Monday, 27 April 2015

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம் !!!
இதாம்மா ஃபாஸ்ட் ஃபுட்
தினம் தினம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் என்ன சாதம் வைத்துக் கொடுப்பது என்பதுதான் பல அம்மாக்களின் கவலை.
பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது வெரைட்டி காட்டி சந்தோஷப்படும் அம்மாக்களால், காலை நேர பரபரப்பில் அப்படி ஜமாய்க்க முடியாது. அதிலும் வேலைக்குப் போகும் அம்மாக்கள் என்றால் சமையலுக்காக மெனக்கெடுவதை யோசித்துக்கூடப் பார்க்க முடியாது. எல்லோருக்கும் செய்வதையே குழந்தைகளுக்கும் கொடுத்தனுப்புவார்கள். அது, இரண்டு ஸ்பூன் அளவுக்கு மட்டுமே காலியாகி, கனத்த பாக்ஸாகவே திரும்பும்போது, அம்மாக்களின் இதயமும் கனத்துப் போகும்.
இந்தப் பிரச்னைக்கு சுலபத் தீர்வு, கலந்த சாதங்கள்! ‘‘நீங்க சொல்றது சரிதான். ஆனா அதிலயும் ஒரு பிரச்னை இருக்கே.. நாலஞ்சு வகையையே திரும்பத் திரும்பச் செஞ்சு கொடுத்தா ‘போர்’னு பிள்ளைங்க முகத்தை சுளிக்க ஆரம்பிச்சுடறாங்களே..’’ என்கிறீர்களா? அந்தக் கவலை இனி வேண்டாம்.
முப்பது நாட்களுக்கும் நீங்கள் விதவிதமான கலந்த சாதங்களை செய்து அசத்த, இதோ முப்பதுவிதமான ரெசிபிக்களை தருகிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்.
திகட்டத் திகட்ட கல்கண்டு சாதம், சப்புக் கொட்ட நெல்லிக்காய் சாதம், உடலுக்கு வலு சேர்க்க உளுந்து பொடி சாதம், கலக்கல் காளான் சாதம்… என்று புதுமையான ரெசிபிக்கள் மட்டுமல்ல; நன்கு பரிச்சயமான தயிர், தக்காளி சாதங்களும்கூட இவரது ஸ்பெஷல் பக்குவத்தில் மாறுபட்ட சுவைகளோடு இங்கு வரிசை கட்டியிருக்கின்றன.
வெரைட்டிக்கு பஞ்சமில்லை. சுலபமாக சமைக்கலாம்.சத்தானதும்கூட. முக்கியமாக, பெரியவர்களும் ‘வேண்டாம்’ என்று சொல்லாமல் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.
படித்த சூட்டோடு சமைத்து பரிமாறுங்கள். ‘உங்க கை பக்குவத்துக்கு ஈடு இணையே இல்லை’ என்று வீடே கொண்டாடும்!
கோவைக்காய் சாதம்
தேவை:
உதிராக வடித்த சாதம் 2 கப், பெரிய வெங்காயம் 1, கோவைக் காய் 100 கிராம், தேங்காய்த் துருவல், மிளகாய்த் தூள் தலா 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை:
வெங்காயம், கோவைக்காயை மெல்லியதாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளித்து, வெங்காயம், தேங்காயை வதக்குங்கள். பச்சை வாடை போனதும், கோவைக் காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கி, கறிவேப்பிலை, எலுமிச்சம் சாறு சேர்த்து இறக்குங்கள்.
இந்தக் கலவையோடு சாதத்தைக் கலந்து பரிமாறுங்கள்.
கறிவேப்பிலை சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
பொடிக்க: மிளகு, கசகசா தலா 1 டீஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன், முந்திரி 4, கறிவேப்பிலை 1 கப், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 6.
செய்முறை: கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள். பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள்.
எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில், பொடித்த பொடி, உப்பு, தாளிதக் கலவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலக்குங்கள்.
மும்பை சாதம்
தேவை: பச்சரிசி அரை கப், தோலுடன் உடைத்த பாசிப் பருப்பு 1 கப், மஞ்சள் தூள் 1 சிட்டிகை, பச்சை மிளகாய் 2, நெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.
செய்முறை: குக்கரில் அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.
வாணலியில், மீதமுள்ள நெய்யை ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.
இந்தக் கலவையை, சாதக் கலவையோடு சேர்த்துக் கலந்தால் மும்பை சாதம் தயார்.
கதம்ப சாதம்
தேவை: பச்சரிசி, துவரம் பருப்பு தலா 1 கப், காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், கோஸ், பீட்ரூட்…) 2 கப், சின்ன வெங்காயம் 10, தக்காளி 5, சாம்பார் தூள் 2 டேபிள் ஸ்பூன், புளி கரைசல் அரை கப், பெருங்காயம், மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: காய்களை விரல் நீளத் துண்டுகளாகவும், வெங்காயம், தக்காளியை பொடியாகவும் நறுக்குங்கள். அரிசி, பருப்புடன் ஆறு கப் தண்ணீர், காய்கறிகள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும், மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
வாணலியில் எண்ணெய், நெய்யை சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு தக்காளி, சாம்பார்தூளைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கி, புளி கரைசல், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, பருப்பு சாதக் கலவையோடு சேர்த்துக் கலக்குங்கள்.
எள் சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கடுகு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
பொடிக்க: எள் 2 டேபிள் ஸ்பூன், உளுந்து 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன், பெருங்காயம் சிறு துண்டு.
செய்முறை: எள்ளை வெறும் வாணலியில் போட்டு, பொரியும்படி வறுத்தெடுங்கள். எண்ணெயில் பெருங்காயத்தைப் பொரித்து பிறகு மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுத்தெடுங்கள். எள் உட்பட, வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக பொடித்து வையுங்கள்.
நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளியுங்கள்.
சாதத்தில் எள் பொடி, உப்பு ஆகியவற்றைத் தூவி, கடுகு தாளிதத்தை சேர்த்துக் கலக்குங்கள்.
மாங்காய் இஞ்சி சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், தோல் நீக்கி துருவிய மாங்காய் இஞ்சி துருவல் அரை கப், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் 4, எலுமிச்சை சாறு, எண்ணெய் தலா 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்,கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.
பொடிக்க: உளுந்து 1 டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு அரை டேபிள் ஸ்பூன், தனியா 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் 3, எண்ணெய் 3 டீஸ்பூன்.
செய்முறை: ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில், மாங்காய், இஞ்சி துருவல், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை வதக்கி, கரகரப்பாக அரைத்தெடுங்கள். பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிவக்க வறுத்து பொடியுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை தாளியுங்கள்.
சாதத்தில், அரைத்த விழுது, பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு, தாளிதக் கலவை, எலுமிச்சம் சாறு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.
ஸ்பெஷல் எலுமிச்சம் சாதம்
தேவை: பச்சரிசி 2 கப், பால் 1 கப், எலுமிச்சம் பழச்சாறு 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 2 டீஸ்பூன், வேக வைத்த கொண்டைக் கடலை கால் கப், கடுகு 1 டீஸ்பூன், உளுந்து, கடலைப் பருப்பு தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.
செய்முறை: அரிசியுடன் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை ஒன்றிரண்டாக நசுக்குங்கள். எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்தெடுங்கள். பிறகு பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு, கொண்டைக் கடலை ஆகியவற்றைச் சேர்த்து கிளறி இறக்குங்கள்.
இந்தக் கலவையோடு சாதத்தை சேர்த்துக் கிளறுங்கள்.
புதினா கத்தரிக்காய் சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், பச்சை கத்தரிக்காய் 8, பெரிய வெங்காயம் 1, தக்காளி 2, புளி கரைசல் 1 டேபிள் ஸ்பூன், கடுகு, சீரகம், மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
அரைக்க: தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், புதினா, மல்லி தலா அரை கட்டு, பச்சை மிளகாய் 4, பூண்டு 6 பல்.
செய்முறை: அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரையுங்கள். வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் இவற்றை நீளவாக்கில், மெல்லியதாக நறுக்குங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு, சீரகத்தை தாளித்து வெங்காயம், கத்தரிக்காயைச் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் தூவி ஐந்து நிமிடம் வதக்குங்கள். பிறகு, அரைத்த விழுது, தக்காளி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்கி,புளி கரைசலைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்குங்கள்.
இந்தக் கலவையை சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்.
தேங்காய்ப்பால் தக்காளி சாதம்
தேவை: பச்சை பட்டாணி அரை கப், பச்சரிசி 2 கப், தேங்காய்ப் பால் 2 கப், தக்காளி 6, பச்சை மிளகாய் 2, மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: அரிசியை சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள். தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காய வைத்து கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள்.
சாதத்தில் தக்காளி கலவையை சேர்த்துக் கலக்குங்கள்.
புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.
பிஸிபேளா பாத்
தேவை: அரிசி, துவரம் பருப்பு தலா 1 கப், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன், சின்ன வெங்காயம் 1 கப், தக்காளி 4, பச்சை பட்டாணி அரை கப், வேகவைத்து வழித்தெடுக்கப்பட்ட முருங்கைக்காய் விழுது அரை கப், புளி எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.
