Thursday, 26 July 2012


இன்று மலட்டுத்தன்மை நீக்கும் ஆலம்பழம் பற்றிய தகவல்.

ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.சிவந்த நிறமுடைய ஆலம் பழத்தில் ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறிய விதைகள் காணப்படுகின்றன. இந்த விதைகள் நுண்ணியவையாக இருந்தாலும் மருத்துவ குணம் நிறைந்தவை.
மூலநோய் குணமாகும்

ஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.
மலடு நீங்கும்
ஆண்கள், பெண்களின் மலட்டுத்தன்மையை நீங்க ஆலம்பழம் பயன்படுகிறது. மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். நாற்பத்தி எட்டு நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் உடல் நலனைப் பொருத்து தினசரி ஒரு ஸ்பூன் பாலில் கலந்து அருந்தலாம்.

தசை வலி நீங்கும்

ஆலம் பழம் தசைவலிகளை நீக்கும். இது பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகளை நீக்கவல்லது

பல்வலி போக்கும்

பல் வலிக்கும் நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் பல்வலி போகும்.
 

Tuesday, 24 July 2012

ஆண்-பெண் ஈர்ப்பு, சரியா? தவறா?

கேள்வி: “ஓர் ஆணுக்குப் பெண்ணிடத்திலும், பெண்ணுக்கு ஆணிடத்திலும் வரும் ஈர்ப்பு நல்லதா, கெட்டதா? நல்லது எனில் எந்தவிதத்தில்? கெட்டது என்றால், ஏன்?”

சத்குரு: மேற்கில் ஆண் பெண் உறவுகளைச் சுதந்திரமாக வைத்துக்கொண்டால், வாழ்க்கை சுதந்திரமாக அமையும் என்று கணக்கு போட்டார்கள். இளம் வயதில் அது பிரமாதமாக வேலை செய்தது. ஆனால் வயது ஏற ஏற போதிய பாதுகாப்பு இல்லையோ என்ற உணர்வு அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.

பந்தம் இல்லை, குடும்பம் இல்லை, உறவில் எந்த உறுதியும் இல்லையென்றாகிப் போனதால், ஒரு தலைமுறையே அநாதைகளாக வளர்ந்து நிற்கும் அவலம் அங்கே காணப்படுகிறது. சமூகத்தில் பெரும்பகுதியே மனரீதியாகப் பின்னமாகிவிட்டது.
பொறுப்பு ஏற்காமல் விளையாட்டுத்தனமாக எதில் ஈடுபட்டாலும், விளைவு இப்படித்தான் இருக்கும்.

இளமைக் காலத்தில் உங்கள் சுகங்களில் பெரும் பகுதியைத் தீர்மானிக்கும் இதே உடல் வெகுகாலம் அதே நிலையில் தங்காது. இனக்கவர்ச்சி, இளமையில் முக்கியமானதோ, இல்லையோ, இளமைப் பருவத்தில் மற்றவற்றைவிட அது முன்னிலையில் பிரதானமாய் இருப்பதை மறுக்க முடியாது.

நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இயற்கை அப்படித்தான் அமைத்திருக்கிறது. அதை நல்லது என்றோ கெட்டது என்றோ ஏன் முத்திரை குத்த வேண்டும்? அதில் சுகம் என்று முழுவதுமாக ஆழ்ந்து போனாலும், சிக்கிக் கொள்வீர்கள். தப்பு என்று தவிர்க்கப் பார்த்தாலும் அதனுடன் ஒட்டிக் கொண்டு விடுவீர்கள்.

வாழ்க்கைக்குத் தேவையான அளவோடு அதை நிறுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். அதைக் கடந்து போக முடிந்தால் அற்புதம்!கேள்வி: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?

சத்குரு: நீங்கள் கேட்பதைப் பார்த்தால், அது இறந்த காலமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டது போலிருக்கிறதே? உண்மையில், நிகழ்காலத்தில் கடவுளை அனுதினமும் ஒவ்வொரு கணத்திலும் நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கடவுளைத் தவிர வேறு எதையும் எங்கேயும் காணவில்லை.

எப்படி என்கிறீர்களா? கடவுள் என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்? உங்களைச் சுற்றி படைக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்டத்தை உருவாக்கிய சக்தியைத்தானே? அந்த சக்தி எங்கே குடியிருக்கிறது? எங்கெல்லாம் படைப்பு நிகழ்கிறதோ, அங்கெல்லாம் தானே?
அதாவது அதோ அந்த மரத்தில், இந்தப் பூவில் உங்களில், என்னில் என்று எங்கும் நீக்கமற கடவுளைத் தவிர வேறு எதை நீங்கள் காண முடியும்?

ஒரு படைப்பை அணுகும்போது, கவனம் பலவிதங்களில் அமையலாம். உங்கள் உடலைப் பற்றி தெரிந்து கொள்ள விழிகளால் கவனிக்கலாம். உங்கள் மனதைப் புரிந்து கொள்ள உங்களுடன் சிறிது நேரம் பேச்சு கொடுத்துக் கவனிக்கலாம். அல்லது உங்களுள் அடிப்படையான இயங்கும் உயிர்ச் சக்தியைக் கவனிக்கலாம்.

காலையில் நீங்கள் சாப்பிட்ட சிற்றுண்டி மாலைக்குள் உங்கள் உடலின் ஒரு பகுதியாக மாறுகிறதே, இந்த அற்புதத்தை யார் நிகழ்த்துவது? உங்களைப் படைத்தவர்தானே? அதை அவர் வெளியில் இருந்து கொண்டா செய்கிறார்? உங்களுக்குள் இருந்து கொண்டு அல்லவா செய்கிறார்? அப்படியானால், கடவுள் உங்களுள் இருக்கிறார் அல்லவா?

ஒவ்வொரு படைப்பிலும் அதைப் படைத்தவன் இருக்கிறான் என்று புரிந்து கொண்டால், கடவுளைப் பார்க்கத் தனியாக எந்தப் பயணமும் மேற்கொள்ளத் தேவை இல்லையே?

கடவுளை நான் பார்க்கிறேன். தினம் தினம் கணத்துக்குக் கணம் என்னிலும் என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் கடவுளைக் காண்கிறேன், கண்டு கொண்டே இருக்கிறேன்.

Friday, 20 July 2012

ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

பூக்களின் அழகும், நறுமணமும் எத்தகை யோரையும் மயக்கும் தன்மை கொண்டது. பூக்களில் மறைந்துள்ள மருத்துவத் தன்மையை நம் முன்னோர்கள் அறிந்து கொண்டால் தான் அதை இறைவனுக்கு பூஜிக்க பயன்படுத்தினர்.

