Monday, 30 April 2012

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

ஆதிமனிதன் எப்போது பார்த்தாலும் அதிகமாக பயந்து கொண்டிருந்தான். வானில் திடீரென்று தோன்றும் வெளிச்சக்கீற்றுக்கள்,தடதடவென்று ஓசையுடன் அருவியாக பொங்கி வரும் தண்ணீர்,அளவிடமுடியாத நீல வானத்தின் பரப்பு,கணக்கிடமுடியாத நட்சத்திரங்கள்,எல்லைகள் தெரியாத அலைகடல் ஆகியவற்றைப் பார்த்து அவன் மிரள ஆரம்பித்தான்.பரந்து விரிந்ததே பிரபஞ்சம் அதில் நாம் ஒரு தூசிதான் என்று எண்ணினான். அதனால் தனக்குப் புரியாத அந்த இயற்கையின் சக்திக்கு முன் பணிந்து தன்னை பாதுகாக்குமாறு வேண்டினான். மழை,சூரியன் என்று தன்னை மீறிய சக்தி எதை பார்த்தாலும் பயந்து பயந்து வணங்க ஆரம்பித்தான்.அன்று முதல் கடவுள் என்ற ஒருவர் உள்ளார் என்று அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.தொடர்ந்து பயந்து பயந்து வணங்கி வந்தமையால்தான் பயபக்தி என்ற வார்த்தை உருவாகியுள்ளது.
பிறந்ததில் இருந்தே தாயும் தந்தையும் சமூகமும் கடவுள் உண்டு உண்டு என்று சொல்லி சொல்லி வளர்த்து வந்ததால் கடவுள் உண்டு எண்பதை நீங்களும் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள்.
கோவிலுக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?கடவுளை உணர்வதற்காகவா?அல்லது வேண்டுவது கிடைக்கவேண்டும் என்பதற்காகவா?கடவுள்நம்பிக்கை என்பது பெரும்பாலும் பேராசை மற்றும் பயத்தின் அடிப்படையில் தானே வளர்க்கப்பட்டு இருக்கின்றன.
கடவுள் அன்பின் வடிவம் என்றால் அவருக்கு ஏன் பயப்பட வேண்டும்?ஒரு சிறுவிதை பூமிக்குள் விழுந்தால் பெரியமரமாக வளர்ந்து விடுகிறது. இந்த விதையில் இப்படிப்பட்ட மரம் தான் வளரும் என்று நிர்ணயித்தது யார்?உங்களை மீறிய சக்தியை கடவுளின் சக்தி என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்? அப்படிப் பார்க்கும் போது கடவுளை எங்கு இருந்து தொடங்கி ஆராய்ந்தோமோ அந்த இடத்திற்கே இப்போதும் வந்துவிட்டோம் என்பது புரிகிறது அல்லவா? ஆம் அது தான் இயற்கை.
”கடவுள் இருக்கிறார்” என்று யாரோ சொல்லிவிட்டார் என்பதற்காக கடவுளை நம்புவதும்,”கடவுள் இல்லை” என்று யாரோ சொல்லிவிட்டார் என்பதற்காக கடவுளை நம்பாமல் விடுவதும் எந்த வகையில் நியாயம்?
நீங்கள் எதை வோண்டுமானலும் செய்யுங்கள் ஆனால் அதன் பின்விளைவுகளை வேதனையில்லாமல் சந்தோசமாக ஏற்றுக்கொள்ள தயாராக வேண்டும். உங்கள் ஆசை அதிகமாக இருந்தால் அதை அடைவதற்கான பாதைகள் தானாகவே புலப்படும்.
ஆயிரம் கண்,பத்து கைகள்,ஆறுமுகம்,நான்கு தலை என்று கடவுளுக்கு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது ஏன் தெரியுமா? நம் முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள். அவற்றை தெரியாமல் வியாக்கியானம் பேசுவது அறிவீனம். உங்களுக்கே வீட்டில் ஒரு முகம் பகைவர்களிடம் ஒரு முகம் நண்பர்களிடம் ஒரு முகம் தெருவுக்கு தெரு மாற்றுவதற்க்கென்று எத்தனை முகங்கள்?அப்பிடியாயின் கடவுளை விட உங்களுக்குத்தான் அதிகமுகம் இருக்கின்றது.
வெறும் நம்பிக்கைகளை மட்டும் வைத்துப்பின்னப்படும் கற்பனைகளை எதற்காக நம்பவேண்டும்?
கடவுளை உருவமாகத் தேடாமல் கடவுள் தன்மையாக உங்களுக்குள் தேடிப்பருங்கள்.ஒரு விடயத்தை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்த தெரிந்தால் கடவுள் என்று ஒருவர் இல்லாமலும் சுகமாக வாழலா
கிணற்றுக்கோ, ஏரிக்கோ ஏன் சமுத்திரத்திற்கோ கூட நீர் எடுத்துவரச் சென்றாலும் நம் கையில் இருக்கும் பாத்திரத்தின் அளவுக்குத் தான் தண்ணீரை எடுக்க முடியும். அதுபோல, நாம் செய்யும் செயலில் நம் முயற்சிக்கு தகுந்தவாறே பலன் கிடைக்கும்.
* தொடக்கத்தில் கறையான் சிறியதாகவே தோன்றும். சிறுகச்சிறுக பெருகி, நாளடைவில் மரக்கட்டை முழுவதுமே செல்லரித்துப் போகக்கூடும். அதுபோல, தீய சிந்தனைகள் சிறிதாகவே தொடங்கும். ஆனால், முடிவில் ஒருவனை முற்றிலும் அழித்துவிடும்.
* இன்று சாப்பிட உணவை இன்றே ஜீரணம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவ்வுணவு அஜீரணம் ஆகிவிடும். அதுபோல ஒவ்வொரு நாளும் கேட்கின்ற நல்லசிந்தனைகளை அன்றைக்கே நடைமுறைப்படுத்த முயலவேண்டும். இல்லாவிட்டால் அச்சிந்தனையைக் கேட்டதில் பயனில்லை.
* சேற்றுநிலத்தை மெதுவாகப் பாயும் நீரோட்டத்தால் சரிசெய்ய முடியாது. வேகமாகவும், முழுமையாகவும், மூலைமுடுக்கெல்லாம் அடித்துச் செல்லும் வெள்ளம் போல தண்ணீர் பாயவேண்டும். அதுபோல, ஆன்மிகத்தில் சாதனை செய்ய நினைத்தால் அரைமனதுடன் இறங்கக்கூடாது. கடவுளை அடைய வேண்டும் என்ற தணியாத ஆர்வமும், தீவிரமான மனநிலையும் தேவை.