அரைக்க: தனியா 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, கடலைப் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 1, கசகசா 2 டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: அரிசி, பருப்புடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு மற்றும் ஆறு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும், மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்தை தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, பட்டாணி சேர்த்து வதக்குங்கள். பிறகு புளி கரைசலைச் சேர்த்து, பச்சை வாடை போகக் கொதித்ததும் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து முருங்கை விழுதை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
இதனை வெந்த அரிசி பருப்பு கலவையுடன் கலக்குங்கள்.
கல்கண்டு சாதம்
தேவை: பச்சரிசி 1 கப், பால் 1 லிட்டர், கல்கண்டு 1 கப், ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன், கிராம்பு 1, மில்க்மெய்ட் 3 டேபிள் ஸ்பூன், நெய் கால் கப், முந்திரி 10, பாதாம் 8, வெள்ளரி விதை 1 டேபிள் ஸ்பூன், சார பருப்பு அரை டேபிள் ஸ்பூன், கிராம்பு 1, ஜாதிபத்ரி சிறிதளவு.
செய்முறை: அரிசியை ஒரு கப் தண்ணீர், ஒரு லிட்டர் பால் சேர்த்து மிதமான தீயில் வேக வையுங்கள். அடிப் பிடிக்காமல் இருக்க, அவ்வப்போது கிளறிவிடுங்கள். அரிசி வெந்து குழைந்ததும் அதில் கல்கண்டை பொடித்துச் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் கிளறுங்கள்.
பாதாமை மெல்லிதாக சீவுங்கள். ஏலம், கிராம்பு, ஜாதிபத்ரி ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடித்து வையுங்கள். நெய்யைக் காயவைத்து முந்திரியை வறுத்து, வெள்ளரி விதை, சார பருப்பு சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
கல்கண்டு சாதத்தில் பாதாம், ஏலம், கிராம்பு, ஜாதிபத்ரி பொடி, முந்திரி, வெள்ளரிவிதை கலவையைச் சேர்த்துக் கிளறுங்கள்.
சீரக சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப் (பாசுமதி அரிசியாக இருந்தால் கூடுதல் சுவை தரும்), முந்திரி 10, சீரகம் 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: நெய்யை சூடாக்கி சீரகத்தைத் தாளியுங்கள். பிறகு முந்திரியைச் சேர்த்து இளம் சிவப்பாக வறுத்து, கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்து இறக்குங்கள்.
சாதத்தில், சீரகக் கலவை, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கினால் சீரக சாதம் ரெடி.
ஆந்திரா புளியோதரை
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், புளி சிறிய எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கு, வெல்லத் துருவல் 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு ஒன்றரை டீஸ்பூன், உளுந்து, கடலைப் பருப்பு தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 4, பெருங்காயம் அரை டீஸ்பூன்.
செய்முறை: சாதம் சூடாக இருக்கும்போதே அதை குவித்தாற்போல வைத்து நடுவில் குழிவாக்குங்கள். அதில் பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறி), கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள்.
மீதமுள்ள எண்ணெயில் 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள். பிறகு வெல்லம் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.
மீதமுள்ள கடுகை அரைத்து வையுங்கள்.
சாதத்தில் புளி கலவை, அரைத்து வைத்துள்ள கடுகு விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.
மாங்காய் சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், புளிப்பான மாங்காய் துருவல் 1 கப், பச்சை மிளகாய் 6, பெருங்காயம் 1 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து, தலா அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் மாங்காய்த் துருவல் மற்றும் மிளகாயை வதக்கி எடுத்து கரகரப்பாக அரையுங்கள்.
மீதமுள்ள எண்ணெயில், கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்து, மஞ்சள் தூள் சேர்த்து இறக்குங்கள். இதனை மாங்காய் கலவையோடு சேர்த்து மேலும் ஒரு சுற்று அரைத்தெடுங்கள்.
சாதத்தில், அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்துக் கலக்குங்கள்.
தோசைக்காய் சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், தோசைக் காய் 1, பச்சை மிளகாய் 6, புளி சிறிய எலுமிச்சை அளவு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: தோசைக்காயின் தோல், விதைகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் தோசைக் காயை வதக்குங்கள். பிறகு பச்சை மிளகாய், புளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கி இறக்குங்கள். ஆறியதும் கரகரப்பாக அரையுங்கள்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள்.
சாதத்தில், அரைத்த விழுது, உப்பு, கடுகு தாளிதக் கலவை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.
பூண்டு சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், சின்ன வெங்காயம் அரை கப், பூண்டு 1 கப், இஞ்சி 1 துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு, வறுத்துப் பொடித்த மிளகுத் தூள் 2 டீஸ்பூன், சீரகத் தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 4, உப்பு தேவைக்கு.
செய்முறை: வெங்காயம், பூண்டு, இஞ்சி இவற்றின் தோலை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்குங்கள். நெய்யில் கடுகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கி, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
இந்த பூண்டுக் கலவையில் சாதத்தைச் சேர்த்து, தேவையான உப்பு தூவிக் கிளறுங்கள்.
மாங்காய் மசாலா சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், புளிப்பான மாங்காய் 1, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், கடுகுத் தூள் 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: மாங்காயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயுடன் மாங்காய், பொடி வகைகள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.
நெய்யில் கடு-கை பொரித்தெடுங்கள்.
சூடான சாதத்தில் தாளிதக் கலவை மற்றும் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.
சோயா சாதம்
தேவை: பச்சரிசி 2 கப், சோயா உருண்டைகள் அரை கப், பெரிய வெங்காயம் 2, இஞ்சி,பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 4 டீஸ்பூன், தயிர் அரை கப், கரம் மசாலாத் தூள் 1 டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: சோயாவை கொதி நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து பிறகு பச்சைத் தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்றாகக் கழுவுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில், சன்னமாக நறுக்குங்கள்.
குக்கரில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, சீரகத்தை தாளித்து, வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு உப்பு, தயிர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, சோயா ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள். பிறகு அரிசி மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வையுங்கள்.
ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
அரை நெல்லிக்காய் சாதம்
தேவை: பச்சரிசி 2 கப், அரை நெல்லிக்காய் அரை கப், பச்சை மிளகாய் 10, தேங்காய்த் துருவல் 2 டீஸ்பூன், பெருங்காயம் 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து, மஞ்சள்தூள் தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.
செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள். நெல்லிக்காய்களை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்குங்கள். 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு, நெல்லிக்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி நைஸாக அரைத்தெடுங்கள்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள்.
சாதத்தில், நெல்லிக்காய் விழுது, கடுகு தாளிதம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.
கொண்டைக்கடலை சாதம்
தேவை: பச்சரிசி 2 கப், சிறிய கருப்பு கொண்டைக் கடலை அரை கப், தேங்காய்ப் பால் 2 கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத் தூள், கரம் மசாலா தலா 1 டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 1 டேபிள் ஸ்பூன், பிரிஞ்சி இலை 2, உப்பு தேவைக்கு.
செய்முறை: கடலையை முதல் நாளே ஊற வைத்து மறுநாள் வேகவைத்து எடுத்து வையுங்கள்.
வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்குங்கள்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை காயவைத்து, பிரிஞ்சி இலையை தாளியுங்கள். பிறகு வெங்காயம், தக்காளியை வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு தேங்காய்ப் பால், இரண்டு கப் தண்ணீர், தேவையான உப்பு, வேக வைத்த கடலை, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து மூடி வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, மேலும் இரண்டு நிமிடங்கள் வைத்திருந்து இறக்குங்கள்.
ஸ்பெஷல் தக்காளி சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 6, பச்சை மிளகாய் 3, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, மல்லித்தழை தலா சிறிதளவு, கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
பொடிக்க (முதல் வகை): பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2, கசகசா 2 டீஸ்பூன், முந்திரி 6, எண்ணெய் 1 டீஸ்பூன்.
மற்றொரு வகை பொடிக்கு: தனியா, துவரம் பருப்பு தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 4, கொப்பரை தேங்காய்த் துருவல் 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன்.
செய்முறை: பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை (இரண்டு வகையையும் தனித்தனியாக) வறுத்து பொடித்து வையுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள்.
வாணலியில் எண்ணெய், நெய்யைக் காய வைத்து கடுகு, உளுந்தை தாளியுங்கள். பிறகு வெங்காயம், மிளகாய், தக்காளி ஆகியவற்றை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி இறக்குங்கள். சாதத்தில், பொடி வகையை தூவி, தக்காளி கலவை மற்றும் கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துக் கிளறுங்கள்.
காய்கறி சாதம்
தேவை: பச்சரிசி 2 கப், காய்கறி கலவை (கேரட் பீன்ஸ், பட்டாணி) 1 கப், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2, பெரிய வெங்காயம் 3, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், தயிர் அரை கப், புதினா, மல்லி தலா அரை கட்டு, பச்சை மிளகாய் 3, மிளகாய் தூள் 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, நெய் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: குக்கரில் எண்ணெய், நெய்யைச் சூடாக்கி பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்குங்கள். பின்னர் காய்களைச் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி ஆறு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள். பிறகு அரிசியைச் சேர்த்து கிளறி மூடி வையுங்கள்.
ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
உளுந்து பொடி சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
பொடிக்க: முழு உளுந்து 4 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், கொப்பரைத் தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன்.