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ

என்ற பழமொழி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இதிலிருந்தே இதன் மருத்துவப் பயனை அறியலாம். ஆவாரம் பூ உயிர்க்காக்கும் மருந்தாகும்.

மஞ்சள் நிறத்தில் கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கும் ஆவாரம் பூவின் செடி குத்துச்செடி இனத்தைச் சேர்ந்தது. இதனை ஆவரை, ஆவிரை, ஏமபுட்பி, மேகாரி, ஆகுலி, தலபோடம் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Aavaarai

English - Tanner’s cassia

Telugu - Tangedu

Malayalam - Aveeram

Sanskrit - Avartaki

Botanical Name - Cassia auriculata

தங்கம் எனவே சடத்திற்குக் காந்திதரும்

மங்காத நீரை வறட்சிகளை - அங்கத்தாம்

மாவைக்கற் றாழை மணத்தை அகற்றிவிடும்v பூவைசேர் ஆவாரம் பூ
(அகத்தியர் குணபாடம்) நீரிழிவு நோய், சருமத்தில் உண்டாகும் வறட்சி, சருமத்தில் உப்புப் படிதல், மற்றும், வியர்வையால் உண்டாகும் துர்நாற்றம், இவைகளை நீக்கி தங்கம் போன்ற மேனியைக் கொடுக்கும்.

ஆவாரம் பூ நரம்பிலுள்ள உப்புத்தன்மையை நீக்கும் தன்மை கொண்டது.

நீரிழிவு நோய் கட்டுப்பட

2025ம் ஆண்டு இந்திய மக்கள் தொகையில் 68 சதவிகிதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் படுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்னிந்திய மக்கள்தான் இதற்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் அந்த நிறுவனத்தின் அறிக்கை மேலும் கூறுகிறது.

நீரிழிவு நேயைக் கட்டுப்படுத்த அன்றே நம் சித்தர்கள் பல மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். அதில் ஆவாரம் பூவும் ஒன்று. ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரையை குறைக்க ஆவாரம் பூ சிறந்த மருந்தாகும்.

ஆவாரம் பூ, குப்பைமேனி இலை, பூவரசு இலை, செம்பருத்தி இலை சம அளவு எடுத்து, அரைத்து சருமத்தில் முழங்காலுக்குக் கீழே பூசி வந்தால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கால் பகுதி உணர்ச்சிபெறும்.

மேனி பளபளக்க

ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து அதனை தேன் கலந்து தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் மேனி தங்கம் போல் பளபளவென்று இருக்கும். சரும நோய்கள் ஏதும் அண்டாது.

கற்றாழை நாற்றம் மாற

சிலருக்கு வியர்வையில் கற்றாழை நாற்றம் கலந்து வீசும். இதனால் இவர்கள் அருகில் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த கற்றாழை நாற்றத்திற்குக் காரணம் உடலில் உள்ள வியர்வைத் துளைகளில் படிந்துள்ள கிருமிகளே.

இவர்கள் ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் பனைவெல்லம், சுக்கு சேர்த்து கஷாயமாக்கி தினமும் இருவேளை டீ போல அருந்தி வந்தால் வாசனை திரவியம் இன்றி உங்கள் மேனி நறுமணம் வீசும்.

உடம்பில் உப்பொரிதல் மாற

சிலருக்கு உடம்பில் வியர்வை அப்படியே படிந்து உப்புப் படிவமாக மாறும். உடலெங்கும் வெள்ளைத் திட்டுக்களாக படிந்து இருக்கும். இவர்கள் ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து அதனுடன் சீயக்காய் தூள் சேர்த்து குளிக்கும் முன் உடலெங்கும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடம்பில் உப்பொரிதல் மாறும்.

உடல் சூடு தணிய

உடல் சூட்டால் பித்தம் அதிகரித்து உடலில் இரத்தம் மாசடைந்து நோய்கள் பல ஏற்பட வாய்ப்பாகிறது. இந்த உடல் சூடு தணிய ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் காலையில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு படிப்படியாக குறையும்.

தலைமுடி உதிர்வதைத் தடுக்க

ஆவாரம் பூ மேனியை பளபளப்பாக வைப்பதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் சிறந்த மருந்தாகப் பயன் படுகிறது.

ஆவாரம்பூவை காயவைத்து அதனுடன் சீயக்காய், சிறுபயறு சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறைந்து கூந்தல் நீளமாக வளரும்.

வெள்ளைப்படுதல் உள்ள பெண்கள் ஆவாரம் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

ஆவாரம் பூவின் வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது என்று பல ஆய்வறிக்கைகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அணtடி ஞீடிச்ஞஞுtடிஞி, ச்ணtடி ணிதுடிஞீச்ணt குணங்கள் ஆவாரம் பூவிற்கு உண்டு என்று தற்போது நடைபெற்று வருகின்ற ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

எங்கும் கிடைக்கும் எளிய மருந்தான ஆவாரம்பூவை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.
 
காதல்: ஒரு வித்தியாசமான விளக்கம் - சத்குரு 

'நான்கு அரியர்களை வைத்துஇருக்கும் என் மாணவன், யாரோ ஒரு பெண்ணுக்காக மூன்று மணி நேரம் தெருவில் காத்திருப்பதைக் கவனித்தேன். நன்றாகப் படிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தைவிட, ஒரு பெண் பின்னால் சுற்றும் ஆர்வம்தானே அவனுக்கு அதிகமாக இருக்கிறது? இன்றைக்கு இளைஞர்களைச் செலுத்தும் ஒரே சக்தி காதலாக இருப்பது ஆரோக்கியமான நிலையா? ஒரு துறவியிடம் கேட்கிறேனே என்று தப்பாக நினைக்காதீர்கள்!' என்று அண்மையில், கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

'நான் துறவி அல்ல; முழுமையான காதலன்!' என்று சிரித்தேன். நான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தபோது, எங்களுக்கு ஓர் ஆசிரியை இருந்தார். ஆங்கிலக் கவிதைகள் பற்றிப் பாடம் நடத்துவார். சரியாகப் புரிந்துகொள்ளாத மாணவர்களைப் பார்த்து, 'காதல் இல்லாமல் கல்லைப்போல் உட்கார்ந்தால், கவிதை எப்படிப் புரியும்? போய், மகாராணி காலேஜ் முன்னால் நின்று பாருங்கள். காதல் வந்தால் கவிதையும் தானே வரும்' என்பார்.