Sunday, 29 April 2012

என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!!!!!!!!


எந்த கைக்குட்டையும் தரவில்லை என் அம்மாவின் சேலையால் முகம் துடைத்த போது எனக்கு கிடைத்த இன்பத்தை எந்த போர்வையும் தரவில்லை என் அம்மாவின் சேலையால் போர்த்திய போது எனக்கு கிடைத்த இன்பத்தை எந்த குடையும் தரவில்லை என் அம்மாவின் சேலையால் குடைபிடித்த போது எனக்கு கிடைத்த இன்பத்தை அம்மாவின் சேலைப்போல் அன்பின் போர்வை ஏதேனும் உண்டா இவ்வுலகில்...? அம்மாவின் சேலைக்குள் ஒளிந்து கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிய காலத்தை மறக்கமுடியுமா...

Saturday, 28 April 2012

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம் (ஒரு விஞ்ஞான பூர்வ விளக்கம்)

ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.

ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.

இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று முன்னோர்கள் கூறினர்.

கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும்,வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.

சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன. 

இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது.

அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போது , அந்த சக்தி தூண்டப்பட்டு - கைகளை இணைத்து , மேலே உயர்த்தி வணங்கும்போது - கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது. 

இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது. கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரவுகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது.

சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும் வைக்ககூடாது.கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்.
என்றும் நீ...
என் கண்களின்
ஓவியம் - நீ
என்றும் என்னுள்
நிலையாய் வாழ்பவள் - நீ
உனைப் பிரிந்து
ஒரு நாள் - இல்லை
ஒரு கணம்
பிணமாகின்றேன்...

என்
ஒவ்வொரு சொட்டு
கண்ணீரும் - சுடும்
நீராக வெளியேறுகிறது...
அதில் - உன்
பெயர் ஒளிந்திருப்பதை
நீ அறிவாயா..?

என் இதயம்
என்னிடமில்லை
அதை உனக்கே
தந்து விட்டேன்
அதையாவது
நீ அறிவாயா..?

உனக்கும் தெரியும்
என்னிதையம்
உன்னிடன் என்று
அதனால் தான்
வாழ்கிறான்....