செய்முறை: பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை, மிதமான தீயில் சிவக்க வறுத்துப் பொடியுங்கள். நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளித்துப் பொடியோடு சேர்த்துக் கலக்குங்கள்.
சாதத்தில், பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறுங்கள்.
வெந்தயக்கீரை சாதம்
தேவை: பச்சரிசி 2 கப், வெந்தயக்கீரை 2 கட்டு, தக்காளி 3, வெங்காயம் 2, இஞ்சி 1 துண்டு, பூண்டு 10 பல், பச்சை மிளகாய் 4, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா தலா 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் ஒரு கப், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: கீரையைச் சுத்தம் செய்யுங்கள். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை நசுக்குங்கள். எண்ணெயில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு வெங்காயம், கீரை, தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்குங்கள். பிறகு மீதமுள்ள மசாலாத்தூள்கள் அனைத்தையும் சேர்த்து வதக்குங்கள்.
பச்சை வாடை போனதும், இந்தக் கலவையோடு தேங்காய்ப் பால், நான்கு கப் தண்ணீர், தேவையான உப்பு, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள்.
ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
ஸ்பெஷல் தயிர் சாதம்
தேவை: பச்சரிசி 2 கப், பால் அரை கப், புளிக்காத புதிய தயிர் இரண்டரை கப், இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது 2 டீஸ்பூன், வெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித் தழை சிறிது, கடுகு 1 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பொடியாக நறுக்கிய முந்திரி 2 டேபிள் ஸ்பூன், திராட்சை 15, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: சாதத்தை குழைவாக வேக வையுங்கள். சாதம் சூடாக இருக்கும்போதே அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.
எண்ணெயில் கடுகு, மிளகாய், முந்திரி, திராட்சை (திராட்சை சிவக்கக் கூடாது) ஆகியவற்றை தாளியுங்கள்.
சாதத்தில் தாளிதக் கலவை, தயிரைக் கலக்குங்கள்.
கத்தரி மொச்சை சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கத்தரிக்காய் 6, காய்ந்த மொச்சை கால் கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, பிரிஞ்சி இலை 2, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்.
அரைக்க: தேங்காய் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், தனியாத் தூள் அரை டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 3 பல், சோம்பு அரை டீஸ்பூன்.
செய்முறை: மொச்சைக் கொட்டையை முதல் நாளிரவே ஊற வைத்து, மறுநாள் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வையுங்கள். கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை மெல்லியதாக நறுக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.
எண்ணெயில், பிரிஞ்சி இலையைத் தாளித்து வெங்காயம், கத்தரிக்காயை மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்கள். காய் முக்கால் பதம் வெந்ததும், தக்காளி, அரைத்த விழுது, மொச்சைக் கொட்டை, தேவையான உப்பு சேர்த்து சுருளக் கிளறி இறக்குங்கள்.
சாதத்துடன் இந்த விழுதைச் சேர்த்துக் கலக்குங்கள்.
கொத்துமல்லி சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு.
அரைக்க: மல்லித் தழை 2 கட்டு, மிளகாய் வற்றல் 10, உளுந்து 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் சிறு துண்டு, புளி சிறு எலுமிச்சை அளவு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: மல்லித் தழையை சுத்தம் செய்யுங்கள். எண்ணெயில் பெருங்காயம், மிளகாய் வற்றலை வறுத்தெடுங்கள். பிறகு உளுந்தை வறுத்து எடுத்து தனியே வையுங்கள். பிறகு மல்லித் தழையை வதக்குங்கள்.
இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் உப்பு, புளி சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.
நெய்யில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளியுங்கள்.
சாதத்தில், அரைத்த விழுது, தாளிதக் கலவை, உப்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கிளறுங்கள்.
காய்கறி எலுமிச்சம் சாதம்
தேவை: பச்சரிசி 2 கப், எலுமிச்சம் பழம் 2, கேரட் 1, பீன்ஸ் 10, காலிஃப்ளவர் 1 துண்டு, பட்டாணி அரை கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 3, மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், பெருங்காயத் தூள் 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், முந்திரி 10, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: அரிசியை சிறிதளவு உப்பு சேர்த்து உதிராக வேக வையுங்கள். காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள்.
எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி ஆகியவற்றைத் தாளித்து காய்கறிகள், இஞ்சி, மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். காய்கறிகள் வெந்ததும், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.
இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறுங்கள்.
கூட்டாஞ்சோறு
தேவை: புழுங்கல் அரிசி 2 கப், துவரம் பருப்பு அரை கப், கேரட், கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவை தலா 1, வாழைக்காய் பாதியளவு, முருங்கைகீரை, அரைக் கீரை, முளைக் கீரை தலா 2 கைப்பிடி, சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல் தலா 8, பூண்டு 6 பல், கடுகு, உளுந்து, சீரகம் தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் சிறிதளவு, தேங்காய்த் துருவல் 2 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், புளி சிறிய எலுமிச்சை அளவு, வடகம் 3 துண்டு, உப்பு தேவைக்கு.
செய்முறை: காய்களை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், பூண்டு, தேங்காய்த் துருவல், மிளகாய், சீரகம் ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். புளியை சிறிதளவு நீரில் கெட்டியாகக் கரைத்து வையுங்கள்.
அரிசி, பருப்புடன் காய்கள், கீரை வகைகள், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த விழுது, புளி கரைசல், நான்கு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் போட்டு மூடி வையுங்கள். 1 விசில் வந்ததும், மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
எண்ணெயில் கடுகு, உளுந்தை தாளித்து, வடகத்தைப் பொரித்தெடுங்கள்.
இந்த வடகக் கலவையைச் சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்.
காளான் சாதம்
தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், காளான் 10, பெரிய வெங்காயம் 1, இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், வெங்காயத் தாள் 2, பச்சை கலர் சில்லி சாஸ் 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் 1 டீஸ்பூன், சீன உப்பு அரை டீஸ்பூன், சோயா சாஸ் 1 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: வெங்காயம், இஞ்சி, பூண்டு, காளான் ஆகியவற்றை நீளவாக்கில் மெல்லியதாகவும், வெங்காயத்தாளை பொடியாகவும் நறுக்குங்கள்.
எண்ணெயில் வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வதக்குங்கள். வெங்காயம் நிறம் மாறியதும் காளானைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்கி, பிறகு சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகுத்தூள், சீன உப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கிளறுங்கள்.
இந்தக் கலவையில் சாதம், வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.
மூலம் நோய்க்கு எளிய மருந்து
இந்த நோய் பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிருந்தாலும், உடலுறவின் போது சிறுநீர், மலம் அடக்குவதாலும் ,
ஒரே இடத்தில் நாற்காலில் அமர்ந்து தொழில் புரிவோர்க் கும் மூலாதாரம் எனப்படும் ஆசன வாய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்நோய் தோன்றுகிறது .
மற்றும் உணவில் நார்ச்சத்து வகைகளை குறைத்து உண்பதா லும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலநோய் ஏற்படும், அடிக்கடி நீர் அருந்தாமையினாலும் குடல் இளக்கமின்றி இந்நோய் தோன் றும். அதிக உடலுறவு ,அதிக காரமான உணவு உண்போருக்கும் பெண்களின் குழந்தைப்பேறு கால சமயங்களில் குழந்தை வெளி வரும் போது முக்குவதாலும் மூல நோய் தோன்றும்.
மருத்துவத்தில் இதனை மூன்று வகையாகக் கூறு கின்றனர். வெளிப்படையாக நமக்கு புலப்படுவதும் இவைகள் தான்.
1- உள் மூலம் - ஆசன வாயின் உட்பகுதியில் குருத்து போல் வளர்வது.
2- வெளி மூலம் - ஆசனவாயின் தசைப்பகுதிகள் பிதுங்கி வெளி வருவது .
3- இரத்த மூலம் - மலம் வெளிவரும் போது இரத்தம் கசிவது.
மூல நோயின் அறிகுறிகள் :
மலச்சிக்கல், அடித்தொடை கணுக்கால் வலி குடைச்சல், உடல் சோர்வு, களைப்பு, ஆசன வாய் எரிச்சல், ஆசனக்கடுப்பு, மலத்தோடு இரத்தம் கழிதல், மார்பு துடிப்பு, முக வாட்டம்,போன்றவை ஏற்படும். மேலும் இரத்தமூலம் ஏற்பட்டு தினமும் இரத்தம் வெளி ஏறிக்கொண்டிருந்தால் உடலில் பலம் குறையும்,மயக்கம் உண்டாகும் .
மூல நோய் வராமல் தடுக்க :
உணவில் கீரை வகைகள்,காய் பழ வகைகள்,தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடிக்கடி நீர் அருந்தவேண்டும்,தினமும் காலை மாலை மலம் கழித்தல் வேண்டும், மலச்சிக்கல் உள்ள போது உடலுறவு கூடாது,தின மும் நடைப் பயிற்சி அல்லது எளிய உடற் பயிற்சி மேற்கொள்ளுதல் நல்லது. உணவில் விளக்கெண்ணை, நெய், வெங்காயம், தவறாது சேர்த்தல் வேண்டும். கருணைக் கிழங்கு அடிக்கடி உணவில் சேர்த்தல் நன்று.
