Tuesday, 27 August 2013

குழந்தைப் பேறு இல்லாதவர்களுடைய மனதில் உள்ள வலிகளை வர்ணித்து சொல்லி விட முடியாது. இதை நான் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு சொல்கிறேன் என்பதை விட அனுபவித்தவன் என்கிற வகையில் சொல்கிறேன். எங்கு சென்றாலும் அதன் தாக்கம் நிழல் போல் துரத்திக் கொண்டே வரும். ஏனென்றால் சமுதாயத்தில் முதல் கேள்வியே திருமணம் ஆகிவிட்டதா ? குழந்தைகள் எத்தனை ? இந்த இரண்டில் ஒன்றுதான். இல்லை என்றால் அதோடு விடுவார்களா ? என்றால், அது தான் இல்லை. அந்த கோவிலுக்கு போனீர்களா ? அந்த டாக்டரைப் பார்த்தீர்களா ? என்கிற நீதியில் ஆளாளுக்கு ஒரு வழிமுறைகளையும், உபதேஷங்களையும் சொல்லி குழப்பி விடுவார்கள்.

என் உறவினர், தம்பி முறை தன் குழந்தையைத் தொடக் கூட விடமாட்டார். சில இடங்களில் வந்து போன பிறகு குழந்தைக்கு மிளகாய் சுற்றி நெருப்பில் போடுவதுண்டு. நண்பர்கள் முதல் எதிரிகள் வரை ஆண்மையில்லாதவன், மலடு என்றெல்லாம் பேசுவார்கள். இதையெல்லாம் கடந்து அந்த செல்வத்தை அடைந்த போது பெற்ற மகிழ்ச்சியில் அந்த காயங்கள் எல்லாம் மறைந்து போய்விட்டன. ஆனால் வடுக்கள் மறையவில்லை. இதனால்தான் வள்ளுவர் தீயினால் சுட்டால் புண் என்றும், நாவினால் சுட்டால் அது வடு என்றும் சொல்லியிருக்கிறார் போலும். இன்னும் சில பேர் மலடு என்பது ஆணுக்கு மட்டுமே, பெண்ணுக்குக் கிடையாது என்றும், வேறு சிலர் ஆதிகாலம் தொட்டே பெண்களைத்தான் மலடி என்று சொல்லியிருக்கிறார்கள் என்றும் பலவாறு பேசிக் கொள்வார்கள். இவர்களுக்கு மத்தியில் நாம் தேமே என்று உட்கார்ந்து இவற்றையெல்லாம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

இரு பாலினருக்கும் குறைபாடுகள் இருக்கும். ஒரு சில குறிப்பிட்ட குறைகளைத் தவிர மற்ற எல்லாக் குறைபாடுகளும் சரி செய்யக் கூடியவையே. விஞ்ஞான முறைப்படி இரவல் கருப்பை, இரவல் விந்தணு, சோதனைக் குழாய் குழந்தை என்றெல்லாம் முன்னேற்றமடைந்து விட்ட போதிலும், எல்லோரும் நவீன விஞ்ஞான மருத்துவத்தை நெருங்கி விட முடியாது. அப்படிப் பட்டவர்களுக்கு ப்ராணாயாமமும், யோகாசனமும் வரப்பிரசாதம் ஆகும். நான் சொன்னதைக் கேட்டு பலன் பெற்றவர்கள் என் கண்ணெதிரிலேயே இருக்கிறார்கள். நான் மனவளக் கலையில் சேர்ந்து பலனடைந்தேன்.