Friday, 27 April 2012

இன்னும் வெளிச்சம் வராத,, அதிகாலை பொழுது... ** மரங்கள் அடர்ந்த,, அழகிய பாதை வழியே,, தன்னந்தனியே,, அழகிய தென்றலை உள்வாங்கி,, அதிகாலை நிசப்தம் ரசித்து,, நடந்து கொண்டு இருந்தேன்,, ** மனம் முழுதும் நிசப்தம்,, அழகிய உணர்வுகளால்,, மனம் மகிழ்வோடு ,,, இறைவனை நினைத்த போது,, சூரியன் தன் மெல்லிய கதிர்களால்,, இருளை பிரித்து,, மரங்களினூடே வெளிச்சம்,, புகுத்தி கொண்டிருந்தான்.. ** அந்த சூரிய கதிர்களோடு,, கடவுளின் ஆசியும்,, என் மீது பரவுவதை போல.. அழகிய உணர்வு..
உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளைச் செய்யவேண்டும். மனிதர் மட்டுமில்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது கண்விழிக்கின்றன. தாவரங்கள் சூரியஒளியின் துணையோடு ஒளிச்சேர்க்கையை நிகழ்த்துகிறது. பறவைகள் இரை தேடச் செல்கின்றன. மனிதர்கள் தங்கள் கடமையைச் செய்கின்றனர். ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களுக்கும் ஜீவாதாரமாக சூரியன் திகழ்கிறது. அதனால், வாரத்தின் முதல்நாளில் சூரியனுக்குரிய நாளாக ஏற்படுத்தினர். தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே "ஞாயிறு போற்றுதும்' என்றே தொடங்குகிறது. மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய் வங்கள் சூரியனுக்கு பின்னரே குறிக்கப்படுகின்றன

Wednesday, 25 April 2012

நம்பிக்கையில் வளர்ந்து

நாடித்துடிப்பில் கலந்துபோன

இனிமையான நட்பு

உனக்கும் எனக்கும் இடையில்..

உனக்கும் எனக்கும் ஒரே எண்ணம்தான்

நான் சொல்ல முனையும்போது

நீ முடித்து வைப்பாய் வாக்கியத்தை…
தோல்விகள் வரும்போது
தோள் கொடுப்பாய் சாய்ந்துகொள்ள

தோல்விகளை விரட்டும்-உன் நட்பு
கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவாய்

அது மனதில் தட்டச்சு செய்துவிட்டு

மௌனமாய் சந்திக்கும் என் உதடுகளை…

வானம்தான் நட்பு என்றால்

அதை அலங்கரிக்கும்

நட்சத்திரங்கள்- நம் நட்பு
நினைக்க மறப்பதில்லை

நிரந்தரமாய் பிரிவதில்லை
பிரியா விடைகொடுத்தாலும்
மனசுக்குள் பயணிக்கும்- நம் நட்பு
நட்புக்கு ஈடு இணை எதுவுமில்லை

அதனால்தான் தேடுகின்றோம்

இணையதளத்திலும் இருந்திடுமென்று…

உன்னை சந்திக்கும் இடத்தில்

கடந்த காலமும் நிகழ் காலமும்

பரிமாரப்படுகின்றன நமக்குள்

அங்கே துளிர்த்து நிற்கும் - நம் நட்பு

Sunday, 22 April 2012

ஒரு காட்டில் தவம் செய்த முனிவர்கள் எல்லாரும்
ஒன்று கூடினர். அவர்களுக்குள் இறைவனடியை யார்
முதலில் அடைவது என்பதைப் பற்றி வாக்குவாதம்
ஏற்பட்டது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைக் கூறி,
“அதனால் என்னால் முடியும், என்னால் முடியும்”
என்றனர். ஓர் இளம் துறவி மட்டும் அமைதியாக
அனைவரையும் பார்த்துக் கொண்டும், கேட்டுக்
கொண்டும் இருந்தார்.

எல்லாரும் அவரை நோக்கி, “”நீங்கள் மட்டும் ஏன்
ஒன்றும் பேசாமல் இருக்கிறீர்கள்? நீங்கள் மீண்டும்
பிறக்காத தன்மையை அடைய விரும்பவில்லையா?
அல்லது இன்னும் நீண்ட காலம் இவ்வுலகில் வாழ
ஆசையா?” என்று கேட்டனர்.

அதைக் கேட்ட துறவி அமைதியாக, “”நான் செத்தால்
போவேன்” என்றார். அனைவருக்கும் அதிர்ச்சியாக
இருந்தது. “எங்களைவிட வயதில் இளையவர், தவ
ஆற்றல் குறைவானவர், இவ்வளவு உறுதியாக
எப்படிக் கூற முடிந்தது?” என்று வியப்புடன் கேட்டனர்.