மூல நோய்க்கு எளிய மூலிகை மருந்துகள்:
1- பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி, பருப்பு சேர்த்து துவையல் செய்து வாரம் இரு முறை சாப்பிட்டு வர மூலம் கரைந்து விடும்.
2- மூல நோய்க்கு துத்தி இலை சிறந்த மருந்தாகும். இரண்டு கை அளவு துத்தி இலை, நறுக்கிப் போட்டு, சிறிது மஞ்சள் தூள், சிறிய வெங்காயம் பத்து,அரிந்து போட்டு விளக்கெண்ணை விட்டு வதக்கி மிளகுத்தூள், உப்பு சிறிது சேர்த்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.
3- வெளி மூலத்திற்கு துத்தி இலை ஒரு கை பிடி அளவு எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள்தூள் விளக்கெண்ணை விட்டு வதக்கி இளம் சூட்டுடன் ஆசன வாயில் வைத்து இரவில் கட்டிவர சில நாட்களில் வெளி மூலம் சுருங்கி விடும்.(தினமும் கட்டவும்)
4- நன்றாக செழித்து வளர்ந்த குப்பைமேனி செடியைத் தேவையான அளவு எடுத்து வந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் போட்டு நன்கு காய விடவும். காய்ந்த பின் இலை, வேர், தண்டு அனைத்தையும் இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும். இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு சேர்த்துப் பிசைந்து
காலை , மாலை என நாற்ப்பது நாள் சாப்பிட்டு வர அனைத்து மூல வியாதியும் குணமாகும் .
இந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரும் போது அதிக காரம், பச்சை மிளகாய், கோழிக்கறி சேர்க்கக் கூடாது. மிளகு சேர்த்துக் கொள்ளலாம். உடல் உறவு கூடாது
ம் அதிகரிக்கும்.
செய்முறை: 1 டம்ளர் ஆப்பிள் பழச்சாறு எடுத்து அதில் கேரட் சாறு மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து இரத்தம் சுத்தம் பெறும். உடல் பலம் அதிகரிக்கும்.
செய்முறை:
திராட்சை பழத்தை கழுவி சாப்பிட்டு வந்தால் சுரத்தை தணித்து மலச்சிக்கலை போக்கி இரத்தம் சுத்தமடையும்.
வல்லாரை இலைகளை எடுத்து அரை லிட்டர் நீரிலிட்டு நன்கு காய்ச்சி காலையில் மட்டும் பருகி வந்தால் இரத்த சுத்திகரிக்கப்பட்டு நினைவாற்றல் வளரும்.
அம்மான் பச்சரிசி கீரையுடன் 3 மிளகு, 3 வேப்பிலை சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
பாலில் பச்சை திராட்சையைப் போட்டு காய்ச்சி கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாமுருங்கைக் காய் சூப் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.முருங்கைக் காய் சூப் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்
துளசி ஊற வைத்த நீரைக் தினமும் குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும்..சித்த மருத்துவர்:9047225560 9047226992
நெருஞ்சியின் அளப்பரிய பயன்கள்:-
நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்த சிறு கொடிகள் சிறுநீர் தாரை நோய்கள் அத்தனையும் நீக்கும் குணம் வாய்ந்தது. மேலும் இது ஒரு ஆகர்ஷண மூலிகையாகும்.
இது சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும்.
கொடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும்.பயன்தரும் . நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும். இது ஒரு முட்செடி., சிறு சிறு முற்கள் உண்டு. .இந்தியாவில் எங்கும் பரவலாகக் காணப்படுகிறது.
தமிழகமெங்கும் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் காணலாம். மஞ்சள் நிற மலர்களையுடையது. மலர்கள் சூரிய திசையோடு திரும்பும் தன்மையுடையன. இதன் காய் முற்றிக் காய்வதால் முள்ளுடன் இருக்கும்.
இதன் பெரு நெருஞ்சிலை யானைவணங்கி என்பர்.பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும்.
இதன் இலையை ஒரு குவளை தண்ணீரில் சிறிது நேரம் இட்டால் ,தண்ணீர் அடர்த்தி மிகுந்து கெட்டியாகிவிடும் .பார்ப்பதற்கு அதிசியமாக இருக்கும் .எண்ணெய் போல் பிசுபிசுப்பு ஆகிவிடும் .இதுவும் ஒரு மருந்து ,இது காமவர்த்தினி .ஆண்மை பெருக்கி . .மேலும் இது பட்டுத்துணிகளை சுத்தப்படுத்தும்.
யானை நெருஞ்சலைப் பிடுங்கி நீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும். இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு, கறை அகலும்.
இது எந்த ரசாயனமும் இல்லாமல் இயற்கை முறையில் பட்டு முதலிய துணிவகைகளை சுத்தம் செய்து கரைகளை எடுக்கும் .ஒரு பயோ சலவையகம் கூட துவக்கலாம்.
சிறு நெருஞ்சில் பசுமையான புல் தரைகளிலும், மற்ற இடங்களிலும் தரையோடு தரையாக படர்ந்து வளரும். இதனுடைய இலைகள் பார்ப்பதற்கு புளிய இலைகள் போல் இருக்கும். ஆனால் அவற்றை விட சிறிய அளவிலும், பூக்கள் ஐந்து இதழ்களிடன் மஞ்சள் நிறமாக சிறியதாகவும் இருக்கும்.
பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும்..இவை குணத்தில் மாறுபடுவதில்லை. இதன் இனப்பெருக்கம் விதைமூலம் செய்யப்படுகிறது.
இது குளிர்ச்சி உண்டாக்கி , சிறுநீர் பெருக்கி , உரமாக்கி , உள்ளழலகதறி ,ஆண்மைப்பெருக்கி
நாம் உண்ணும் உணவின் சாரத்தின் பகுதி சிறு நீரகத்தில் நீராக பிரிக்கப்பட்டு சிறுநீராய் வெளியாகிறது. இந்நீரில் பல வகைப்பட்ட உப்புகள் நிறைந்திருக்கின்றன. இவ்வுப்புகள் சில வேளை சிறுநீரகத்தில் தங்கி உறைந்து பெருத்து வளர்கிறது. இதுவே கல்லடைப்பு நோயாகும். நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது.
உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது. ஆனை நெருஞ்சில்: மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல். இவைகளை தரும் . இது ஒரு சும்மா கிடைக்கும் வயகரா .!
சாப்பிட்டுப்பார்த்தால் தான் தெரியும் அதன் வலிமை. நம்மிடையே இருக்கும் ஆண்மை பெருக்கி மருந்துகள் பல இன்னும் சரிவர பயன்படுத்தாமல் இருக்கிறது .நெருஞ்சல் வித்தினைப் பாலில் புட்டவியல் செய்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வரத் தாது கட்டும்.
இது ஒரு ஊக்கி மருந்து ஆகும்
நெருஞ்சில் செடி இரண்டு வேருடன் பிடங்கி, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.
நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும்.
சிறு நெருஞ்சில் இலைகளைப் பறித்து வந்து, அதில் அரை லிட்டர் அளவு சாறெடுக்கவும். கீழாநெல்லி இலைகளைப் பறித்து அதிலும் அரை லிட்டர் சாறெடுக்கவும். இரண்டையும் ஒன்றாய்க் கலந்து, இதில் கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும். இத்துடன் சம அளவு சிறுபீளை வேர், சீந்தில் இலை, வில்வ இலை, தென்னம்பாளை அரிசி ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, சிறுநீரகங்களைப் பற்றிய நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், சிறுநீரில் சீழ் உண்டாகுதல், சிறுநீர் அடிக்கடி கழிதல் சிறுநீரகச் செயற்பாடு குறைவு போன்ற குறைகள் நீங்கி, சிறுநீரகம் செழுமையாய் செயற்படும். டயாலிசிஸ் செய்தது லக்ஷக்கணக்கில் பணத்தையும் உடல் நலத்தையும் இழக்கவேண்டாம்.
இதனை எளிய மருந்தாய் எண்ணி உதாசீனப்படுத்த வேண்டாம். சித்தர்களின் சுவடிகளில் சொல்லப்பட்ட அரிய மருத்துவ முறை இது.சிறிது சிரத்தை எடுத்தால் சீரும் சிறப்புமாக சிறு சிறுநீரகததைப் பற்றி கவலைப் படாமல் வாழலாம்
முருங்கையின் மகத்துவம் !!!
இன்று நாம் பேச இருப்பது முருங்கைக் கீரை.
முருங்கைக்கீரை என்று சொன்னால் இது மிகச் சாதாரணமாக வளர்க்கக்கூடிய ஒரு அற்புதமான கீரை. அதாவது கீரைகளின் ராணி என்று சொன்னால் அது இந்த முருங்கைக் கீரையைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த முருங்கைக்கீரை நிறைய நபர்களுக்கு ஒத்துவராது, சாப்பிடத்தோன்றாது, ருசியாகவும் இருக்காது என்று மிகப்பெரிய ஒரு புகார் பட்டியல் இந்த முருங்கைக்கீரை மீது உண்டு. ஏனென்றால் நாம் அப்படித்தான், மிக ருசியாக எதுவெல்லாம் எண்ணெயில் போட்டு பொறிக்க முடியுமோ, எதுவெல்லாம் எண்ணெயில் போட்டு வறுக்க முடியுமோ, எதுவெல்லாம் சாப்பிடுகிற பொழுது நாக்கிலிருந்து நீர் சொட்டுகிறதோ அதை மட்டுமே ரசிக்கக்கூடிய, அரவணைக்கக்கூடிய பக்குவமான மனசுக்கு சொந்தக்காரர்கள். ஆக சத்தான உணவுகளை புறந்தள்ளுவது என்பது நமக்கு கைவந்த கலை. அதே நிலையில் இருக்கிற பொழுதுதான் நமக்கு பல்வேறுபட்ட நோய்கள் வருகிறது என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக முருங்கைக்கீரையை நீங்கள் மறக்க மாட்டீர்கள்.
