இந்த பிறவியில் எங்களால் தன்னை உணர இயலாத நிலை ஏற்பட்டால் நாங்கள் இப்போது மேற்கொள்ளும் பயிற்சிகள் அனைத்தும் அடுத்த பிறவியில் எங்களுக்குப் பயன்படுமா?
சத்குரு :- கர்மா என்பது அழிந்து போவதில்லை. அதற்காகக் கர்மாவை நீங்கள் சொல்வது போல புரிந்து கொள்ளக்கூடாது. தியானத்தை இங்கு விட்டேன். அங்கே தொடங்கலாமா என்பது போல புரிந்து கொள்ளாதீர்கள். ஒரு செயலை எந்த நோக்கத்துடன் செய்கிறீர்கள் என்பதுதான் உங்கள் கர்மாவைத் தீர்மானிக்கும். எனவே, கர்மா என்பது செயலை விட நோக்கத்தைதான் குறிக்கிறது. இப்போது ஆன்மீகப் பாதையில் இருக்கிறீர்கள். அடுத்த பிறவியில் தாயின் கருவிலிருந்து வெளிப்பட்டவுடனேயே, நீங்கள் எழுந்து, அமர்ந்து தியானம் செய்யப் போவதில்லை. மற்றவர்கள் போலவே முட்டாள்தனமாகத்தான் வாழ்வீர்கள். ஆனால் மெல்ல, மெல்ல ஒரு சூழ்நிலை உருவாகும். அதற்கான வாய்ப்புகளை வாழ்க்கை உங்களுக்கு வழங்கும். பொதுவாக, ஆன்மீகப் பாதையில் ஏற்கனவே இருப்பவர்கள் வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்காகக் கவலைப்படும் நிலை இருக்காது. ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாமல், வசதிகள், பதவிகள், போன்றவற்றில் சிக்கி அவற்றிலேயே அமிழ்ந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது உங்கள் போராட்டம் மறுபடியும் வேறொரு நிலையில் தொடங்கும். ஆனால் வாய்ப்புகள் சரியாகப் பயன்படுத்தப் படுமானால், மிக நிச்சயமாக, அவர் விட்ட இடத்திலிருந்தே அது தொடங்குகிறது
No comments:
Post a Comment