அதற்கு இளம் துறைவி, “”நான், எனது என்ற ஆணவம்
உடையவர்களால் ஆண்டவனை அடைய முடியாது.
என்னிடம் அது இல்லை. ஆகவே “நான்’ இறந்தால்
போக முடியும் என்று சொன்னேன்” என்றார்.
""அடேய்! உன் நண்பன், தனது தங்கையின் திருமணத்திற்காக வைத்திருந்த ஐம்பதாயிரம் ரூபாயை உன்னை நம்பி தந்தானே! நீயோ, அவனிடம் பணமே வாங்கவில்லை என சாதித்து, உன் தேவைக்கு பயன்படுத்தினாயே! அதனால், அந்தப் பெண்ணின் திருமணமே நின்று போனதே! உன் நண்பன் மனம் உடைந்து தற்கொலை முடிவுக்கு கூட போய் தப்பித்தானே! நினைவிருக்கிறதா! ஒரு கதை சொல்கிறேன். கேட்டு விட்டு கிளம்பு,'' என்றான்.
அந்த மனிதன் பயத்துடன் கதையைக் கேட்டான்.
வேட்டைக்கு சென்ற ஒரு வேடன் புலி ஒன்றுக்கு குறி வைத்தான். புலியோ அவன் மீது வேகமாகப் பாய்ந்து வில்லையும், அம்பையும் தட்டிவிட்டது. ஆயுதமிழந்த அவன், வேகமாக ஓடினான். புலி விரட்டியது. அவன் ஒரு மரத்தின் மேல் ஏறிக்கொண்டான்.
அங்கே ஒரு கரடி அமர்ந்திருந்தது. ""புலிக்குத் தப்பி கரடியிடம் சிக்கிக் கொண்டோமே, என்ன செய்வது? குதித்து மீண்டும் ஓடலாமா?'' என எண்ணிய போது, கரடி அவனிடம், ""நண்பனே! பயப்படாதே! உன்னை நான் கொல்ல மாட்டேன். ஒருவரிடம் அடைக்கலம் புகுந்தவர் எதிரியே ஆயினும், அவரைக் காப்பாற்றுவதே தர்மம். 
இங்கேயே இரு. புலி சென்றதும், போகலாம்,'' என்றது.
வேடனும் மரத்தில் இருந்தான். "எப்படியும் அவன் இறங்கி வந்தாக வேண்டுமே!' என புலியும் கீழேயே படுத்திருந்தது. ஒரு கட்டத்தில் அவனுக்கு தூக்கம் வர, ""வேடனே! தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்து விடாதே! என் மடியில் படுத்துக் கொள், உன்னை நான் பிடித்துக் கொள்கிறேன்,'' என்றது கரடி. வேடனும் அவ்வாறே படுத்து தூங்கினான்.
சற்று நேரத்தில் கரடிக்கு தூக்கம் வரவே, வேடனை எழுப்பி,""நண்பா! இப்போது உன் மடியில் நான் படுத்துக் கொள்கிறேன். நீ விழித்திரு,'' என்றது. சற்றுநேரத்தில் அயர்ந்து உறங்கி விட்டது.
சலித்துப் போன புலி வேடனிடம்,""ஏ வேடனே! காலையில் எழுந்ததும் அந்த கரடிக்கு பசிக்கும். உன்னை எப்படியும் தின்றுவிடும். இதனால், உனக்கும் எனக்கும் லாபமில்லை. 
அந்தக் கரடியை கீழே தள்ளு! நான் அதைக் கொன்று சாப்பிட்டு விட்டு போகிறேன்,'' என்றது.
நன்றி கெட்ட வேடன், கரடியை கீழே தள்ளினான். கரடியோ சுதாரித்து ஒரு கிளையைப் பிடித்து தொங்கியபடியே வேடன் அருகே வந்தது. தன் உயிர் போச்சு என்றே வேடன் நினைத்தான்.
ஆனால், கரடி அவனிடம்,""நண்பா! நீ செய்தது நன்றிகெட்ட செயல் தான். இருப்பினும், என் குணத்தை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். துரோகம் செய்தாலும், என்னை அண்டி வந்த உன்னை புலி செல்லும்வரை இங்கேயே வைத்து பாதுகாப்பேன். நானும் உன்னைக் கொல்லமாட்டேன்,'' என்றது.
வேடன் வெட்கத்தில் தலைகுனிந்தான்,'' என்று கதையை முடித்தான் எமதர்மன்.
""ஏ மானிடனே! இப்போது சொல், ஒரு கரடிக்கு இருந்த நேயம் கூட உன்னிடம் இல்லாமல் மடிந்து போனதே! உன்னை எண்ணெய் சட்டிக்குள் போட்டால் என்ன தவறு?'' என்ற எமதர்மனுக்கு, மனிதனால் பதில் சொல்ல முடியவில்லை.
அவனை எமதூதர்கள் நரகத்துக்குள் இழுத்துச்சென்றனர்

Saturday, 21 April 2012

எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்கலாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு செய்தார் அவர்.
தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார்.

