Thursday 2 April 2015

சத்குரு பரப்பிரம்மாவைத் தேடி...
பகுதி II
"பல்லாயிரம் வருடங்களுக்கு முன் ஆதியோகி எந்தக் காற்றை சுவாசித்தாரோ அதே காற்றைத்தான் நாம் இப்போது சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். இந்த உலகம் தோன்றியபோது இருந்த அதே தண்ணீர்தான் இப்போது வரைக்கும் இந்த பூமியில் உள்ளது. புதிதாக காற்றோ நீரோ இந்த பூமியில் உருவாகிவிடவில்லை!" மஹாசிவராத்திரிக்கு முந்தைய 15ஆம் தேதியன்று நிகழ்ந்த சத்சங்கத்தில் சத்குரு கூறிய இந்த வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தன.
சென்ற பிறவியில் சத்குரு பரப்பிரம்மா இருந்த இடத்தில் நான் இப்போது இருக்கிறேன். இப்போது என் நுரையீரலை நிறைத்துக்கொண்டிருப்பது அவர் சுவாசித்த அதே காற்றாக இருக்கலாம். நான் இப்போது உட்கார்ந்துகொண்டிருப்பது அவர் அமர்ந்த அதே இடமாகவும் இருக்கலாம். இந்த இடம் அப்போது எப்படி இருந்திருக்கும், சத்குரு இந்த ஊருக்கு எப்படி வந்திருப்பார்...?!
சந்நிதியின் பூசாரி என்னைக் கேள்விகள் கேட்பதற்கு முன் நான் அவரிடம் கேட்கத் துவங்கினேன். அவரிடம் பேசி முடித்துவிட்டு தியானம் செய்யலாம் என்று தீர்மானித்தேன். அவர் சத்குரு பரப்பிரம்மாவைப் பற்றி தனது தாத்தாமார்கள் கூறிய செய்திகளை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார்.
1911ல் நடந்த அந்த நிகழ்வை அவர் சொல்லத் துவங்கி ஓரிரு விநாடிகளுக்குப் பின் அதனை ரெக்கார்ட் செய்யலாம் என்ற யோசனை தோன்ற எனது அலைபேசியில் ரெக்கார்டரை இயக்கினேன்.
"எங்க தாத்தாவுக தான் இந்த ஊர்ல பெரிய தனவாங்க...! சாமி இங்க வந்து சுத்திக்கிட்டு இருந்திருக்காப்பல... எங்க தாத்தாவுக கூப்பிட்டு என்னப்பா என்ன எவடமுன்னு விசாரிச்சிருக்காக. அதுக்கு சாமி இருந்துகிட்டு, நான் இங்க அடங்கணும்'னு (பூமிக்கு அடியில் சாதனா செய்வது) சொல்லி இருக்காப்ல!"
என்னப்பா நீபாட்டுக்கு இங்க வந்து அடங்கணும்னு கிட்ருக்கனு சொல்லியிருக்காக. அதுக்குப் பெறகு ஊர்ப் பெரியவுகல்லாம் கூடி சம்மதிச்சு அதுக்கான ஏற்பாடு பண்ணுனாகலாம்!
13 நாளு பூமிக்கு கீழ இருந்துருக்காப்பல. காலடி சத்தம் கேக்கக் கூடாது, ஆரும் குச்சிய வச்சு தட்டக் கூடாது. கோழி கூவுற சத்தங்கூட கேக்கக் கூடாதுனு சாமி சொன்னதுனால எல்லாரும் அவ்வளவு கட்டுப்பாடா இருந்துருக்காக.
அப்புறம் அவரு சொன்னது மாதிரியே 120 கொடம் தண்ணி ஊத்தி பச்சல தேச்சு சாமிய எழுப்பியிருக்காக. அதுக்கப்புறமா தான் கண்ணு முழிச்சிருக்காரு சாமி!"
