தலை உச்சியில் உள்ள அந்த வாயில் வழியாகவே வெளியேறிவிடும். உடலில் வேறு பல வாயில்கள் இருந்தாலும் அதன் வழியாக வெளியேற அந்த உயிர் விரும்புவதில்லை. எனவேதான், விரும்பாத உயிர் வெளியேறுவதற்கு வசதியாக குழந்தை பிறக்கும்வரை அந்த வாயில் திறந்தே இருக்கிறது. இறந்தே பிறக்கும் பல குழந்தைகளைப் பார்க்கும்போது, மருத்துவர்களுக்கே பல நேரங்களில் விந்தையாக இருக்கும். ஏனெனில், அந்த உடலைப் பார்க்கும்போது, மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால், அந்த உடலில் உயிர் இருக்காது. ஏனெனில், உயிர் கடைசி வரையிலும்கூட தேர்வு செய்துகொண்டே இருக்கும்.
அந்த உயிருக்கு என்று ஒரு கர்மா இருக்கும், பிண்டத்துக்கு என்று ஒரு கர்மா இருக்கும். 90 சதவீதம் ஏன் அதற்கும் மேலாகக்கூட அந்த உயிரின் தேர்வு சரியாகத்தான் இருக்கும். சரியான பிண்டத்தைத்தான், கருவைத்தான் தேர்ந்தெடுத்திருக்கும். ஆனாலும் தவறு நேர்ந்துவிடலாம் என்ற விழிப்புணர்வு அந்த உயிருக்கு எப்போதும் இருக்கும்.
இந்தக் காரணத்துக்காகத்தான் நம் கலாச்சாரத்தில், கர்ப்பமடைந்த ஒரு பெண்ணைச் சுற்றி பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. பிறக்கப்போகும் குழந்தையின் அப்பா, அம்மா ஆகிய இருவரையும்விட, சிறந்த உயிர் அந்தக் கருவுக்கு வந்து தங்க வேண்டும் என விரும்பினார்கள். தாங்கள் எந்தத் தன்மையில் இருக்கிறோமோ, அதையும்விட உயர்ந்த தன்மையில் உள்ள உயிர் அந்தக் கருவைத் தேடி வர வேண்டும் என விரும்பினார்கள். அதனால்தான் அவள் ஒரு குறிப்பிட்ட வசதியான சூழ்நிலையில் பராமரிக்கப்பட்டாள். சுமுகமான சூழ்நிலை, நல்ல எண்ணங்கள் என்று அவளின் மொத்தத் தன்மையும் இனிமையாக இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். அவளைச் சுற்றிலும் நறுமணமான சூழ்நிலை, சரியான சப்தங்கள், சரியான உணவு, என மொத்தமும் கண்காணிக்கப்பட்டன. வரக்கூடிய புதிய உயிரை வரவேற்க அவள் முற்றிலும் தகுதியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். குறிப்பிட்ட மாதங்களுக்குப் பிறகு, அவளுடைய கணவன்கூட பல காரணங்களுக்காக அவளைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
ஆனால், தற்போது கர்ப்ப காலத்திலும் கடைசி வரை ஒரு பெண் வேலைக்குச் செல்கிறாள், சினிமா, டி.வியில் எல்லாவிதமான காட்சிகளும் பார்க்கிறாள். எல்லாப் பொது இடங்களுக்கும் போகிறாள். கர்ப்பம் அடைந்துள்ள பெண்களுக்கான பழைய பராமரிப்பு முறைகள் தற்போது இல்லை. இன்றைய உலகில் அவையெல்லாம் சாத்தியமே இல்லை என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்!
No comments:
Post a Comment