இந்த முருங்கைக்கீரையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தோம் என்றால் சுண்ணச்சத்து. நம் உடலுக்கு உரு கொடுக்கக்கூடியது எது என்றால் எலும்புகள், நரம்புகள், தசை. இந்த மூன்றையும் வலுப்படுத்தக்கூடிய தன்மை இந்த முருங்கைக்கு உண்டு. முருங்கைமரத்தில் இருக்கக்கூடிய முருங்கை வேரிலிருந்து அதாவது முருங்கை வேர், முருங்கைப் பட்டை, முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, முருங்கை விதை, முருங்கை பிசின், முருங்கை இலையை இணைக்கக்கூடிய ஈர்க்கு என்று சொல்லுவோம் அந்த குச்சு வரைக்கும் மருந்தாகக்கூடிய ஒரு அற்புதமான ஒரு மூலிகை எதுவென்றால் இந்த முருங்கை என்றுதான் சொல்லவேண்டும். பண்டைய சமூக மரபிலே இருக்கக்கூடிய வீடுகளிலே வீட்டுக்கு பின்புறமாக ஒரு முருங்கை மரம் இருக்கும். இந்த முருங்கை மரம் அழகுக்காக வைப்பதில்லை, முருங்கை மரத்தை உணவாகக் கொள்வதற்காக அவர்கள் வைத்தார்கள், வளர்த்தார்கள். இன்று முருங்கைக்கீரையைப் பார்த்தோம் என்றால் நாம் வெகுவாக மறந்துவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். சமீபத்தில் ஏற்பட்ட உணவியல் சார்ந்த விழிப்புணர்வு, என்னைப்போன்றவர்கள் நிறைய உணவியல் சார்ந்து எழுதி எழுதி இன்று மக்களிடையிலே மிகச்சிறந்த விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது.
சென்னையில் பார்த்தோம் என்றால் முருங்கைக்கீரைக்கு ஏகப்பட்ட தேவை. மக்கள் விரும்புகிற அளவுக்கு இன்று முருங்கைக்கீரை சென்னையில் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு முருங்கைக்கீரையைத் தேடக்கூடிய ஆரோக்கியமான ஒரு சந்தைக்கூட்டம் உருவாகியிருக்கிறது. மக்கள் தங்களுடைய உடல் நிலையைப் பற்றி அறிந்துகொள்ளக்கூடிய ஒரு பக்குவமான நிலைக்கு இன்று வந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் அடிப்படையில் சிறுதானியங்களான வரகு, திணை, குதிரைவாலி, சாமை, கம்பு, சோளம், கேழ்வரகு இதுவெல்லாம் இன்று மக்களிடையே புழக்கத்தில் ஒரு சாதாரண நிலைக்கு வரக்கூடிய சூழலுக்கு வந்திருக்கிறது. முருங்கைக் கீரையை தேடிப்பெறுவதற்கும் நிறைய நபர்கள் இப்போது வந்திருக்கிறார்கள். ஆக இதையே சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முருங்கை மரம் வளர்த்து முருங்கைக்கீரையை வணிகமாகக் கொண்டு செல்லக்கூடிய ஒரு கூட்டமும் உருவாகியிருக்கிறது, அது நல்லது வரவேற்கக்கூடியதும் கூட. அப்படி இந்த முருங்கைக்கீரையில் என்ன சத்துக்கள் அதிகமாக இருக்கிறது என்றால் கால்சியம், சுண்ணாம்புச்சத்து. சுண்ணாம்புச்சத்து மிக அதிகமாக இருக்கக்கூடிய ஒரு மூலிகை எதுவென்றால் முருங்கைக்கீரைதான்.
நூறு கிராம் முருங்கைக்கீரையை நீங்கள் சமைத்து சாப்பிட்டீர்கள் என்றால் ஐநூறு மில்லிகிராம் அளவு கால்சியம் கிடைக்கும். அதாவது ஒன்று புரிந்துகொள்ளவேண்டும், எப்போதுமே இயற்கையாக இருக்கக்கூடிய உணவு மூலகங்களிலிருந்து பெறக்கூடிய சுண்ணச்சத்து என்பது நமது உடம்பை எந்த வகையிலும் பாதிக்காது, நமது உடம்பில் எங்கும் போய் சேர்மானம் ஆகாது அதாவது deposit ஆக சேராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செயற்கைத்தனமாக உருவாக்கப்பட்ட சுண்ணச்சத்து என்று சொல்லக்கூடிய கால்சியம் மாத்திரைகள் அதாவது நவீன மருந்துகள் அடிப்படையில் வரக்கூடிய கால்சியம் மாத்திரைகளை நீங்கள் மருந்தாகக் கொள்ளும் பொழுது அது பல்வேறு விதமான பக்கவிளைவுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த நவீன மருந்துகள் கொடுக்கக்கூடிய கால்சிய மாத்திரைகள் அளவுக்கு மீறும் பொழுது அது உடம்பிலே சேர்மானம் ஆகாது அதாவது அது சில நேரங்களில் சிறுநீரகக் கற்கலாக உருவெடுக்கலாம். ஆனால் இயற்கை மூலகங்கள் என்று சொல்லப்படுகிற கீரைகளிலிருந்து கிடைக்கக்கூடிய சுண்ணச்சத்தானது நமது உடம்பில் சேர்மானம் ஆக சேராமல் சக்தியாக உடல்முழுவதும் நிரவும் என்பதை மனதில் நினைவில் கொள்ளுங்கள். ஆக நிறைய நபர்கள் கீரை சாப்பிட்டால் சிறுநீரகக்கற்கள் வரும் என்று தனக்குள்ளே ஒரு முறையை ஏற்படுத்திக்கொண்டு கீரையை வெறுக்கக்கூடிய ஒரு சூழலை இன்று ஒரு சில மருத்துவ முறைகள் ஏற்படுத்தி வருகின்றன என்பதை நினைக்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கின்றது. கீரைகளில் சக்தியாக நிலவக்கூடிய சுண்ணச்சத்துகள் உடம்பிற்கு நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முருங்கைக்கீரை நல்லதா?, பால் நல்லதா?, பாலில் கால்சியம் அதிகமா?, முருங்கைக்கீரையில் கால்சியம் அதிகமா? என்று பார்க்கும் பொழுது முருங்கைக்கீரையில் மிக அதிக அளவில் கால்சியம் இருக்கிறது. அதாவது பாலை விட 17 பங்கு கால்சியம் என்னும் சுண்ணாம்புச்சத்தை தனக்குள் கொண்டிருக்கக்கூடியது முருங்கைக்கீரை. இந்த முருங்கைக்கீரையைத் தொடர்ந்து விடாமல் சாப்பிடுபவர்களுக்கு எலும்பு நல்ல வலுவாகும், எலும்புகளுக்கு உள்ளே இருக்கக்கூடிய மச்சை அதாவது platelet counts மிக அதிக அளவு உருவாகும். நமது உடம்பை மேம்படுத்தக்கூடிய சிவப்பணுக்களுடைய எண்ணிக்கையை அதிகப்படுத்தக்கூடிய தன்மை இந்த முருங்கைக்கீரைக்கு உண்டு. ஹீமோகுளோபின் அளவு நிறைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகக் குறைவாக இருக்கக்கூடிய ஒரு சூழலில் இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இந்திய அளவில் பார்க்கிற பொழுது நிறைய நபர்கள் பாதிக்கப்பட்ட ஒரு நோய் எதுவென்றால் இரத்த சோகை (Anemic). ஏனென்றால் இந்தியா ஒரு வளரும் நாடு, வளரும் நாடுகளில் எப்பொழுதுமே பசி, பிணி, பட்டினி இவை மூன்றும் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கும். அதற்குக் காரணம் என்பது முறையான கல்வி, முறையான விழிப்புணர்வு இல்லாத நிலையைத்தான் நாம் சொல்ல முடியும். ஒரு நல்ல பொருளாதார வளமிக்க நாடு என்பது மக்களிடையே மிக அற்புதமான அளவில், ஏராளமான அளவில் ஆரோக்கிய கருத்துக்களைக் கொண்டு செல்ல இயலும், ஆனால் வளரும் நாடுகளில் கருத்துக்கள் கொண்டு செல்லப்பட்டாலும் அதை ஏற்கும் நிலையில் மக்கள் இல்லாத காரணத்தினால், சரியான விகிதாச்சார அடிப்படையில் சரிவிகித உணவு இல்லாத காரணத்தினால், பற்றாக்குறையினால் சமச்சீர் உணவு இல்லாத காரணத்தினால் பல்வேறுபட்ட நோய்களில் மக்கள் உழண்று கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இந்த முருங்கைக்கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கிறது, இதை அரசுகளே மக்களிடையே எடுத்துச் செல்லலாம். சாதாரணமாக பார்த்தோம் என்றால் ஊட்டச்சத்து சார்ந்த ஒரு துறை nutritional board என்று சொல்வோம். nutritional board என்பது இந்திய அரசு ஆளுகைக்கு உட்பட்ட ஒரு board. பல்வேறுபட்ட உணவுகளை வகுத்து பல்வேறுபட்ட உணவுகளில் இருக்கக்கூடிய சத்துக்களை பகுத்து ஆய்வு செய்து, மக்களிடையே கொண்டு செல்லக்கூடிய துறை nutritional board என்று சொல்லக்கூடிய துறை. அந்த உணவுத்துறையானது ஆய்வுசெய்கிறார்கள், ஆய்வுசெய்த விசயங்களை மக்களிடையே கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு நம்முடைய அமைப்பு முறைகள் இல்லாத காரணத்தினால் மிகவும் நோய்களுக்கு உட்படக்கூடிய ஒரு சூழல் நம்மிடையே இருக்கிறது. எனவே நல்ல ஒரு ஊட்டமான உணவு எது, ஒழுங்கான உணவு எது, முறையான உணவு எது என்பதை அரசையே நம்பி இருக்காமல், நாமே தனிப்பட்ட முறையில் சில ஆய்வுகளை செய்து அதை சரிசெய்துகொள்வதுதான் முறையாக இருக்கும்.