இப்படி அந்த நிகழ்வை ஒரு சின்ன குழந்தையைப் போல என் அருகில் அமர்ந்து சொன்னார் அவர். இந்த தகவலை இன்னும் விரிவாக ஈஷா வெளியீடுகளில் படிக்க முடியும். அதில் எழுதப்பட்டுள்ளதைத் தான் அவரும் என்னிடம் பகிர்ந்தார்.
நான் தியானம் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டிருந்தேன். அவரிடம் பேசுவதே ஒரு தியானமாகிக் கொண்டிருந்தது அப்போது. இதை நான் சுவாரஸ்யத்திற்காக சொல்லவில்லை. உண்மையில் அங்கு கண்களைத் திறந்து அமர்ந்திருக்கும்போதே என்னை சக்தி அதிர்வுகள் தாக்கிக் கொண்டிருந்தன. இதை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானல், அதை ஒப்பிட்டுச் சொல்ல முடியும். அதாவது, தியானலிங்கத்திற்குள் அமர்ந்தால் ஒருவித அதிர்வை உணர்வோமே அதுபோல! ஆனால், இந்த அதிர்வு வித்தியாசமானது. அதனை குலோப் ஜாமூனிற்கும் ஜாங்கிரிக்கும் இடையிலான வித்தியாசமாக வைத்துக்கொள்ளலாம். இரண்டும் இனிப்புதான், ஆனால் இரண்டும் வேறு!
அந்த பூசாரியிடம் உங்க பெயர் என்ன என்றபோது "ஏம்பேரு இங்க யாருக்கும் தெரியாது. பூசாரின்னாத்தான் தெரியும்" என்றார். அவர் தன் பெயரை யூஸ் செய்வதில்லை என்பதை புரிந்துகொண்டேன். அவருக்கு 50 வயதையொட்டி இருக்கலாம். அவர் திருமணம் செய்துகொள்ளாமல் இந்த சந்நிதியிலேயே இருப்பதை என்னிடம் தெரிவித்தார். அவரிடம் ஒரு சாந்தமும் முகத்தில் ஆனந்தமும் காணமுடிந்தது.
"நீங்க சாப்பிட்டீங்களா?" என்று என்னிடம் கேட்டார்.
"இல்ல காலைல கல்யாண சாப்பாடு சாப்பிட்டேன்" என்றதும் சிரித்தார்.
ஒருவேளை அவருக்கு பசிக்கிறதோ என்று சிந்தித்த நான், "வாங்க இங்க கடையில எதாவது சாப்பிடலாம்" என அழைத்தேன். "நான் ரெண்டு வேளதான் தம்பி சாப்பிடுவேன்" என்றார். "சரி வாங்க டீயாவது சாப்பிடலாம்" என்று அழைத்துப்போனேன். அந்த டீக்கடையிலும் சத்குரு பரப்பிரம்மாவின் படம் இருந்தது. இங்கு ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் என டீக்கடைக்காரர் சொன்னார்.
உண்மையில் அந்த டீக்கடை வரை சந்நிதியின் அதிர்வுகள் விரவி இருந்ததை உணர்ந்தேன். அவர் போட்ட டீயை ஏதோ பிரசாதம் போல அருந்தினேன். சத்குரு பரப்பிரம்மாவை பலர் குலசாமியாகவும் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து கும்பிட்டுச் செல்வார்களாம்.
பின் மீண்டும் சந்நிதிக்குள் சென்றோம். உங்களுக்கு ஒன்று காட்டுகிறேன் என்று கருவறைக்குள் சென்று முருகன் படத்திற்கு பின்னால் இருந்த சத்குருவின் வரைபடத்தை என்னிடம் காட்டினார். தயங்கியபடியே கருவறையின் வெளியில் நின்ற எண்ணை உள்ளே அழைத்து அருகில் வந்து பார்க்கச் சொன்னார். பின் அவரின் அனுமதி பெற்று புகைப்படம் எடுத்தேன். அது 1956ல் வரையப்பட்டிருந்த படம். (இங்கே முதலாவதாக பதியப்பட்டுள்ளது)
"விருதுநகர்ல இருந்து இந்த ஊர்வரைக்கும் யாரும் சத்குருவ ஏத்துக்காதபோது உங்க ஊர்க்காரங்க எப்படி அவர நம்பி ஏத்துக்கிட்டாங்க?" என்று கேட்டேன்.