அவற்றைப் பார்த்து, உங்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது ஆண்டு ஆயுள் தருகிறேன். இந்த வாழ்நாள் போதும் என்பவர்கள் இங்கிருந்து சென்று விடலாம். குறை உடையவர்கள் இங்கேயே இருங்கள். தீர விசாரித்து அவர்கள் குறையைத் தீர்த்து வைக்கிறேன், என்றார் அவர்.

கழுதை, குரங்கு, நாய், மனிதன் ஆகிய நால்வர் மட்டுமே அங்கே இருந்தனர். மற்ற எல்லோரும் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர்.

முதலாவதாக நின்றிருந்த கழுதையை அழைத்தார் கடவுள். உன் குறை என்ன? என்று கேட்டார்.

கடவுளே! என் நிலையைப் பாருங்கள். நான் நாள்தோறும் ஏராளமான சுமைகளைச் சுமந்து துன்பப் படுகிறேன். ஓய்வோ தூக்கமோ எனக்குக் கிடைப்பது இல்லை. எப்பொழுதும் பசியால் துன்பப் படுகிறேன். முதுகில் சுமையுடன் வரும் நான், தெருவோரம் முளைத்து உள்ள புற்களில் வாயை வைத்து விடுவேன். என்னை அடித்துத் துன்புறுத்துவார் என் முதலாளி. மகிழ்ச்சி கொடுமைகளை இல்லை. என் வாழ்க்கையே நரகம். இந்தக் கொடுமைகளை எல்லாம் என்னால் எப்படி முப்பது ஆண்டுகள் தாங்கிக் கொள்ள முடியும்? என் மீது கருணை கொண்டு என் ஆயுளைக் குறைத்து விடுங்கள், என்று கெஞ்சியது.

சரி! பன்னிரண்டு ஆண்டுகள் குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பதினெட்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள்.

இதைக் கேட்ட கழுதை மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது.

அடுத்ததாக இருந்த நாயை அழைத்தார் கடவுள் உன் குறை என்ன? என்று கேட்டார்.

கடவுளே நான் வலிமையுடன் நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமையுடனும் இருக்க வேண்டும். என் காதுகள் துல்லியமான சிறு ஓசையைக் கூடக் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு மதிப்பு. நான் முதுமையடைந்து தளர்ந்து விட்டால் எல்லோருமே என்னை வெறுக்கின்றனர். எனக்கு உணவும் கிடைப்பதில்லை, என்றது நாய்.
உனக்கு நான் தந்திருக்கும் வாழ்நாள் மிக அதிகம் என்று கருதுகிறாய். குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பன்னிரெண்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள்.

மகிழ்ச்சி அடைந்த நாயும் கடவுளை வணங்கிவிட்டுப் புறப்பட்டது.

குரங்கு கடவுளின் முன் குதித்து வந்து நின்றது. உனக்கு என்ன குறை? என்று கேட்டார், கடவுள்.

பல்லைக் காட்டியக் குரங்கு, கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது நீண்ட காலம் ஆயிற்றே. அவ்வளவு காலமா நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டும்? உணவுக்காக நாங்கள் மனிதர்களிடம் பல்லைக் காட்டுகிறோம். நாட்டியம் ஆடுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். இருந்தாலும் எங்களுக்குக் கிடைப்பவை அழுகிப் போன பழங்கள் தான். முதுமை அடைந்து விட்டால் எங்களால் கிளைக்குக் கிளை தாவ முடியாது. அப்பொழுது எங்கள் நிலை மிகப் பரிதாபமாக ஆகி விடும். எங்களால் எந்தச் செயலும் செய்ய முடியாது. ஆகவே எங்கள் ஆயுளைக் குறையுங்கள், என்று வேண்டியது.

இனி உங்களுக்குப் பத்து ஆண்டுகள் தான் வாழ்நாள், என்றார் கடவுள்.

குரங்கும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது. கடைசியாக இருந்த மனிதனை அழைத்தார் கடவுள்.

உன் குறை என்ன? உனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்க வேண்டும்? என்று கேட்டார்.

கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது எங்களுக்கு மிகக் குறைந்த ஆயுள் ஆகும். அப்பொழுது தான் நாங்கள் ஏதேனும் ஒரு கலையை முழுமையாகக் கற்றிருப்போம். நாங்கள் குடியிருப்பதற்காக ஒரு வீட்டைக் கட்டி முடித்திருப்போம். எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக நாங்கள் இருக்கத் தொடங்கும் காலம் அது.
நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயன் நுகரும் பருவம் அது. இந்தச் சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது கொடுமை ஆகும். முப்பது ஆண்டு வாழ்நாள் என்பது எங்களுக்குப் போதவே போதாது. எங்களுக்கு அதிக ஆயுள் வேண்டும், என்று வேண்டினான் அவன்.

இங்கு வந்த நீ குறையுடன் சொல்லக் கூடாது. கழுதையிடம் பெற்ற பன்னிரெண்டு ஆண்டுகள், நாயிடம் பெற்ற பதினெட்டு ஆண்டுகள், குரங்களிடம் பெற்ற இருபது ஆண்டுகள் இங்கே உள்ளன. அந்த ஐம்பது ஆண்டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக் கொள்ளலாம். இனி உன் வாழ்நாள் எண்பது ஆண்டுகள். உனக்கு மகிழ்ச்சிதானே, என்று கேட்டார் கடவுள்.

மகிழ்ச்சிதான் என்ற அவன் கடவுளை வணங்கி விட்டுப் புறப்பட்டான். எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தார் கடவுள். கூடுதல் ஆயுள் கேட்டுப் பெற்ற மனிதனின் நிலைக்காக அவர் வருத்தப்பட்டார்.

கடவுளிடம் வரம் பெற்ற நாளிலிருந்து மனிதன் எண்பது ஆண்டுகள் வாழத் தொடங்கினான். முதல் முப்பது ஆண்டுகளை அவன் மகிழ்ச்சியாகக் கழித்தான். இந்த காலத்தில் தான் அவன் அறிவுள்ளவனாக, வீரனாக, பயனுள்ளவனாக வாழ்ந்தான். ஏனென்றால் கடவுள் அவனுக்கே கொடுத்த ஆயுள் இது. அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் கழுதையின் ஆயுள். அதனால் அவன் இந்தக் காலத்தில் கழுதையைப் போலப் பிறர் சுமைகளைத் தூக்கினான். சூழ்நிலையால் அடிபட்டுப் பசியாலும் பட்டினியாலும் வாடினான். நாற்பத்து இரண்டிலிருந்து அறுபது வரை நாயின் ஆயுள் அவனுடையது. இந்தக் காலத்தில் அவன், தான் சேர்த்த பொருள்களைக் காவல் காக்கும் நாய் போல வாழ்ந்தான். பிறர் அதைக் கைப்பற்ற வந்தால் குரைத்து வாழ்க்கை நடத்தினான். அறுபதிலிருந்து அவன் வாழ்க்கை குரங்கு வாழ்க்கைதான். தன் பேரக் குழந்தைகளிடம் குரங்கைப் போலப் பல்லைக் காட்ட வேண்டியதாயிற்று. கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல அவன் மகன் வீடு, மகள் வீடு என்று மாறி மாறிச் செல்ல வேண்டியதாயிற்று. அவனும் பல்லெல்லாம் விழுந்து கன்னம் ஒட்டிக் குரங்கைப் போலக் காட்சி அளித்துப் பிறகு இறந்தான்.

Friday, 20 April 2012


மனைவியுடன் மகத்தான உறவு நீடிப்பது எப்படி?