இன்றைய அளவில் கர்ப்பிணிகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கவேண்டும் என nutritional boardஎன்று சொல்லக்கூடிய உணவுத்துறை ஆய்வுகள் செய்கிறது. முதல் மாதம் என்ன உணவு தரவேண்டும், இரண்டாவது மாதம், மூன்றாவது மாதம் என்று முறையாக உணவுகள் கொடுக்கிறபொழுது அறுவை சிகிச்சை இன்றி அற்புதமாக குழந்தையைப் பெற இயலும் என்று அந்தத் துறை சொல்லுகிறது. ஆனால் நம்மிடையே அந்த விழிப்பு இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆக நம் உடம்பில் இருக்கக்கூடிய இரத்தப் பற்றாக்குறையிலிருந்து, எலும்புகள் வலுவிலிருந்து, எலும்புகளை மேம்படுத்துவதிலிருந்து, எலும்புகளுக்கு ஊடாக இருக்கக்கூடிய இரத்தத்தட்டுக்களை உற்பத்திபண்ணுவதிலிருந்து மிகச்சிறந்த பலனை தனக்குள் கொண்டது முருங்கைக்கீரை.
ஒரு சிலரைப் பார்த்தோம் என்றால் அதிகாலையில் எழுந்த உடனே பத்திலிருந்து நூறு தும்மல் தும்மக்கூடிய நபர்கள் நிறைய இருக்கிறார்கள். தும்மல் வந்தது என்றால், அது நேராக தும்மலின் அதிர்வானது இதயத்திற்குச் சென்று மறுபடியும் அங்கு இருக்கக்கூடிய சில நீர் திவளைகளை வெளியேற்றுவதற்காக இந்தத் தும்மல் வரும். அதே மாதிரி அந்த மாதிரி தொடர்ந்து தும்மல் வருகிற பொழுது சில நேரங்களில் அது இதயம் சார்ந்த பிணிகளை உருவாக்கும். இன்னும் அதீதமான தும்மல் வருகிற பொழுது மூக்கிலிருந்து இரத்தம் வரக்கூடிய சூழல் உண்டாகும். ஒரு சிலருக்கு அதிகமான தும்மலில் காதிலிருந்து இரத்தம் வருவதுண்டு. இன்னும் ஒரு சிலருக்கு இந்தத் தும்மல் கடுமையாகி தொண்டையிலிருந்து இரத்தம் வருவதும் உண்டு. அதனால்தான் இந்தத் தும்மல் வியாதியை இரத்தப் பீணிசம் என்று சொல்லுவோம். இந்த இரத்தப் பீணிசம், பீணிசம், நீர்கோர்வை (அதாவது (dropsy) தலையில் நீர் கோர்க்கக்கூடிய தன்மை) இதுவெல்லாம் வருகிறது என்றால் சரியான உணவு இந்த உடம்பிற்குத் தராத காரணத்தினால் வருகிறது என்பது முதலில் முழுமையாக நினைவில் கொள்ளுங்கள். ஆக சத்தான உணவு எது, தரமான உணவு எது, தேவையான சத்துக்களை தன்னுள் நிரப்பிய உணவு எது என்ற பட்டியலை நீங்கள் முழுவதுமாக தயார் செய்யவேண்டும். அப்படி நீங்கள் பட்டியல் செய்கிற பொழுது முருங்கைக்கீரைக்குத்தான் முதலிடம் கொடுக்கவேண்டும் என்பது எனது திடமான திண்ணமான எண்ணமும் கூட.
முருங்கைக்கீரையில் கால்சியம் மட்டும்தான் இருக்கிறதா என்றால் அல்ல, தேவையான அளவு இரும்புச் சத்தும் தனக்குள் உள்ள அற்புதமான மூலிகை இந்த முருங்கைக்கீரை. நான் சொன்னேன் இல்லையா ஹீமோகுளோபின் குறைவாக இருத்தல் (Anemic) இரத்த சோகையை முழுமையாக ஓட ஓட விரட்டக்கூடிய ஒரு மூலிகை எது என்றால் முருங்கைக்கீரைதான். ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை எடுத்து மூன்று மிளகு சேர்த்து நன்றாக அரைத்து சாறெடுத்து பச்சையாக அந்த சாறை விடாமல் பத்துநாட்கள் சாப்பிட்டு வந்தோம் என்றால் கண்டிப்பாக இரத்த அளவு அதிகமாக ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். ஒரு நபருக்கு ஹீமோகுளோபின் என்று சொல்லக்கூடிய சிவப்பணுக்கள் குறைவாக இருக்கிற நேரத்தில்தான் அவரது உடம்பில் ஒவ்வாமை என்று சொல்லக்கூடிய அலர்ஜி மிகவும் அதிகமாகும். இந்த அலர்ஜிதான் sinusitis ஆக மாறும். ஆக ஒவ்வாமை கூறுகளை விரட்டுவதற்கு ஏற்ற ஒரு ஒப்பற்ற ஒரு மூலிகை எது என்றால் முருங்கைக்கீரை. இந்த முருங்கைக்கீரை என்பது உடம்பில் இருக்கக்கூடிய ஒவ்வாமையை முழுமையாக அகற்றக்கூடிய தன்மை உள்ளது.
காலையில் எழுந்து தும்மக்கூடிய தும்மலை முழுமையாக விரட்டக்கூடிய தன்மை இந்த முருங்கைக்கீரைக்கு உண்டு. இந்த முருங்கைக்கீரையை நீங்கள் சூப் மாதிரி கூட செய்து சாப்பிடலாம். மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, சிறிது உளுந்து சேர்த்து அரைத்த பொடியுடன் முருங்கைக்கீரையும் சேர்த்து நன்றாக அவித்து சாறு எடுத்து சாப்பிட்டோம் என்றால் கைகால் வலி, உடம்புவலி, மூட்டுவலி, கழுத்து வலி எல்லா நோய்களுக்கும் கேட்கக்கூடிய மிக அற்புதமான பொருள் எதுவென்றால் இந்த முருங்கைக்கீரையை நாம் சொல்லியே ஆகவேண்டும்.
இந்த முருங்கைக்கீரையை நீங்கள் வேறு ஒரு முறையிலும் பயன்படுத்தலாம். ஒரு சிலருக்கு இந்த முருங்கைக்கீரையை சாப்பிட்டால் வயிறு வலிக்கும், பேதியாகிறது என்று சொல்லக்கூடிய சில பக்கவிளைவுகள் உண்டு. அதற்கான காரணம் என்னவென்றால் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்தும், அளவுக்கு அதிகமான கால்சியமும் முருங்கைக்கீரையில் இருப்பதால் ஒரு சிலருக்கு இந்த முருங்கைக்கீரை செரியாமை என்பதைக் கொண்டுவந்து கழிச்சலை உண்டாக்கும். ஒரு சிலருக்கு வாந்தி வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. எனவேதான் எந்தக் கீரையாக இருந்தாலும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், எல்லா கீரைகளையுமே பார்க்கும் பொழுது மந்தமான தன்மை உடையது, எளிதில் கீரை செரிமானமாகாது, ஆனால் மிக எளிய உணவு. ஒரு நபர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொன்னால் மிக எளிமையாக கீரையை வைத்து குறைக்க முடியும். காலையில் முருங்கைக்கீரையை மட்டுமே கடைந்து சாப்பிடுவது அல்லது வெறும் முருங்கைக்கீரையை சூப் மாதிரி செய்து வைத்துக்கொண்டு வேறு ஏதாவது பப்பாளிப்பழம் அல்லது கொள்ளை அவித்து சிறிதளவு அதாவது காலையில் முருங்கைக்கீரை சூப்பும் கொள்ளு சிறிதளவும் அல்லது முருங்கைக்கீரை சூப்பும் பப்பாளியும் மாலையில் மறுபடியும் முருங்கைக்கீரையை சூப் இரவு நேரத்தில் ஒரு சிற்றுண்டி என்று இந்த மாதிரி ஒரு உணவுப்பழக்கத்தைத், தொடர்ந்து ஒரு மாதம் இரண்டு மாதம் பழக்கப்படுத்துகிற பொழுது கண்டிப்பாக உடல் எடை குறையும். ஏனென்றால் குறைவான கலோரி உள்ளது.