ஈஷா நடத்தும் பள்ளிக்கூடத்தில், ஜூன் மாதத்தில் திடீர் என்று மழை பிய்த்துக்கொண்டு கொட்டியது. பள்ளி ஆசிரியர்கள் பெரிய பெரிய பாடத் திட்டங்களுடன் வந்து என்னைச் சந்தித்தார்கள்.

'நான் ஒரு குழந்தையாக இருந்தால், இப்படி எல்லாம் வகுப்பு நடத்தும் பள்ளிக்குப் போகவே மாட்டேன். குழந்தைகளைச் சும்மா காட்டுக்குள் கூட்டிப்போங்கள். ஆற்றில் விளையாடட்டும். மழையில் நன்றாக நின்று நனைந்து ஊறட்டும். அதன் பிறகு அழைத்து வாருங்கள்' என்றேன்.

குழந்தைகள் குதூகலமாக மழையில் விளையாடினார்கள். போதும் என்று தோன்றிய பிறகு, உள்ளே வந்தார்கள். இப்போது அவர்களிடம் மழை பற்றி உணர்வுபூர்வமாக ஓர் ஆர்வம் வந்துவிட்டது. மழையின் மீது பிறந்த காதல், அதுபற்றிய விஞ்ஞானத்தை அறிந்துகொள்வதிலும் வந்துவிட்டது. மழையின் புவியியல் பின்னணி என்ன? உயிர்களுக்கும் மழைக்குமான தொடர்பு என்ன? மழையை வைத்து நம் நாட்டின் வரலாறு, கலாசாரம், பொருளியல், ரசாயனம், சமூகவியல் என்று அனைத்தைப்பற்றியும் அவர்களிடம் பேச முடிந்தது.

எதன் மீதாவது ஆர்வம் வந்துவிட்டால், அதுபற்றி அறிந்துகொள்ளாமல் தூங்க முடிவது இல்லை. அந்த ஆர்வத்தைத் தூண்டிவிடாமல், பாடப் புத்தகங்களை எழுதினால், தொட்டுப் பார்க்கவே பிடிக்காமல் போகிறது. தொட்டுத் திறந்தாலே... தூக்கம்தான் வருகிறது.

இது எப்படி மாணவனின் தப்பாகும்? பாடப் புத்தகத்தை ஒரு காதல் கதை மாதிரி எழுதி இருந்தால், ஏன் படிக்காமல் தவிர்க்கப்போகிறார்கள்? அறிவியலையும், வரலாற்றையும், கணிதத்தையும் காதலுக்குரிய சுவாரஸ்யத்தோடு எழுதக் கூடாதா? காதலை கெமிஸ்ட்ரி என்பவர் கள், கெமிஸ்ட்ரியைக் காதலாகத் தர முடியாதா? பாடத்தின் மீது காதல் பிறப்பதுபோல் அமைக் காத கல்வி முறையின் மீதுதானே அடிப்படைத் தவறு?

கொஞ்சம் ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால், காதல் என்பது ஒரு மனிதனுக்கு ஆழமான, மகிழ்ச்சியான, ஆனந்தமான உணர்வாக இருக்கிறது. இந்த உணர்வை ஏதோ ஒரு காரணம் தூண்டிவிடுகிறது.

ஆங்கிலத்தில் அழகாக 'Falling in Love’ என்று சொல்வார்கள். காதலில் ஏற முடியாது, இறங்க முடியாது. நிற்க முடியாது, பறக்க முடியாது. விழத்தான் முடியும். 'நான்' என்ற தன்மை கொஞ்சம் நொறுங்கிக் கீழே விழுந்தால்தான், காதல் பிறக்க முடியும்.

சென்ற கணம் வரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் ஹீரோ. காதல் வந்துவிடட்டுமே, உங்களைவிட இன்னொருவர் முக்கியமாகி விடுகிறார். எப்போது இன்னோர் உயிர் நம்மை விட முக்கியமாக ஆகிவிட்டதோ, அதற்குப் பெயர்தான் காதல்.

கல்லூரி நண்பர்கள் சிலர் பல வருடங்கள் கழித்து தங்கள் புரொஃபசர் வீட்டில் சந்தித்தனர். எங்கெங்கோ சுற்றிவிட்டு பேச்சு அவர்களுடைய காதல் வாழ்வு பற்றித் திரும்பியது. ஒவ்வொரு நண்பரிடத்திலும் ஏதோ ஓர் ஏமாற்றம், ஏதோ ஒரு வருத்தம்.

புரொஃபசர் ஒரு ஜாடியில் தேநீர் கொண்டுவந்து வைத்தார். 'அந்த அலமாரியில் நிறையக் கோப்பைகள் இருக்கின்றன. உங்களுக்குப் பிடித்த கோப்பையில் தேநீரை எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார்.

பீங்கான் கோப்பை, கண்ணாடிக் கோப்பை, வெள்ளிக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள். நண்பர்கள் ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்து தேநீர் நிரப்பி அமர்ந்ததும், புரொஃபசர் சொன்னார்...

'சாதாரணமான மண் கோப்பைகளை யாரும் எடுக்கவில்லை. விலை உயர்ந்த அழகான கோப்பைகளைத்தான் நீங்கள் எல்லோரும் எடுத்திருக்கிறீர்கள் என்பதைக் கவனித்தீர்களா? கோப்பையைக் கையில் வைத்திருக்கப்போகிறீர்கள். அவ்வளவுதான். தேநீர்தான் உள்ளேபோய் உங்களுடன் ஒன்றாகப்போகிறது. ஆனால், உங்கள் கவனம் கோப்பையில் நின்றுவிட்டது.

எனக்கு என்ன கிடைத்தது, அடுத்தவருக்கு எந்தக் கோப்பை போய்விட்டது என்பதில் சிந்தனை போய்விட்டதால், தேநீரின் உண்மை யான ருசியைக் கவனிக்கத் தவறுகிறீர்கள். காதலும் அப்படித்தான். அந்த அற்புதமான உணர்வு கொண்டுவரும் ஆனந்தத்தை வெளித் தோற்றங்களுடன் தொடர்புபடுத்தி, ருசிக்கத் தவறுகிறீர்கள்... வேதனையில் அல்லாடுகிறீர்கள்!’

