Sunday, 22 April 2012

""அடேய்! உன் நண்பன், தனது தங்கையின் திருமணத்திற்காக வைத்திருந்த ஐம்பதாயிரம் ரூபாயை உன்னை நம்பி தந்தானே! நீயோ, அவனிடம் பணமே வாங்கவில்லை என சாதித்து, உன் தேவைக்கு பயன்படுத்தினாயே! அதனால், அந்தப் பெண்ணின் திருமணமே நின்று போனதே! உன் நண்பன் மனம் உடைந்து தற்கொலை முடிவுக்கு கூட போய் தப்பித்தானே! நினைவிருக்கிறதா! ஒரு கதை சொல்கிறேன். கேட்டு விட்டு கிளம்பு,'' என்றான்.
அந்த மனிதன் பயத்துடன் கதையைக் கேட்டான்.
வேட்டைக்கு சென்ற ஒரு வேடன் புலி ஒன்றுக்கு குறி வைத்தான். புலியோ அவன் மீது வேகமாகப் பாய்ந்து வில்லையும், அம்பையும் தட்டிவிட்டது. ஆயுதமிழந்த அவன், வேகமாக ஓடினான். புலி விரட்டியது. அவன் ஒரு மரத்தின் மேல் ஏறிக்கொண்டான்.
அங்கே ஒரு கரடி அமர்ந்திருந்தது. ""புலிக்குத் தப்பி கரடியிடம் சிக்கிக் கொண்டோமே, என்ன செய்வது? குதித்து மீண்டும் ஓடலாமா?'' என எண்ணிய போது, கரடி அவனிடம், ""நண்பனே! பயப்படாதே! உன்னை நான் கொல்ல மாட்டேன். ஒருவரிடம் அடைக்கலம் புகுந்தவர் எதிரியே ஆயினும், அவரைக் காப்பாற்றுவதே தர்மம். 
இங்கேயே இரு. புலி சென்றதும், போகலாம்,'' என்றது.
வேடனும் மரத்தில் இருந்தான். "எப்படியும் அவன் இறங்கி வந்தாக வேண்டுமே!' என புலியும் கீழேயே படுத்திருந்தது. ஒரு கட்டத்தில் அவனுக்கு தூக்கம் வர, ""வேடனே! தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்து விடாதே! என் மடியில் படுத்துக் கொள், உன்னை நான் பிடித்துக் கொள்கிறேன்,'' என்றது கரடி. வேடனும் அவ்வாறே படுத்து தூங்கினான்.
சற்று நேரத்தில் கரடிக்கு தூக்கம் வரவே, வேடனை எழுப்பி,""நண்பா! இப்போது உன் மடியில் நான் படுத்துக் கொள்கிறேன். நீ விழித்திரு,'' என்றது. சற்றுநேரத்தில் அயர்ந்து உறங்கி விட்டது.
சலித்துப் போன புலி வேடனிடம்,""ஏ வேடனே! காலையில் எழுந்ததும் அந்த கரடிக்கு பசிக்கும். உன்னை எப்படியும் தின்றுவிடும். இதனால், உனக்கும் எனக்கும் லாபமில்லை. 
அந்தக் கரடியை கீழே தள்ளு! நான் அதைக் கொன்று சாப்பிட்டு விட்டு போகிறேன்,'' என்றது.
நன்றி கெட்ட வேடன், கரடியை கீழே தள்ளினான். கரடியோ சுதாரித்து ஒரு கிளையைப் பிடித்து தொங்கியபடியே வேடன் அருகே வந்தது. தன் உயிர் போச்சு என்றே வேடன் நினைத்தான்.
ஆனால், கரடி அவனிடம்,""நண்பா! நீ செய்தது நன்றிகெட்ட செயல் தான். இருப்பினும், என் குணத்தை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். துரோகம் செய்தாலும், என்னை அண்டி வந்த உன்னை புலி செல்லும்வரை இங்கேயே வைத்து பாதுகாப்பேன். நானும் உன்னைக் கொல்லமாட்டேன்,'' என்றது.
வேடன் வெட்கத்தில் தலைகுனிந்தான்,'' என்று கதையை முடித்தான் எமதர்மன்.
""ஏ மானிடனே! இப்போது சொல், ஒரு கரடிக்கு இருந்த நேயம் கூட உன்னிடம் இல்லாமல் மடிந்து போனதே! உன்னை எண்ணெய் சட்டிக்குள் போட்டால் என்ன தவறு?'' என்ற எமதர்மனுக்கு, மனிதனால் பதில் சொல்ல முடியவில்லை.
அவனை எமதூதர்கள் நரகத்துக்குள் இழுத்துச்சென்றனர்

No comments:

Post a Comment