நூறு கிராம் முருங்கைக்கீரையை எடுத்தீர்கள் என்றால் கண்டிப்பாக அதில் இருக்கக்கூடிய கலோரியின் அளவைப் பார்த்தோம் என்றால் கிட்டத்தட்ட 60 கலோரி இருக்கும். ஆனால் நாம் சாப்பிடக்கூடிய ஒரு இட்லிக்கு 60 கலோரி உண்டு. நாம் சாதாரணமாக 6 இட்லி சாப்பிட்டோம் என்றால் மொத்தமாக 360 கலோரி வரும். அதற்கு நான்கு வகையான சட்னி சேர்ப்போம் அதிலிருந்து ஒரு கலோரி கிடைக்கும், அடுத்து அந்த சட்னியில் சேர்க்கப்பட்ட எண்ணெயின் தரத்திற்கு தகுந்தவாறு எண்ணெயில் ஒரு கலோரி இருக்கும். இம்மாதிரி இருப்பதனால் அது உடலுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவாக கருத இயலாது. ஏனென்றால் இட்லியில் இருக்கக்கூடிய அமிலத்தன்மை, எண்ணெயில் இருக்கக்கூடிய கொழுப்புத்தன்மை, பிறகு சட்னியில் சேர்க்கப்பட்ட காரத்தன்மை, மாவின் புளிப்புத்தன்மை இப்படி எல்லாமே சேருகிறது. நான்கு இட்லி சாப்பிட்டால்கூட கீழே இருக்கக்கூடிய வயிறு நெஞ்சுக்கு வரக்கூடிய சூழலை நாம் அனுபவிக்கிறோம்.
ஒரு சில உணவுகளை எடுக்கிற பொழுது நிறைய தண்ணீர் தாகம் எடுக்கிறது என்றால் உணவு சரியில்லை என்று அர்த்தம். தோசை எடுக்கிறோம், தோசையை சாப்பிட்டு முடித்த பிறகு அரைலிட்டர் அல்லது ஒரு லிட்டர் தண்ணீர் குடித்தால்தான் சமமாகிறது என்றால் அந்த உணவு அவ்வளவு புளிப்பானது, உடம்பிற்குக் கேடானது என்று அர்த்தம். எந்த ஒரு உணவையும் சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்துதல் கூடாது என்றே சொல்வார்கள், உணவை சாப்பிடுவதற்கு முன்புதான் தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு உணவை சாப்பிடுகிற பொழுது தண்ணீர் தேவைப்பட்டால் அந்த உணவு அந்த உடம்புக்கு சரியல்ல என்று அர்த்தம். ஆக முருங்கைக்கீரை சூப் சாப்பிட்டுப் பாருங்கள், முருங்கைக்கீரை சாறு சாப்பிட்டுப் பாருங்கள் அப்பொழுது அந்த தாக உணர்வு இருக்காது.
இப்பொழுது முருங்கைக்கீரை கஞ்சி, இந்த முருங்கைக்கீரையை கஞ்சி மாவுமாதிரி நாம் செய்யப்போகிறோம் என்பதைப் பற்றி நாம் பேசுவோம். பழைய தமிழ் மரபுகளில் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக செய்த உணவு. எங்கள் கிராமத்தில் பண்ணக்கூடிய ஒரு சின்ன விசயம் ஆடிக்காற்றில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய முருங்கை மரங்கள் எல்லாம் உடைந்து கீழே விழுந்துவிடும். அப்படி விழுந்த அந்த முருங்கைமரத்தில் இருக்கக்கூடிய இலையை கடைந்து சாப்பிடுவது, சூப் செய்து சாப்பிடுவது முடியாத ஒரு காரியமாக மாறிப்போகும்.
அந்த மாதிரி நேரங்களில் என்ன செய்வார்கள் என்றால் இலையை எல்லாம் எடுத்து அரைத்து சாறாக்கி, அந்த சாறு இரண்டு லிட்டர் சாறு இருக்கிறது என்றால் அதில் ஒரு கிலோ பச்சரிசியை அதில் சேர்த்து, அதில் ஐம்பது கிராம் மிளகையும் சேர்த்து, கூடவே இருநூறு கிராம் சிறுபருப்பு சேர்த்து, சிறிது சுக்கு ஏலக்காய் சேர்த்து வெயிலில் காயவைக்கவேண்டும். காயவைத்தோம் என்றால் அரிசி உணவுப்பொருட்கள் எல்லாமே அந்த சாறை இழுத்துவிடும். அதனை மறுபடியும் காயவைத்து ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும். குருணை அரிசிமாதிரி பொடித்துவைத்துக்கொண்டு கஞ்சியாக செய்துகொள்ளலாம். இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம் அல்லது காலையில் மட்டும் சாப்பிட்டுக்கொண்டு வரலாம். இந்த மாதிரி கஞ்சி சாப்பிடுவதால் என்ன நன்மை என்று பார்க்கிறபொழுது முதுகெலும்பை வலுப்படுத்தக்கூடிய தன்மை இந்த கஞ்சிக்கு உண்டு.
இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது. அதே மாதிரி தொடர்ந்து பயணப்படக்கூடியவர்கள், இருசக்கர வாகனங்களில் போய் வரக்கூடியவர்களுக்கும் L4, L5 தேய்ந்து போகிறது. அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் ஒரு அரைமணிநேரத்தில் உட்கார்ந்த நிலையில் இயலாத ஒரு சூழல் உண்டாகும். அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது, L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய disc prolapse ஆவது இவையனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து எதுவென்றால் முருங்கைக்கீரைதான் என்று சொல்லவேண்டும். முருங்கைக்கீரைக் கஞ்சியை செய்துவைத்துக்கொண்டு 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும். இவ்வாறு சாப்பிட்டுக்கொண்டே வந்தால் உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும். என்னுடைய மருத்துவ அனுபவத்தில் பல்வேறுபட்ட அனுபவங்களை நான் பார்த்திருக்கிறேன். அதாவது கரு உண்டாகி அறுவைச்சிகிச்சை அடிப்படையில் குழந்தை பெற்ற நிறைய பெண்களுக்கு, ஒரு பத்து நிமிடம் கூட உட்காரமுடியாமல் இருந்த பெண்களுக்கு வெறும் முருங்கைக்கீரை கஞ்சியவே இரண்டு மாதம், மூன்று மாதம் கொடுத்து நான் முழுமையாகக் குணப்படுத்தியிருக்கிறேன் என்ற ஒரு அற்புதமான அறிய தகவலை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆக முருங்கைக்கீரையை விடாமல் தொடர்ந்து சாப்பிடக்கூடிய ஒரு பழக்கவழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டீர்கள் என்றால் மிகவும் அற்புதமாக இருக்கும்.
இதற்கு மட்டும்தான் இந்த முருங்கைக்கீரையா என்றால், ஆண்மையைக்கூட அதிக அளவு வலுப்படுத்தக்கூடிய தன்மை உண்டு. இன்றைக்கும் நீங்கள் தேனி, போடிநாயக்கனூர், சிவகாசி, சாத்தூர் போன்ற இடங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திலேயே இருக்கக்கூடிய ஒரு அற்புதமான வழக்கம், மிக எளிமையான மருந்தும் கூட. ஒரு ஐம்பது கிராம் எள்ளு புண்ணாக்கு, ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை, ஐந்து வெற்றிலை, ஒரே ஒரு துண்டு சாதிக்காய் இவற்றை ஒன்றிரண்டாக உரலில் போட்டு இடித்து அதை அப்படியே கசாயம் செய்து அவித்து அதை ஒரு டம்ளர் தினசரி சாப்பிட்டுக்கொண்டே வருவார்கள். யாரென்றால் ஒரு ஐம்பது அறுபது வயதைக் கடந்த ஆண்கள் சாப்பிட்டுக்கொண்டு வருவார்கள். அவர்களுடைய ஆண்மை நரம்புகள் தூண்டப்பட்டு ஒரு அபாரமான ஆண்மை சக்தி உண்டாகி ஒரு நீண்ட நேர போகத்திற்கு உரிய ஒரு அற்புதமான உடல்வாகை தரக்கூடிய இந்த கூட்டுக்கலவை மருந்துக்கு உண்டு. இதை ஏன் நீங்கள் முயற்சி செய்யக்கூடாது. ஆக இந்த முருங்கைக்கீரையில் இவ்வளவு அற்புதமான பலன்கள் உண்டு.