உண்மைதான். மாட்டுக்குக்கூடக் காதல் இருக்கிறது. கழுதைக்குக்கூடக் காதல் இருக்கிறது. புழு, பூச்சிக்கும் காதல் இருக்கிறது. காதலிக்கத் தெரியாதவர்கள் அதற்கும் கீழே இருப்பவர்கள். காதல் என்பது மிக ஆழமான ஈடுபாடு. துறவறம் பூணுபவர்கள் காதல் அற்றவர்கள் அல்ல... குறிப்பிட்ட நபரோடு மட்டும் பிரியத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், அவர்களுக்கு எல்லாவற்றின் மீதும் காதல் வந்துவிட்டது என்று அர்த்தம்.

வாழ்க்கை என்றாலே காதல்தான். நீங்கள் சுவாசிக்கும் காற்றைக் காதலோடு கவனியுங்கள். நமக்குள் போய், நம்மில் ஒரு பாகமாகவே மாறும் உணவைக் காதலோடு புசியுங்கள்.

காதலாக இருக்கும்போது, உங்களுடைய உணர்வு இனிப்பாக இருக்கிறது. உயிர் போனாலும் சரி என்ற ஆனந்த உணர்வு நிறைகிறது. ஒரே ஒருவராலேயே இவ்வளவு கிடைக்கும் என்றால், எல்லா ஜீவராசிகளிடமும், ஜீவனுக்கு மூலமாக இருக்கிற காற்றிடமும், மண்ணிடமும், கல்லிடமும், செடியிடமும் காதல்கொண்டால், எப்பேர்ப்பட்ட அளவில்லாத ஆனந்தம் கிடைக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். மலை, நதி, பூ, புல்வெளி, பட்டாம்பூச்சி, ஆடு, மாடு என்று காணும் ஒவ்வொன்றின் மீதும் காதல்கொள்ளலாம்.

காதலிப்பது கையில் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால்தான், பிரச்னை. அதைத் தவிர்த்துவிட்டால், கடலின் மீதும், ஆகாயத்தின் மீதும், நிலவின் மீதும்கூட உண்மையான காதல்கொள்ளலாமே? அந்த உணர்வை உங்களிடம் இருந்து யாரால் தட்டிப் பறிக்க முடியும்?''

Tuesday, 10 July 2012


இளைஞன் கலக்கமே என்று நம்மில் சிலரும், இல்லை இல்லை அவன் களங்கரை விளக்கமே என்று மேலும் சிலரும் வாதிட்டுக் கொண்டிருக்க இங்கே சத்குரு, "இளைஞர்கள் எப்போதும் ஓர் உயர்ந்த சக்தி நிலையில் இருப்பதால், அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலோ, தூண்டுதலோ கிடைக்கவில்லையென்றால், அவர்களது சக்தி எளிதில் எதிர்மறையாகிவிடும்," என்கிறார்.

இந்த உலகத்தில் ஏதாவது ஆக்கப்பூர்வமான வேலைகள் நடக்க வேண்டுமானால், அது இளைஞர்களால்தான் முடியும். ஏதாவது நாசகரமான வேலைகள் நடக்க வேண்டுமானாலும், அதுவும் இளைஞர்களால்தான் முடியும்.
ஏனென்றால், அவர்கள் மிகவும் உயிர்ப்புடனும் துடிப்புடனும் இருக்கின்றனர்.

இன்றைய இளைஞர்கள் உயிரோட்டத்தோடும், சிறந்த லட்சியங்களோடும், சிறந்த ஊக்கத்துடனும் இருக்கிறார்கள். இந்த உலகம் இளைஞர்களால் வழிகாட்டப்படுமானால், வாழ்வதற்கு இன்னும் சிறந்த இடமாக அமையும் என்பதே உண்மை. ஆனால், அவர்கள் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் சற்று மிகைப்படுத்திச் செய்துவிடுகிறார்கள் என்பதும் உண்மை.

வயதான தலைமுறையினர், இன்றைய இளைஞர்களை ஏதோ சிகிச்சை தேவைப்படுகிற நோயாளிகளைப்போல கருதுகிறார்கள். அது உண்மை அல்ல. வாழ்க்கையைவிட்டு மிகவும் விலகிப் போய்விட்ட மனிதர்களுக்குத்தான் சிகிச்சை தேவை. இளைஞர்களோ, வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். இளைஞர்கள் எப்போதும் ஓர் உயர்ந்த சக்தி நிலையில் இருப்பதால், அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலோ, தூண்டுதலோ கிடைக்கவில்லையென்றால், அவர்களது சக்தி எளிதில் எதிர்மறையாகிவிடும்.

நமது கல்விமுறை 100% தகவல் அளிப்பதாகத்தான் இருக்கிறது. அது ஒரு தூண்டுகோலாக, ஊக்கம் கொடுப்பதாக இல்லை. ஊக்குவிப்பவர் இல்லையென்றால், ஒரு மனிதன் அவனுடைய எல்லைகளைத் தாண்டி உயர முடியாது. வெறும் தகவல் தேவை என்றால், ஓர் ஆசிரியர் சிறந்தவராக இருக்க முடியாது. புத்தகங்களும், இணையத்தளமும் இந்த வேலையை இன்னும் சிறப்பாகச் செய்யும்.

ஓர் ஆசிரியரின் பங்கு, ஒரு மாணவரை கற்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும். அறிவுக்கான தாகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆசிரியரின் பங்கில் ஏதாவது பொருள் இருக்கும்.

கல்விமுறையை முற்றிலும் தகவல் தொடர்புடையதாய் செய்திருப்பது நம் நாட்டில் ஏராளமான சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வாழ்க்கையில் இளைஞராய் இருக்கும்போது, பல விஷயங்கள் செய்யக்கூடியவராய் இருக்கும்போது, அவர்களுக்குத் தேவையான தூண்டுகோல் இல்லாமல் போய்விட்டால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் வாழ்க்கையின் முக்கியக் காலம் பயனற்றுப் போய்விடும்.