30MAR
மிகவும் கஷ்டமான ஒரு கேள்விதான். மனைவியுடன் சுமுகமான உறவு எப்போதும் வேண்டுமென விரும்பினால், முதலில் அவரை உங்களுடைய மனைவி என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதை நிறுத்துங்கள். அவரை இன்னொரு மனித உயிராகப் பாருங்கள். இப்படிப் பார்த்தால் பிறகு அங்கே எந்தப் பிரச்சனையும் இருக்காது.
‘இவள் என் மனைவி’ என்று நீங்கள் பார்க்கத் துவங்கும் கணத்திலேயே எங்கோ அவள் உங்களின் சொத்து என்றாகிவிடுகிறது. உங்களுக்குச் சொந்தமான சொத்து என்றவுடனேயே உங்களது அணுகுமுறை முற்றிலும் வேறுவிதமாக ஆகிவிடுகிறது. ஒருவரை நீங்கள் உங்களுடைய உரிமைப் பொருளாகக் குறைத்துவிடும் கணத்திலேயே அவருடன் இணைந்து வாழ்வதில் உள்ள அழகு மறைந்துவிடுகிறது. வேறு யாரோ ஒருவருக்கு அவள் அற்புதமானவளாகத் தெரியலாம். ஆனால் உங்கள் கண்களுக்கு வேறுவிதமாகத்தான் தெரிவாள். அவளை உங்களுடைய உரிமையாகப் பார்க்கும் காரணத்தால் அவருடைய அற்புதத்தன்மை உங்களுக்குத் தெரிவதில்லை.
உண்மையில் யாரையும் நீங்கள் உரிமை கொண்டாட முடியாது. உங்களுடைய மனைவியோ, உங்கள் கணவரோ, உங்கள் குழந்தையோ யாருமே உங்களுக்கு உரிமையானவர் கிடையாது. அவர்கள் உங்கள் சொத்து கிடையாது. இந்த நிமிடத்தில் அவர்கள் உங்களோடு இணைந்திருப்பதைக் கொண்டாடி மகிழுங்கள்.
‘இந்த உயிர் என்னோடு இருப்பதைத் தேர்வு செய்திருப்பது எவ்வளவு அற்புதமான விஷயம்’ என்று நீங்கள் மனமார உணர்ந்தால் மட்டுமே கொண்டாடும் தன்மை உங்களுக்கு வரும். மாறாக, ‘இவள் என் மனைவி. எப்படியும் எனக்கு உடமையானவள்தான். என்னிடம் மட்டுமே இருக்க வேண்டியவள்’ என்று நீங்கள் நினைக்கும் அந்தக் கணத்திலேயே பாராட்டும், கொண்டாடுதலும் காணாமல் போய்விடும். இரண்டு உயிர்களுக்கிடையே பாராட்டும், கொண்டாட்டமும் காணாமல் போனபிறகு, அவர்களிடையே இருக்கக்கூடிய உறவுநிலையில் என்னதான் அழகு இருந்துவிட முடியும்? கணவரோ அல்லது மனைவியோ எந்தத் தன்மையுடன் இருக்கிறாரோ அவரை அந்தத் தன்மையுடனேயே புரிந்து கொண்டு மதிக்கவும், கொண்டாடவும் முடியவில்லையென்றால், பிறகு அருமையான உறவுமுறை அங்கே எப்படியிருக்கும்?
ஆனால் அதே நேரத்தில், அவரை இன்னொரு ‘உயிராக’ நீங்கள் உணர்ந்தால், அங்கே மிக அழகான உறவு மலரும். உங்களுடைய வாழ்க்கைக்குள் பங்கெடுக்க வந்த பெண்ணை, ‘இதோ, இங்கே, இப்போது என்னருகில் இருப்பது இன்னொரு சக உயிர்’ என்ற அளவில் வெறுமனே பாருங்கள். ஒவ்வொரு கணமும் இப்படிப் பார்க்கும்போது அங்கு கொண்டாட்டம் மட்டுமே இருக்க முடியும்.
அவளுக்கு வேறு வழியே கிடையாது என்கிற ஒரு சூழலை சமூக ரீதியாக நீங்கள் உருவாக்க முயற்சிக்கலாம். ஆனால் அவளுக்கும் சில வழிகள் இருக்கிறது. எதுவுமே செய்ய முடியாத நிலையில் சிலர் தன்னை மாய்த்துக் கொண்டாவது கணவனுக்கான உரிமைகளை மறுத்திருக்கிறார்கள், இல்லையா? எனவே தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். யாரோ ஒருவர் சமூக ரீதியாக உங்களோடு பிணைக்கப்பட்டிருந்தாலும் அவர் தன் விருப்பத்தின் பேரில்தான் உங்களோடு தொடர்ந்து இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே, அவரின் விருப்பத்திற்கு நன்றி கூறி அவரையும், அவரது அருகாமையையும் மகத்தானதாகக் கொண்டாடுங்கள். இப்படி உறவை மதிக்கவும், கொண்டாடவும் தெரிந்திருந்தால் அங்கே மேன்மையான உறவு மட்டுமே இருக்கமுடியும்.