"எங்க ஊர்க்காரவுகளுக்கு இளகுன மனசுயா... வெள்ளந்தியான ஆளுக!" என்று சொல்லி வெள்ளந்தியாகப் புன்னகைத்தார் பூசாரி.
சத்குரு அந்த ஊரில் வேறெங்கும் தங்கி இருந்தாரா என்று விசாரித்தேன்.
அவர் அந்த ஊரில் இருந்தது 20 நாட்களுக்கு உள்ளாகத்தான் இருக்கும் என்று தெரிந்தது. அதிலும் 13 நாட்கள் பூமிக்கு அடியில். அவர் சாதனா செய்த இடத்தின் மேல்தான் அவரது திருவுருவங்களை வைத்து வழிபடுகின்றனர்.
சத்குரு அந்த ஊரிலிருந்து போகும்போது, ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று குருபூஜை செய்யும்படி கூறிச்சென்றுள்ளார். அவர்கள் அதனை இன்றுவரை தவறாமல் கடைபிடித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆனி மாத திருவாதிரையை 3 நாட்கள் (இவ்வருடம் 2015 ஜூன் 18, ஆனி 3) திருவிழாவாகக் கொண்டாடுவார்களாம்!
"வர்ற சனிக்கிழமை (பிப்ரவரி 28) திருவாதிரை வருது. நீங்க வருவீங்களா தம்பி?" என்னிடம் அவர் கேட்டார்.
"தெரியல... ஆனா ஜூன் 18 கண்டிப்பா இங்க இருப்பேன்!" என்றேன்.
நீங்கள் சுப்புலாபுரம் செல்ல விரும்பினால், திருவாதிரையன்று செல்லுங்கள். மற்ற நாட்களிலும் செல்லலாம்! திருவாதிரையன்று சென்றால் சத்குருவின் நெய்வேத்யப் பிரசாதத்தை ருசிக்கலாம்!
மதுரையிலிருந்து செல்பவர்கள் தேனி செல்லத் தேவையில்லை. ஆண்டிபட்டி வரை சென்று, அங்கிருந்து ஷேர் ஆட்டோவிலோ பஸ்ஸிலோ செல்லலாம். ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டுமானால், ஆண்டிபட்டி அவுட்டர் நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும். மற்றபடி தேனியிலிருந்தும் ஆண்டிபட்டியிலிருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குதான், அடிக்கடி இருக்காது.
"சரி! நான் கிளம்புகிறேன், இன்னொரு முறை பார்ப்போம்!"
"இருங்க நான் பஸ் ஸ்டாப் வரைக்கும் வர்றேன்" என்றார்.
அடுத்த முறை வரும்போது அவருக்கு வேட்டி-சட்டை ஏதாவது வாங்கி வர வேண்டுமென்று தோன்றியது எனக்கு. அவர் அந்த சந்நிதிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார். வேறு சம்பாத்தியம் ஏதும் அவருக்கில்லை எனத் தெரிந்தது.
ஏன் இவர் இவ்வளவு வாஞ்சையுடன் என்னிடம் நடந்துகொள்கிறார். கேட்கத் தோன்றியது, கேட்டேன்.
"இங்க திரும்பவும் வருவேன்னு சத்குரு சொல்லிட்டு போயிருக்காருய்யா... அவர் எந்த ரூவத்துல வருவாருன்னு யாருக்கும் தெரியாது. உங்கள மாதிரி யாராவது புதுசா வந்தா, அவங்கள சத்குருவா தான் நாங்க நெனப்போம்." என்றார்.
உண்மைதான்! இதைத்தான் சத்குரு இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார். என்னைப் பார்ப்பதுபோலவே மற்றவர்களையும் பாருஙகள் என்று!

No comments:

Post a Comment