Tuesday 10 July 2012

கடலோரப் பகுதிகளில் முந்திரி மரங்கள் பயிரிடப்பட்டன. தென்மாவட்ட வழக்கில் கொல்லாமரம், கொல்லாவு, கொல்லமாவு என்றெல்லாம் அழைக்கப்படும் இம்மரத்தினை வட மாவட்டங்களில் முந்திரிமரம் என்று மட்டுமே கூறுகின்றார்கள். கொல்லம் வழியாகக் கப்பலில் வந்ததால் இதன் விதையானது கொல்லாங்கொட்டையாகவும், பழம் கொல்லாம் பழமாகவும், மரம் கொல்லாமரமாகவும், முந்திரி விவசாயம் செய்பவர்கள் நம்புகின்றனர். அது மாமரம் போல செழித்து வளர்வதால் கொல்ல மாவு என்ற திருநாமமும் பெற்றது.
முந்திரி மரம் இருவித்திலை (dicotyledonous) தாவரப் பிரிவைச் சார்ந்தது. இதனைத் தமிழ் மொழியில் ‘முந்திரி; வங்காள மொழியில் ஹிஜிலி-பாதம்(Hijili-badam)ஹிந்தியில் காஜ்ஜு(kaaju) தெலுங்கில், ஜிடி.மமிடி, முந்த-மமிடி,(Jidi-mamidi, Muntha-mamidi) கன்னட்த்தில் ஜூருபிஜ்ஜா (Geeru bijja), மலையாளத்தில் அண்டி பருப்பு(Andiparupppu) என அழைக்கின்றனர். முந்திரி நல்ல பணப்பயிர் ஆகும். உடையார்பாளையம் வட்டர முந்திரி சாகுபடி விவசாயிகளிடம் நேரடி தகவல் திரட்டப்பட்டு இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் Cashew nut என்று அழைக்கப்படும். இம்மரமானது 15 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. நேராக மேல்நோக்கி வளர்வதை விட, அடர்த்தியாகப் பரவி, கிளைகள் பின்னிப்பிணைந்து, தரையை நோக்கிப் படர்ந்து, குடைபோல வளர்கின்றது. இம்மர உச்சியிலிருந்து விழுந்தாலும் எளிதில் யாருக்கும் உயிர்ச் சேதம் இல்லை. அறிவியல் ரீதியாக அனகார்டியம் ஆசிடென்டலே (Anacardium Occidentale) என்று அழைக்கப்படும். இந்த மரமானது அனகார்டியேசியே (Anacardiaceae) குடும்பத்தைச் சேர்ந்ததாகும். பிரேசில் நாட்டின் வட கிழக்குப் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இம்மரம் போர்ச்சுகீசியர்களால் பரப்பப்பட்டு, இப்போது, பெரும்பாலும் நிலநடுக்கோட்டு வெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாக வளர்க்கப்பட்டு வருகின்றது. முந்திரி மரத்தைப் போர்ச்சுகீசியர்கள் 16-ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தினார்கள்.

முந்திரி மரம் மற்றும் அதில் விளையும் பருப்புகளுக்கு எதிர்காலத்தில் அதிக விலையில் விற்கப்படும் என அவர்கள் நினைத்திருக்க முடியாது. பின்பு கேரளாவில் மண் அரிப்பைத்தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த மரங்கள் நடப்பட்டன. இன்று தமிழகம் முழுவதும் செம்மண், பொட்டல்மண் நிறைந்த பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. மேலும், மருத்துவக் காரணங்களுக்காக இந்த மரங்கள் நடப்பட்டதாகவும் சில தரப்பில் கூறப்படுகிறது.
போர்ச்சுகீசியர்கள் செய்த செயலால், இன்று முந்திரி பருப்பு ஏற்றுமதியில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகி இருக்கிறது. தற்போது முந்திரி மரம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றன. முந்திரி மரத்தின் சொந்த நாடு பிரேசில். அங்குள்ள கடற்கரைப்பகுதிகளில் முந்திரி மரங்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. மனித உடலில் உள்ள சிறுநீரகம் போன்ற வடிவில் இருக்கும். முந்திரிப் பருப்புகள் மாம்பழ மர இனத்தைச் சேர்ந்தவை. இந்தியாவிலும், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்கள், முந்திரிப்பழங்களையும், முந்திரிக் கொட்டையில் இருக்கும் பருப்பையும் சாப்பிடுகின்றனர். முந்திரிப்பழங்கள் சாராயம் வடிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த நூற்றாண்டில் தான் முந்திரிக்கொட்டை மற்றும் பருப்பின் மீதான கவனம் சர்வதேச நாடுகளில் அறிமுகமானது.

முந்திரிக்கொட்டையின் தோற்றம்:
முந்திரி மரம் மிக வேறுபட்ட கனிகளை தருவதாகும். இக்கனிகள் பூவிலிருந்து முதலில் உருவாகும். (அதனால் தான் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தாதே என்னும் பழமொழியும் தமிழில் சொல்லப்படுகின்றது). எல்லா வகைப் பழங்களிலும் கொட்டை அல்லது விதை பழத்தின் உட்பகுதியில் இருக்கும். ஆனால் முந்திரிப் பழத்தின் கொட்டை பழத்தின் வெளிப்பகுதியில் பழத்தோடு ஒட்டியிருக்கும். முந்திரி கொட்டை முன்பகுதியிலும் பழம் பின்பகுதியிலும் இருக்கும். அதன் பின்புறம் பார்க்க அழகாகத் திரண்டு நமக்குக் கிடைக்கும் கனியானது பொய்க்கனி என்று அழைக்கப்படுகிறது. மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு வண்ணங்களில் காணப்படும் இந்தப்பொய்க்கனியின் சுவை மற்றும் கொட்டையின் அளவுக்கேற்ப மக்களிடம் வரவேற்பு அதிகம். இந்தக் கொட்டையிலுள்ள பருப்பின் சுவையால் கவரப்பட்ட கப்பல்காரர்கள், தாங்கள் வந்த கப்பலையே விற்று வாங்கித் தின்றதாக ஒரு நாட்டுப்புறக் கதையும் உண்டு.

No comments:

Post a Comment