நம் கலாச்சாரத்தில் கர்ப்பிணிப் பெண்களை கர்ப்பக் காலத்தின் பிற்பகுதியில் தனியாக வைத்துப் பராமரித்திருக்கிறார்கள், அது எதனால்?
சத்குரு: புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையின் மண்டையோட்டைக் கவனித்திருக்கிறீர்களா? மண்டையோடு முழுமையாக இருக்காது. உச்சியில் சிறிய பகுதி தோலால்தான் மூடப்பட்டிருக்கும். பிறந்த குழந்தை மிகவும் மென்மையாகக் கையாளப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம். அப்பகுதி ‘பிரம்மரந்திரா’ என்று அழைக்கப்படுகிறது. ‘ரந்திரா’ என்றால் சிறிய துளை அல்லது வழி என்று அர்த்தம். பெண்ணின் வயிற்றில் கரு ஒரு பிண்டமாக இருக்கும்போது, இந்த துளை வாயிலாகத்தான் புதிய உயிர் இறங்குகிறது. இந்த உடல் தனக்குத் தகுதியானதுதானா என்று கருவில் புகுந்த உயிரானது கடைசி நிமிடம் வரை தேர்வு செய்யும். அந்த அளவு விழிப்புணர்வு அந்த உயிருக்கு இருக்கிறது.
ஒரு வேளை இந்த உடல் தனக்குத் தகுதியானதல்ல என்று அந்த உயிர் உணர்ந்தால், தலை உச்சியில் உள்ள அந்த வாயில் வழியாகவே வெளியேறிவிடும். உடலில் வேறு பல வாயில்கள் இருந்தாலும் அதன் வழியாக வெளியேற அந்த உயிர் விரும்புவதில்லை. எனவேதான், விரும்பாத உயிர் வெளியேறுவதற்கு வசதியாக குழந்தை பிறக்கும்வரை அந்த வாயில் திறந்தே இருக்கிறது. இறந்தே பிறக்கும் பல குழந்தைகளைப் பார்க்கும்போது, மருத்துவர்களுக்கே பல நேரங்களில் விந்தையாக இருக்கும். ஏனெனில், அந்த உடலைப் பார்க்கும்போது, மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால், அந்த உடலில் உயிர் இருக்காது. ஏனெனில், உயிர் கடைசி வரையிலும்கூட தேர்வு செய்துகொண்டே இருக்கும்.
அந்த உயிருக்கு என்று ஒரு கர்மா இருக்கும், பிண்டத்துக்கு என்று ஒரு கர்மா இருக்கும். 90 சதவீதம் ஏன் அதற்கும் மேலாகக்கூட அந்த உயிரின் தேர்வு சரியாகத்தான் இருக்கும். சரியான பிண்டத்தைத்தான், கருவைத்தான் தேர்ந்தெடுத்திருக்கும். ஆனாலும் தவறு நேர்ந்துவிடலாம் என்ற விழிப்புணர்வு அந்த உயிருக்கு எப்போதும் இருக்கும்.
இந்தக் காரணத்துக்காகத்தான் நம் கலாச்சாரத்தில், கர்ப்பமடைந்த ஒரு பெண்ணைச் சுற்றி பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. பிறக்கப்போகும் குழந்தையின் அப்பா, அம்மா ஆகிய இருவரையும்விட, சிறந்த உயிர் அந்தக் கருவுக்கு வந்து தங்க வேண்டும் என விரும்பினார்கள். தாங்கள் எந்தத் தன்மையில் இருக்கிறோமோ, அதையும்விட உயர்ந்த தன்மையில் உள்ள உயிர் அந்தக் கருவைத் தேடி வர வேண்டும் என விரும்பினார்கள். அதனால்தான் அவள் ஒரு குறிப்பிட்ட வசதியான சூழ்நிலையில் பராமரிக்கப்பட்டாள். சுமுகமான சூழ்நிலை, நல்ல எண்ணங்கள் என்று அவளின் மொத்தத் தன்மையும் இனிமையாக இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். அவளைச் சுற்றிலும் நறுமணமான சூழ்நிலை, சரியான சப்தங்கள், சரியான உணவு, என மொத்தமும் கண்காணிக்கப்பட்டன. வரக்கூடிய புதிய உயிரை வரவேற்க அவள் முற்றிலும் தகுதியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். குறிப்பிட்ட மாதங்களுக்குப் பிறகு, அவளுடைய கணவன்கூட பல காரணங்களுக்காக அவளைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
ஆனால், தற்போது கர்ப்ப காலத்திலும் கடைசி வரை ஒரு பெண் வேலைக்குச் செல்கிறாள், சினிமா, டி.வியில் எல்லாவிதமான காட்சிகளும் பார்க்கிறாள். எல்லாப் பொது இடங்களுக்கும் போகிறாள். கர்ப்பம் அடைந்துள்ள பெண்களுக்கான பழைய பராமரிப்பு முறைகள் தற்போது இல்லை. இன்றைய உலகில் அவையெல்லாம் சாத்தியமே இல்லை என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்!