ஆண்களைப் பொறுத்தவரை விந்தணுக்களில் உயிர்ப்பு உள்ள அணுக்கள் குறைவு, நரம்புத் தளர்ச்சி, வேறு சில காரணங்கள் காணப்படுகின்றன. பெண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் காரணங்கள் என்னவெல்லாம் என்று பார்த்தால், 1. பாலுறுப்புகளில் இருந்து தகவல்கள் மூளைக்குச் செல்லாமை. 2. மூளையிலிருந்து கட்டளை அவ்வுறுப்புகளுக்கு வராமை. 3. பெண்ணின் உறுப்புகளில் உள்ள திசுக்களுக்குத் தேவையான புரத உற்பத்தி நோதிகள் பிட்யூட்டரி, அட்ரினல், கருவகங்களில் இருந்து சுரக்காமை, அல்லது அதற்கான கட்டளைகள் மூளையிலிருந்து வராமை. 4. சரியான உணவுப் பழக்கமின்மை. 5. ஆக்சிஜன் பற்றாக் குறை. 6. பாலின உறுப்புகளில் கழிவுகள் நீங்காமை போன்றவற்றைச் சொல்லலாம். மற்றபடி பெண்களுக்கு மலடு ஏற்படவே வழியே இல்லை. கர்பப்பை இல்லாவிட்டாலோ, வயதுக்கு வராவிட்டாலோ வேண்டுமானால் குழந்தை பிறக்காதே தவிர மற்ற எல்லா குறைபாடுகளும் சரி செய்யக் கூடியவையே. இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே பல்லாயிரக் கணக்கான கருமுட்டைகளுடனேயே பிறக்கிறாள்.

இதில் யோகாசனத்தின் பங்கு என்ன ? நமது உடலில் காலில் இருந்து இரத்த அழுத்தம் படிப்படியாக அதிகரித்து தலையில் அதிக அழுத்தமாக இருக்கிறது. அது ஏன் ? என்றால் காலில் புவி ஈர்ப்பு விசையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரத்தம் மெதுவாகச் செல்கிறது. மேலே போகப் போக அதன் ஈர்ப்பு விசை குறைவதால் அழுத்தம் அதிகமாகிறது. யோகப் பயிற்சியின் மூலம் இந்த அழுத்தத்தை சமன் செய்யும் போது எல்லா உறுப்புகளுக்கும் நல்ல இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் எல்லாம் கிடைப்பதால் அவ்வவ் உறுப்புகள் சீரான இயக்கத்தைப் பெறுகின்றன. மேலும் ப்ராணாயாமம் செய்வதால் உடலில் ப்ராண சக்தி அதிகரித்து, நாடி நரம்புகளெல்லாம் சுத்தியடைந்து நன்றாக இயங்குகின்றன. வளர் சிதை மாற்றங்கள் சரிவர நடைபெறுகின்றன.

யோகப் பயிற்சியால் நுரையீரல்களுக்கு ஓய்வு அளிக்கும் போது கார்பன் டை ஆக்சைடு அதிக அமிலத் தன்மையை உடலில் ஏற்படுத்தி அமிலகார இடைவெளியை அதிகப்படுத்துகிறது. அதைப் போல திசுக்களுக்கும், இரத்த தந்துகிகளுக்கும் அதிக அமிலகார இடைவெளி இருந்த போதிலும் பிளாஸ்மா நிலையில் ஊடகம் போதிய அளவில் இல்லாத போது வாயுப் பரிமாற்றம் போதிய அளவில் நடைபெறுவதில்லை. அதற்குக் காரணம் திசுக்களிடையே கடினத் தன்மை அதிகரித்திருப்பதேயாகும். யோகப் பயிற்சியின் மூலம் அந்தக் கடினத்தன்மை நீங்கி சதை மென்மையாகி விடுகிறது. மென்மையாக்கப்பட்ட உடல் அதிக இரத்தத்தினால் சூழப்பட்டு பிளாஸ்மா ஊடுருவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் இரத்தக் குழாய்களுக்கும் இடையே அமிலகாரத்தன்மை வேறுபாடு அதிகரித்து உடனடியாக வாயுப் பரிமாற்றம் நடை பெறுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையால் ஆக்சிஜன் எளிதாகக் கவரப்படுகிறது. இன்னும் பல்வேறு நன்மையான காரணங்களினால் யோகாசனங்கள், ப்ராணாயாமப் பயிற்சியின் மூலம் குழந்தை பாக்கியத் தடை முற்றிலும் நீங்கி கரு உருவாக ஏதுவாகிறது.

