வேலூர்: செங்கம் ரிஷபேஸ்வரர் கோவிலில், நந்தீஸ்வரர் மீது, நேற்று முன்தினம், சூரிய ஒளிக்கதிர்கள் பட்டபோது, நந்தீஸ்வரர் தங்க நிறமாக மாறி காட்சி அளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில், ஸ்ரீ அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என, வரலாற்று ஆராய்ச்சியாளர் கள் கூறுகின்றனர். கோவிலின் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு, மாதந்தோறும், பவுர்ணமி மற்றும் அமாவாசை பிரதோஷ சிறப்பு பூஜை நடக்கின்றன. கடந்த, 2012ம் ஆண்டு, பங்குனி மாதம், 3ம் தேதி, பிரதோஷ வழிபாடு நடந்தது. அப்போது, கோவில் ராஜகோபுரத்தை கடந்து, நந்தீஸ்வரர் மீது, சூரிய ஒளிக்கதிர்கள் பட்டன. இதனால், சிறிது நேரம் தங்க நிறமாக, நந்தீஸ்வரர் காட்சியளித்தார். இதைக் கண்ட பக்தர்கள், நந்தி பகவானுக்கு, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அன்று முதல், ஆண்டுதோறும், அதே நாளில், ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாதம், 3ம் தேதியன்று, சூரிய ஒளியானது, கோவிலின் ராஜகோபுரம் மீது பட்டு, பின், நந்தீஸ்வரர் மீது விழுகிறது. அந்த நேரம் நந்தீஸ்வரர் தங்க நிறமாக ஒளிர்கிறார். அதன்படி, இந்த ஆண்டு பங்குனி மாதம், 3ம் தேதியான, நேற்று முன்தினம், இந்த கோவிலில், மாலை, 4:00 மணி முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதின. மாலை, 5:40 மணியளவில், சூரிய ஒளிக்கதிர்கள் நந்தீஸ்வரர் மீது விழுந்தது. அப்போது, சிறிது நேரம் தங்க நிறத்தில், நந்தீஸ்வரர் காட்சியளித்தார். அவரை, பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர். பின், நந்தீஸ்வரருக்கு, மகா பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
No comments:
Post a Comment