இளைஞர்களுக்குத் தேவையான தூண்டுகோலாக இருப்பதற்கு உங்களுக்குப் பெரிய பொறுப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பொறுப்பு உணர்ச்சியும், அர்ப்பணிப்பு உணர்வும் இந்த உலகத்தில் ஒரு பற்றாக்குறைப் பொருளாய் ஆகிவிட்டது. எல்லோரும் ஒரு நாளில் கோலாகலமாக விழா ஒன்று நடத்தி இளைஞர்களை அற்புதமான நிலைகளுக்கு ஊக்குவிப்பது பற்றியே நினைக்கிறார்கள். ஆனால் இது இவ்வாறு நடக்காது. இது ஒரு வாழ்க்கை முழுவதும் நடக்க வேண்டிய விஷயமாகும். இன்றைக்கு ஒன்று செய்துவிட்டு, எல்லாம் முடிந்துவிட்டது என்று வெறுமனே இருந்துவிட முடியாது.
இது ஒரு செடியைப் பேணி வளர்ப்பதுபோல. அது ஒரு நாள் பழம் கொடுக்க வேண்டுமானால், நீங்கள் அதை தினமும் பேணி வளர்க்க வேண்டும். அதற்குத் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். தினமும் அதனைப் பாதுகாக்க வேண்டும். இந்த அர்ப்பணிப்பு உணர்வு வயதானவர்களுக்கு இருக்குமானால், இளைஞர்களால் பல அற்புதமான செயல்களைச் செய்ய முடியும். இந்த அர்ப்பணிப்பு உணர்வு பெரியவர்களிடம் இல்லாததால்தான், இளைஞர்கள் திசைமாறி, என்ன செய்வதென்றே தெரியாமல் தங்களுக்குத் தோன்றியதை எல்லாம் செய்து வருகிறார்கள். பொறுப்பில் உள்ளவர்கள் குறுகிய கால இலக்குகளை நோக்கிச் செயல்படுவதால், இளைஞர்களும் குறுகிய கால இலக்குகளை நோக்கிச் செயல்படுகிறார்கள்.

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும், மனிதர்களின் நலன் குறித்துத்தான் அக்கறை கொண்டு உள்ளார்கள். ஆனால், ஒவ்வொருவரும் மனித நலன்பற்றி வெவ்வேறு அளவுகளில் அக்கறை கொண்டுள்ளார்கள். ஒருவருக்கு மனித நலன் என்பது அவரும் அவரது குடும்பமும். இன்னொருவருக்கு அவரும் அவரது நாடும். மற்றொருவருக்கோ மனித நலன் என்பது இந்த முழு உலகமும் உள்ளடங்கியது. ஒரு குற்றவாளியோ அல்லது ஒரு திருடனோ அவரும் மனித நலன் குறித்துத்தான் அக்கறைகொண்டு இருக்கிறார். ஆனால் அவர், மனித நலன் என்றால் தனது நலன்தான் என்ற கருத்தில் இருக்கிறார்.

அதனால் இளைஞர்கள் மற்றும் எல்லோரிடமும் ஒரு பெரிய மாற்றம் வர வேண்டும். ஒவ்வொருவருடைய எண்ணமும் தன்னைப்பற்றி மட்டுமல்லாமல் அது இந்த முழுச் சமூகத்தையும், முழு உலகத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, இது நமது கல்விமுறையில் காணாமல் போய்விட்டது. நவீனக் கல்விமுறை, மக்களைத் தொடர்ந்து தங்களைப்பற்றி மட்டுமே நினைத்துக்கொள்ளப் பயிற்சி அளிக்கிறது. இந்த முழு விஞ்ஞானச் செயல்முறையே, எப்படி எல்லாவற்றையும் நமது இன்பத்துக்கும், நலத்துக்கும் உபயோகப்படுத்துவது என்பதில்தான் இருக்கிறது. இந்த மனப்பாங்கு புதிய கல்விமுறையால் ஆழமாகச் செய்யப்பட்டுவிட்டது.

தகவல் அறிவைக் கொடுப்பதற்காக எப்படி நமது நேரம், வளங்கள் மற்றும் சக்தி முதலியவற்றை முதலீடு செய்கிறோமோ அவ்வாறே நமது இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும் நமது நேரம், வளங்கள் மற்றும் சக்தி முதலியவற்றை முதலீடு செய்ய வேண்டும். இது நடந்துவிட்டால், நமது உலகம் உண்மையிலேயே ஓர் அழகான இடமாக மாறும்!
ஈஷாவுடன் திருக்கயிலாயம்-2
பசுபதிநாத் திருத்தலம்
பரவசமான நாள் அது!

மண்ணை மீட்டும் மழை போல, மனதை மீட்டும் இசைபோல, இயற்கை விரிந்து கிடக்கிறது இமயமலையாக!

சூரியச் சுடரொளியில் பனிப் பிரதேசமே பளபளக்க, பிரணவ மந்திரப் பேரொலி நிறைந்திருக்கிற வெளி. பிறப்பின் சூட்சுமமும் பிரபஞ்சத்தின் ரகசியமும் அறிய விரும்புகிற, உணர விழைகிற சாதுக்களும் சந்நியாசிகளும் உலவுகிற பூமிக்குள் நுழையப் போகிறோம்.

எங்கெங்கிருந்தோ வந்து குவிந்த வெவ்வேறான மனிதர்கள் ஒரு குழுவாக, குடும்பமாக உணர்ந்த நிலையில் தொடங்குகிறது பயணம்.

ஆன்மிக தாகத்தில் இரண்டு மிடறு தண்ணீர் கிடைக்குமா என்று ஏங்கிக்கொண்டு இருந்தவர்களுக்கு நடுவில் இயற்கையைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் அருவி மாதிரி கொட்டிக்கொண்டு இருந்தார் சத்குரு.

பசுபதிநாத் திருத்தலத்தைப் பற்றி கருத்து விருந்து வைத்தார் அவர்.

‘‘நம்ப முடியாத அற்புதங்கள் நிகழ்ந்த திருத்தலம், பசுபதிநாத்.
கோடானுகோடி சிவத்தலங்களில் தலைசிறந்தது இது. ‘பசு’ என்றால் உயிர். ‘பதி’ என்றால் கடவுள்.

நான்கு திசைகளிலும் நான்கு திருமுகங்களை உடைய இந்தத் திருத்தலத்தின் லிங்கம் மிகச் சிறப்புடையதாகும்.

கிழக்குத் திசை நோக்கிய முகத்துக்கு ‘தத்புருஷா’ என்று பெயர்.

மேற்கு நோக்கிய திருமுகம் ‘சத்யோஜதா’,

தெற்கு நோக்கிய முகம் ‘அகோரா’,

வடக்கு நோக்கிய முகம் ‘வாமதேவா’.

இந்த நான்கு திசைத் திருமுகங்களும் நான்குவிதமான பரிமாணங்களுடையது. நான்கு வேதங்களின் அடிப்படையே, பசுபதிநாத் லிங்கத்தின் நான்கு முகங்களும்.