எல்லா யோகாசனங்களையும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சில குறிப்பிட்ட யோகாசனங்களைக் கற்று செய்து வந்தால் போதுமானது. அதோடு ப்ராணாயாமமும் செய்து வருவீர்களானால் பலன் வெகு விரைவில் கிட்டும்.
இப்போது பெண்கள் கற்று செய்து வர வேண்டிய யோகாசனப் பயிற்சிகளைத் தருகிறேன்.
1. சலபாசனம் - 3 முறை - 4-10 விநாடிகள்.
2. தனுராசனம் - 3 முறை - 4-10 விநாடிகள்.
3.பஸ்சிமோத்தானாசனம் - 4-8 முறை - 4-15 விநாடிகள். 4. ஹலாசனம் - 4-8 முறை - 4-15 விநாடிகள்.
5. சர்வாங்காசனம் - 2 முறை - 4-15விநாடிகள்.
6. மத்ஸியாசனம் - 3 முறை - 1/4-1 நிமிடம்.
7. சிரசாசனம் - 2 முறை - 1/2-8 நிமிடம்.
8. யோக முத்திரா - 4-6 முறைகள் - 4-10 விநாடிகள்.
9. பத்மாசனம் - 1 முறை - 2 நிமிடங்கள்.
10. உட்டியாணாம் - 6 முறை - 4-10 விநாடிகள்.
11. நௌலி - 4-6 முறை - 4-10 விநாடிகள்.
12. சவாசனம் - 1 முறை - 4-6 நிமிடங்கள்.
13. நாடி சுத்தி 3-7 நிமிடங்கள்.

இந்த அட்டவணையில் காணும் தனுராசனமும், யோக முத்திரையும் ஆண்கள் செய்ய வேண்டியதில்லை. யோக முத்திராவுக்குப் பதிலாக அர்த்தமத்ச்யேந்திராசனம் 3 முறை 4-10 விநாடிகள் ஆண்கள் செய்ய வேண்டும்.

உட்டியாணா ஜாலந்திர மூலபந்தங்களுடன் கும்பகப் பிராணாயாமத்தின் கும்பகக் காலம் 6 முதல் 15 விநாடிகள் இருக்குமாறு நான்கு முதல் இருபது முறைகள் செய்ய வேண்டும். பெண்ணின் குறைபாடுகளை யோகா, ப்ராணாயாமம் மூலம் பாலுறுப்பு ஒருங்கிணைப்பை உருவாக்கி குணமாக்க முடிகிறது. இந்த அடிப்படையில் நாடிசுத்தி செய்யும் போது அதிக காற்றை வெளியே விடுகின்ற போது அதிக காற்றை உள்ளிழுக்கிறோம். இதனால் நுரையீரலில் உள்ள காற்றறைகளில் காற்றின் வெப்ப நிலை வேறுபாடு அதிகரிக்கிறது. இதனால் இரத்தத்தின் வெப்பம் குறைந்து இதன் செயல்பாடு கூட்டுப் பொருள்களின் தன் இயக்கச் செயலில் இருந்து ஓய்வு கொள்ள முடிகிறது. இது பிளாஸ்மா நிலையில் உள்ள எல்லா கூட்டுப் பொருள்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடலில் உள்ள எல்லா அயனிகளும், கூட்டுப் பொருள்களும் ஓர் ஒருங்கிணைப்பை பெறுகின்றன. எனவே யோகா மற்றும் பிராணாயாமத்தை முறைப்படி கற்று பயனடையும் படி கேட்டுக் கொள்வதோடு இறையாற்றலோடு பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன்

No comments:

Post a Comment