இன்னும் சொல்லப்போனால் அந்த முருங்கை மரத்தின் வேருக்கு இன்னும் கூடுதல் பலன் என்று சொல்லலாம். ஒரு சிலருக்கு வயிற்றில் கீரிப்பூச்சி, நாக்குப்பூச்சி என்று நிறைய பூச்சிகளுடன் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த வயிற்றுப் பூச்சிகளை முழுமையாக சரிசெய்யக்கூடிய தன்மை இந்த முருங்கை வேருக்கு உண்டு. இந்த முருங்கை வேரை ஒன்றிரண்டாக பொடித்து அதனுடன் சீரகம், சோம்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிட்டோம் என்றால், நான் சொன்ன எல்லா பிரச்சனைகளும் சரியாகும். பூச்சி புழுக்கள் இருந்தாலே ஒரு சிலருக்கு உடல் தேராது, மனக்குழப்பத்தில் இருப்பார்கள், மன அழுத்தத்தில் இருப்பார்கள், வீட்டில் உள்ள எல்லோரையும் ஒரு வழிசெய்துகொண்டிருப்பார்கள். ஒரு சிலர் இதனை மனநோய் என்று நினைத்துக்கொண்டிருப்போம், ஆனால் அது மனநோயாக இருக்காது. உள்ளே இருக்கக்கூடிய பூச்சியினால் இருக்கக்கூடிய பிரதிபலிப்பாகக்கூட இருக்கும். அந்த மாதிரி இருக்கிறது என்றால் முருங்கை வேரை எடுக்கிற பொழுது நல்ல பலன் கிடைக்கும். இன்னும் சில நேரங்களில் மனம் சார்ந்த நோய்களுக்கும் முருங்கை வேரை நமது பண்டைய சித்தர்கள் மருந்தாக பயன்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவு அற்புதமான பலனைக் கொடுக்கிறது இந்த முருங்கை.
ஒரு சிலர் உடல்வாகு மிகவும் ஒல்லியாக இருப்பார்கள், பற்கள் தெளிவில்லாமல் இரத்தம் வந்துகொண்டே இருக்கும், அதே போல் ஆண்மை சக்தி குறைவாக இருக்கும், குழந்தை பெறுவதில் சிக்கல் இருக்கும் என்றால் முருங்கை பூவை தினசரி ஒரு கைப்பிடியளவு எடுத்து பாலில் சேர்த்து வேகவைத்து அதை வடிகட்டி அதில், இரண்டே இரண்டு இதழ் குங்குமப்பூவை சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தீர்கள் என்றால் ஆண்மை சக்தி பெருகும், உயிரணுக்கள் அபாரமாக பெருகும். அந்த அளவிற்கு இந்த முருங்கைப்பூவுக்கு அற்புதமான குணம் உண்டு. முருங்கைப்பூவை துவையல் மாதிரியே வீட்டில் அரைக்கலாம். எனக்குப்பிடித்த துவையல்களிலேயே முருங்கைப்பூ துவையல் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கெல்லாம் முருங்கைப்பூ கிடைக்கிறதோ அதை எடுத்து வந்து சாப்பிடக்கூடிய ஒரு இயல்பு உண்டு. சமீபத்தில் எனது வாடிக்கையாளர் ஒருவர் திருவண்ணாமலையிலிருந்து முருங்கைப்பூவை வேறுஒருவர் மூலம் கொடுத்துவிடக்கூடிய அளவிற்கு நான் அதன் மேல் ஒரு காதலோடு இருப்பேன் என்று சொல்லலாம்.
முருங்கைப்பூ, வெள்ளரி விதை, பூசணி விதை, காய்ந்த மிளகாய், சிறிது கசகசா இவையனைத்தையும் சேர்த்து அரைத்து துவையலாக வைத்து சாப்பிடலாம். முருங்கைப்பூ துவையல், முருங்கைப்பூ சட்னி இவையனைத்தையும் செய்யலாம். நான் ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் உடலை மேம்படுத்தக்கூடிய உடலில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய இந்த உணவுகள் மறுபடியும் நமது சமூகத்தில் வளம் வரவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் நான் இதை சொல்லுகிறேன். நமது உணவுப் பழக்கவழக்கங்கள் மாறவேண்டும். ஏனென்றால் ஒரு அறிஞன் சொல்லுகிறான் “ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவன் வழிவழியாக பயன்படுத்தக்கூடிய உணவை அழித்தால் போதும்”, உணவு முறையை அழித்தால் போதும் ஏனென்றால் உணவுமுறைகளிலிருந்துதான் ஒரு மரபு கூறு என்று ஒன்று உற்பத்தியாகிறது. ஆக நமது உணவில் நாம் கவனம் செலுத்தவில்லை என்றால் கண்டிப்பாக நிறைய பிரச்சனைகள் வரும் என்பதை மனதில் கொள்ளுங்கள் எனது அன்பான சிறகு இணையதள நேயர்களே.
முருங்கையில் எண்ணற்ற பலன்கள் உள்ளது. என்னால் மணிக்கணக்கில் பேச இயலும், தொடர்ந்து புத்தகமே எழுத முடியும், முருங்கைக்கீரைக்கு என்னால் 300 பக்கத்திற்கு ஒரு புத்தகமே எழுத இயலும் அந்த அளவிற்கு மிக அற்புதமான பலன்களை தனக்குள் கொண்ட அற்புதமான ஒரு பொக்கிசம் என்றால் அது முருங்கைக்கீரையைத்தான் நாம் சொல்லவேண்டும்.
முருங்கை பிசினை உலகத்தில் தெரியாதவர்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். உடலை வலுப்படுத்த, உடலை இறுக்க, உடலை நல்ல ஒரு கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இந்த முருங்கை பிசின் மிகவும் நல்லது. இந்த முருங்கை பிசின் என்றால் என்ன? இந்த பிசின் என்பது மரத்திலிருந்து வெளித்தள்ளக்கூடிய கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியது. அதாவது முருங்கைமரத்தில் இருக்கக்கூடிய அதீதமான கால்சியம், சுண்ணச்சத்து, நார்ச்சத்து இவையனைத்தும் பிசினாக உருவெடுத்து அந்த மரத்திலிருந்து வெளிதள்ளும். மனிதனுக்குக்கூட பிசின் வெளிதள்ளும் உங்களுக்குத் தெரியுமா? எப்படி என்றால், கண்களில் பீழை சாடும். எந்த ஒரு மனிதனுக்கு கண்களில் பீழை சாடுகிறதோ அவனுக்கு தேவையான அளவு சுண்ணச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து இல்லை என்று அர்த்தம். தூங்கி எழுந்த பொழுது கண்களில் இறுதிப்பகுதியிலே பீழை சாறும், வெண்மை நிறத்தில் இருக்கும். ஒரு சிலருக்கு பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வெள்ளை வெள்ளையாக பீழையை எடுத்துக்கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி இருந்தது என்றால் இந்த மூன்று சத்துக்களும் மிகக்குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். மிகக்குறைவாக இருக்கக்கூடிய அந்தப் பிரச்சனையை நீங்கள் சரிசெய்ய வேண்டும் என்றால் முருங்கை மரத்திலிருந்து வெளித்தள்ளக்கூடிய அந்த பிசினை மருந்தாக மாற்றி சாப்பிட வேண்டும்.
முருங்கை பிசினை ஒன்றிரண்டாக பொடித்து நெய்யில் வறுத்து தூள் செய்வது மிக எளிது. இந்தத் தூள் செய்த பொடியை இரவுநேரத்தில் கொதிக்கின்ற நீரில் போட்டு அப்படியே வைத்திருந்து அதிகாலையில் வடித்து சாப்பிட்டீர்கள் என்றால் மிக அற்புதமான பலன் கிடைக்கும். நாம் உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று உடலைத் தேற்றக்கூடிய ஒரு சூழல் உண்டு. இது எதுவுமே செய்யத்தேவையில்லை அதிகாலை ஒருமணிநேரம் நடைப்பயிற்சி செய்து இந்த முருங்கை பிசினை ஊறவைத்து அப்படியே சாப்பிட்டுவிட்டு, பழஉணவை காலை உணவாக சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் ஒரு அற்புதமான உடற்கட்டு, உடற்வாகு கிடைக்கும் என்பதை உங்கள் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
இது மட்டுமா முருங்கை விதை, சந்ததி இல்லாத அனைவருக்குமே சந்ததி தரக்கூடிய அற்புதமான விதை. ஆண்களுக்கான உயிரணுக்களை அதிகப்படுத்தக்கூடிய விதை. முருங்கை விதையை பொடிசெய்து வைத்துக்கொண்டு காலை இரவு என்று சாப்பிடலாம். அல்லது நெரிஞ்சி முள், கோரைக்கிழங்கு, முருங்கை விதை, நீர் முள்ளி விதை இந்த நான்கையும் சமஅளவு எடுத்து பொடிசெய்து கொண்டு இதை காலை இரவு என்று இரண்டு வேளையும் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு வரும் பொழுது ஒரு இனிமையான தாம்பத்தியத்தோடு மனைவி மெச்சிய மனாளனாக வாழக்கூடிய ஒரு சூழலுடன் ஆயுள் முழுக்க வாழ இயலும். ஆகவே கீரைகளின் ராணியாம் முருங்கையைத் தொடர்ந்து நாடுங்கள், உங்களுக்கு தலை முதல் பாதம் வரை எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரிசெய்யக்கூடிய ஒரே ஒரு மூலிகை முருங்கை. அந்த முருங்கையை இருகை தூக்கி வழிபடுங்கள், அதை உணவாக பாவியுங்கள், தொடர்ந்து நூறாண்டு வாழுங்கள். வாழ்க நலமுடன் வளமுடன்.
மேலும் தொடர்புக்கு:
சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94 வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667
இணைய தளம்