இந்தத் திருத்தலத்தின் வரலாறு சொல்லும் புராணங்களில் முக்கியமானது, பாண்டவர்கள் தங்கள் பாவங்களைப் போக்க சிவனைத் தேடிய புராணம்.

சொந்தச் சகோதரர்களின் ரத்த வெள்ளத்தில்தான் பாண்டவர்களின் வெற்றி மிதந்து வந்தது. ஊரை, உறவை, மக்களை, பெரியோர்களை, நல்லோர்களைக் கொன்று குவித்த பாவக் கறையை உண்டாக்கிக் கொண்டனர் பாண்டவர்கள்.

சொந்தச் சகோதரர்களுக்குள் நிகழும் இத்தகைய போரை ‘கோத்ராவதா’ என்று குறிப்பிடுவர். அந்தப் பாவக் கறையைக் கழுவ, தங்கள் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட விரும்பிய பாண்டவர்கள், சிவனருளை வேண்டி நின்றனர்.

சொந்த சகோதரர்களைக் கொன்று குவித்தவர்களுக்கு அவ்வளவு எளிதில் பரிகாரம் தர விரும்பாத சிவன் தன்னை ஒரு காளையாக உருமாற்றிக்கொண்டு அவர்களுக்குத் தரிசனம் தராமல் மறைந்தார்.

காளையுருவேற்ற சிவன் தன்னைப் பூமியின் அடியில் புதைத்துக்கொண்டதோடு, பூமியின் பல்வேறு இடங்களில் தன்னை தனித்தனி உறுப்புகளாக வெளிப்படுத்தினார்.

காளை உருவமேற்ற சிவனின் முதுகுப்பகுதி வெளிப்பட்ட இடம்தான் புகழ்பெற்ற ‘கேதார்நாத்’ திருத்தலம்.
புராணங்களின் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. திறந்த மனதுடன் திருத்தலத்தில் இருந்தாலே போதுமானது.
கேதார் போகிற வழியில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற ‘துங்கநாத்’ திருத்தலத்தில் முன்னங்கால்கள் வெளிப்பட்டன.

இமாலயத்தில் மிக சக்தி வாய்ந்த மணிப்பூரக லிங்கம் இருக்கிற ‘மத்திய மஹேஷ்வர்’ திருத்தலத்தில் தொப்புள் பகுதி வெளிப்பட்டது.

உடலின் பல்வேறு பாகங்களின் கலவையாக சிவன் வெளிப்பட்ட இடம் ‘கல்பநாத்’.

இதுபோன்று சிவனின் நெற்றி வெளிப்பட்ட இடமே ‘பசுபதிநாத்’ திருத்தலம்.

மனித உடலியக்கத்துக்குக் காரணமான ஏழு சக்கரங்களுக்கும் இந்தத் திருத்தலங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு.

இத்திருத்தலங்கள் உயிரோட்டமுள்ள உடலாகவே அமைக்கப்பட்டுள்ளன. அந்த உயிரோட்டத்தை உணர்வதே அற்புதமான அனுபவம்.

ஏழு சக்கரங்களுடன் ஒரு முழு உயிராய் உள்ள தியானலிங்கத்தைப் போன்றே இத்திருத்தலங்களின் மையங்களும் அமைந்துள்ளன. உயிரோட்டத்துக்குக் காரணமான ஏழு சக்கரங்களையும் முறையான வரிசைப்படி, ஒரு மையத்திலிருந்து இன்னொரு மையத்துக்கு பயணிப்பது மகா அற்புதமான வாழ்வியல் அனுபவம்.

பசுபதிநாத், துங்கநாத், கேதார்நாத் ஆகிய மையங்கள் இன்றும் உயிரோட்டமுடன் உள்ளன. இந்த மையங்களை உயிரோட்டத்துடன் தக்கவைத்துக்கொள்ளவும் பாதுகாக்கவும் மிகவும் பிரயத்தனம் தேவை.

இந்தப் புராணங்களின் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. திறந்த மனதுடன் இந்தத் திருத்தலத்தில் இருந்தாலே போதுமானது. இங்கே எப்படி அமர வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி உங்களுக்கு வழிகாட்டப்படும். பரவசமான அனுபவத்தைப் பெறுவதற்கு மட்டும்தான் நீங்கள் தயாராக வேண்டும்.’’

வழிகாட்ட சத்குரு எழுந்து நின்ற அந்த வினாடிகளில், வீணையை மீட்டியது போல எங்கும் வழிந்தது பரவசம்!

மீண்டும் பயணிப்போம்
இந்த உலகில் நிறையப் பேருக்கு, மனதின் நினைவுத்திறன் – அது எந்த மாதிரியான நினைவுகளாக இருந்தாலும் சரி – மிகவும் குறைவாகவே இருப்பதைப் பார்க்கிறேன். ஆனால் அவர்களுக்கு உடலின் நினைவுத் திறன் அபாரமாக இருக்கிறது. 

உங்கள் உடல் அனைத்தையும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் கொள்ளுப் பாட்டியின் மூக்கு இப்போது உங்கள் முகத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கொள்ளுப் பாட்டியை உங்கள் உடல் நினைவில் வைத்திருக்கிறது. உங்கள் உடல் அதை மறக்கவில்லை. ஆனால் அந்த கொள்ளுப் பாட்டி யார் என்பது உங்கள் மனதுக்குக் கண்டிப்பாகத் தெரியாது என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்.

உங்கள் மூதாதையர்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் எப்படித் தோற்றமளித்தார்கள் என்பது இப்போதும் உங்கள் உடலுக்குத் தெரியும், ஆனால் உங்கள் மனதுக்குத் தெரியாது.

குறிப்பிட்ட இயல்புகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு, தலைமுறைக்குத் தலைமுறை தொடர்ந்து எடுத்துச் செல்வதில் உங்கள் மனதை விட உங்கள் உடல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்று ஒரு விதமாகவும், நாளை இன்னொரு விதமாகவும் உங்களால் சிந்திக்க முடியும். ஆனால் இன்று ஒரு விதமாகவும், நாளை இன்னொரு விதமாகவும் உங்களால் தோற்றமளிக்க முடியுமா? முயற்சித்துப் பாருங்கள் பார்ப்போம். ஒரு சிறிய உடல் தோற்றத்தை மாற்றுவதற்குக் கூட மிகத் தீவிரமான சாதனா தேவை.

அதனால்தான் யோகாவின் பெரும்பகுதி உடலுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. இன்றைய நவீனகாலத்தில்தான் மனதுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர், ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை, இன்றைக்கு நன்றாக இருக்க வேண்டும். நீண்ட கால அடிப்படையிலான நிலைமாற்றங்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை.

நிலைமாற்றம் என்றால் பழையவை எல்லாம் படிப்படியாக நீங்குவது. ஒரு நிலையிலிருந்து அதனினும் மேம்பட்ட நிலைக்கு உங்களை மாற்றுவது. ஆனால் வெறுமனே மாற்றம் என்பது அதே விஷயத்தின் மீது மீண்டும் வெளிப்பூச்சு பூசுவது.

நீங்கள் மூக்கை மாற்றுங்கள், நீங்கள் வித்தியாசமாகத் தெரிவீர்கள், ஆனால் உங்களுக்குள் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. அதே போல் அணுகுமுறையை மாற்றுங்கள், திடீரென்று நீங்கள் வித்தியாசமானவராக உணர்வீர்கள். ஆனாலும் எதுவுமே மாறியிருக்காது. எனவே தேவை மாற்றம் அல்ல, நிலைமாற்றம்தான்.

எனவே சாதனா என்பது ஏதோ முகப்பூச்சுக் கலை அல்ல, அது நிலைமாற்றத்துக்கான விஞ்ஞானம். நாம் அடிவேர்களையே நிலைமாற்றுகிறோம்.

சாதனா என்பது உங்கள் நினைவு அடுக்குகளிலிருந்து உங்களை விடுவிக்கக் கூடிய ஒரு கருவி. ஒருவருக்குள் இந்த நிலைமாற்றம் நிகழ வேண்டுமென்றால் அவருக்குள் இந்த நினைவு அடுக்குகளைத் தளர்த்துவது முக்கியம். இல்லாவிட்டால் உங்கள் தாத்தாக்களும், பாட்டிகளும், அவர்களுடைய அப்பாக்களும், அம்மாக்களும், உங்கள் மூலமாக வாழ்வதற்கு முயற்சிப்பார்கள். இறந்தவர்கள் மிகவும் பேராசைக்காரர்கள்.

இறந்தவர்களை நீங்கள் இறந்தவர்களிடமே விட்டுவிட வேண்டும், இல்லையென்றால் அவர்கள் பூமிக்குள்ளிருந்து முளைத்து வந்து உங்கள் மூலமாக வாழ்வார்கள். அப்படி அவர்கள் வாழ்வதற்கு விடக் கூடாது.

உங்கள் மூலமாக வாழ அவர்களை நீங்கள் விட்டுவிட்டால், பிறகு உங்கள் வாழ்க்கை எதைப் பற்றியது என்பதை நீங்கள் அறியாமலே போய்விடுவீர்கள்.

உங்கள் அமைப்புகளின் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கு அவர்களை நீங்கள் அனுமதித்தால், பிறகு நீங்கள் கட்டாயங்களின் குவியலாக, பலவிதமான கட்டாயங்களுக்கு உட்பட்டு செயல்படுபவராக ஆகிவிடுவீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே பல வழிகளிலும் அவர்களைப் போலவே வாழ்வீர்கள்.

உங்களுடைய குணாதிசயங்களை ஆராய்ந்து பார்த்தால், உங்கள் பெற்றோரைப் போலவே நீங்கள் பல விஷயங்களைச் செய்வதைப் பார்ப்பீர்கள்.

உங்களுக்குப் பதினெட்டு வயதாக இருந்தபோது, ‘என் பெற்றோரைப் போல நான் இருக்கவே மாட்டேன்’ என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு நாற்பத்தி ஐந்து வயதானபோது, உங்கள் அம்மாவைப் போலவே உட்காருவீர்கள், அவரைப் போலவே பேசுவீர்கள், அவரைப் போலவே நடந்து கொள்வீர்கள். இது போன்ற விஷயங்கள் இப்போதும் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்றன.

உங்கள் அம்மா மட்டுமல்ல – உங்கள் கொள்ளுப் பாட்டி, எள்ளுப் பாட்டியும் கூட தங்களது குணங்களை உங்கள் மூலம் வெளிக்காட்டுகிறார். அதனால் இறந்தவர்கள், இறந்தவர்களாகவே இருக்கட்டும். அதுதான் வாழ்வதற்கான வழி.

உயிருடன் இருப்பவர்கள் இன்னும் அதிக உயிர்த்துடிப்புடன் இருக்க வேண்டும். இறந்தவர்கள் இறந்தவர்களாகவே இருக்க வேண்டும்.

எனவே சாதனாவில் உடலைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

உடல் என்றால் அது வெறும் எலும்புகளும், சதையும் மட்டுமல்ல. இது ஐந்தடுக்குகளைக் கொண்ட ஓர் உடல். இந்த ஐந்து அடுக்குகளின்1 மீதும் சாதனா செயல்படுகிறது.

உடலின் முதல் மூன்று அடுக்குகளுக்காக நாம் சில பயிற்சிகளை உங்களுக்குக் கற்றுத் தர முடியும், அதை நீங்கள் தொடர்ந்து செய்து வரலாம். ஆனால் உடலின் மற்ற பரிமாணங்களை உங்களால் தொட முடியாது.

பிரச்சனையெல்லாம் நீங்கள் அறிந்திடாத பகுதிகளிலேயே உள்ளது என்பேன். நீங்கள் அறிந்த பகுதிகளுடன் போராடுவதை முதலில் நீங்கள் நிறுத்த வேண்டும். உங்கள் மனோநிலை, உங்கள் உணர்ச்சிக் குப்பைகள்தான் நீங்கள் அறிந்த பகுதிகள். இவற்றை நீங்கள் சமாளித்துதான் ஆக வேண்டும், நீங்கள்தான் கையாள வேண்டும்.

உங்களுக்குப் பிரச்சனை தருவது நீங்கள் அறியாத பகுதிகள்தான். அவற்றைக் கையாள்வதற்குத்தான் உங்களுக்கு என்னுடைய உதவி தேவை
கடலோரப் பகுதிகளில் முந்திரி மரங்கள் பயிரிடப்பட்டன. தென்மாவட்ட வழக்கில் கொல்லாமரம், கொல்லாவு, கொல்லமாவு என்றெல்லாம் அழைக்கப்படும் இம்மரத்தினை வட மாவட்டங்களில் முந்திரிமரம் என்று மட்டுமே கூறுகின்றார்கள். கொல்லம் வழியாகக் கப்பலில் வந்ததால் இதன் விதையானது கொல்லாங்கொட்டையாகவும், பழம் கொல்லாம் பழமாகவும், மரம் கொல்லாமரமாகவும், முந்திரி விவசாயம் செய்பவர்கள் நம்புகின்றனர். அது மாமரம் போல செழித்து வளர்வதால் கொல்ல மாவு என்ற திருநாமமும் பெற்றது.
முந்திரி மரம் இருவித்திலை (dicotyledonous) தாவரப் பிரிவைச் சார்ந்தது. இதனைத் தமிழ் மொழியில் ‘முந்திரி; வங்காள மொழியில் ஹிஜிலி-பாதம்(Hijili-badam)ஹிந்தியில் காஜ்ஜு(kaaju) தெலுங்கில், ஜிடி.மமிடி, முந்த-மமிடி,(Jidi-mamidi, Muntha-mamidi) கன்னட்த்தில் ஜூருபிஜ்ஜா (Geeru bijja), மலையாளத்தில் அண்டி பருப்பு(Andiparupppu) என அழைக்கின்றனர். முந்திரி நல்ல பணப்பயிர் ஆகும். உடையார்பாளையம் வட்டர முந்திரி சாகுபடி விவசாயிகளிடம் நேரடி தகவல் திரட்டப்பட்டு இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் Cashew nut என்று அழைக்கப்படும். இம்மரமானது 15 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. நேராக மேல்நோக்கி வளர்வதை விட, அடர்த்தியாகப் பரவி, கிளைகள் பின்னிப்பிணைந்து, தரையை நோக்கிப் படர்ந்து, குடைபோல வளர்கின்றது. இம்மர உச்சியிலிருந்து விழுந்தாலும் எளிதில் யாருக்கும் உயிர்ச் சேதம் இல்லை. அறிவியல் ரீதியாக அனகார்டியம் ஆசிடென்டலே (Anacardium Occidentale) என்று அழைக்கப்படும். இந்த மரமானது அனகார்டியேசியே (Anacardiaceae) குடும்பத்தைச் சேர்ந்ததாகும். பிரேசில் நாட்டின் வட கிழக்குப் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இம்மரம் போர்ச்சுகீசியர்களால் பரப்பப்பட்டு, இப்போது, பெரும்பாலும் நிலநடுக்கோட்டு வெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாக வளர்க்கப்பட்டு வருகின்றது. முந்திரி மரத்தைப் போர்ச்சுகீசியர்கள் 16-ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தினார்கள்.

முந்திரி மரம் மற்றும் அதில் விளையும் பருப்புகளுக்கு எதிர்காலத்தில் அதிக விலையில் விற்கப்படும் என அவர்கள் நினைத்திருக்க முடியாது. பின்பு கேரளாவில் மண் அரிப்பைத்தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த மரங்கள் நடப்பட்டன. இன்று தமிழகம் முழுவதும் செம்மண், பொட்டல்மண் நிறைந்த பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. மேலும், மருத்துவக் காரணங்களுக்காக இந்த மரங்கள் நடப்பட்டதாகவும் சில தரப்பில் கூறப்படுகிறது.
போர்ச்சுகீசியர்கள் செய்த செயலால், இன்று முந்திரி பருப்பு ஏற்றுமதியில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகி இருக்கிறது. தற்போது முந்திரி மரம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றன. முந்திரி மரத்தின் சொந்த நாடு பிரேசில். அங்குள்ள கடற்கரைப்பகுதிகளில் முந்திரி மரங்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. மனித உடலில் உள்ள சிறுநீரகம் போன்ற வடிவில் இருக்கும். முந்திரிப் பருப்புகள் மாம்பழ மர இனத்தைச் சேர்ந்தவை. இந்தியாவிலும், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்கள், முந்திரிப்பழங்களையும், முந்திரிக் கொட்டையில் இருக்கும் பருப்பையும் சாப்பிடுகின்றனர். முந்திரிப்பழங்கள் சாராயம் வடிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த நூற்றாண்டில் தான் முந்திரிக்கொட்டை மற்றும் பருப்பின் மீதான கவனம் சர்வதேச நாடுகளில் அறிமுகமானது.

முந்திரிக்கொட்டையின் தோற்றம்:
முந்திரி மரம் மிக வேறுபட்ட கனிகளை தருவதாகும். இக்கனிகள் பூவிலிருந்து முதலில் உருவாகும். (அதனால் தான் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தாதே என்னும் பழமொழியும் தமிழில் சொல்லப்படுகின்றது). எல்லா வகைப் பழங்களிலும் கொட்டை அல்லது விதை பழத்தின் உட்பகுதியில் இருக்கும். ஆனால் முந்திரிப் பழத்தின் கொட்டை பழத்தின் வெளிப்பகுதியில் பழத்தோடு ஒட்டியிருக்கும். முந்திரி கொட்டை முன்பகுதியிலும் பழம் பின்பகுதியிலும் இருக்கும். அதன் பின்புறம் பார்க்க அழகாகத் திரண்டு நமக்குக் கிடைக்கும் கனியானது பொய்க்கனி என்று அழைக்கப்படுகிறது. மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு வண்ணங்களில் காணப்படும் இந்தப்பொய்க்கனியின் சுவை மற்றும் கொட்டையின் அளவுக்கேற்ப மக்களிடம் வரவேற்பு அதிகம். இந்தக் கொட்டையிலுள்ள பருப்பின் சுவையால் கவரப்பட்ட கப்பல்காரர்கள், தாங்கள் வந்த கப்பலையே விற்று வாங்கித் தின்றதாக ஒரு நாட்டுப்புறக் கதையும் உண்டு.
கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தஞ்சைக் கோயில் பிரதானமான அல்லது மிக முக்கியமான இயல்புகளை ஆனால் அந்த இயல்புகளை வேறு ஒரு வகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில், வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும், அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும், தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியின்நீரைச் சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தியில் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது மலேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது.

இந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகள் அப்படியே சோழறின் வாழ்வை பிரதிபலிப்பதாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு அரசன் செய்த சாதனைகள் தந்தையின் புகழில் மறைந்துவிட்டது.

தந்தையைவிட அதிகம் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் அவன் கட்டிய கோவிலில் தெரிகின்றது.

கங்கைகொண்ட சோழபுரம் UNESCOவால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கபட்டுள்ளது!!