Friday 11 May 2012


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடை கால முகாம்


4MAY
இம்மாதம் கோவை சந்தேகவுண்டன் பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஈஷா அவுட்ரீச் சார்பில் ஏப்ரல் 30 முதல் மே 2 வரை கோடைகால முகாம் நடைபெற்றது.
ஈஷா வித்யா ஏற்கனவே 7 பள்ளிகளை தமிழக கிராமப்புறங்களில் ஆரம்பித்து நடத்தி வருகிறது. ஈஷா வித்யா பள்ளிகள் ஆங்கில வழிக்கல்வியை கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் தரமான முறையில் வழங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கல்வி உதவித்தொகை மூலமாக படித்து வருகின்றனர்.
ஈஷா வித்யாவின் சீரிய முயற்சியை அடுத்து ஈஷா அறக்கட்டளையின் சமூகநலப் பணிகளுக்கான ஈஷா அவுட்ரீச் அமைப்பு, கோவை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் மொத்தம் 26 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்திருக்கிறது. இந்தப் பள்ளிகளின் கல்வித் தரத்தினை மேம்படுத்தி, சுமார் 25,000 பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் தரமான கல்வி, மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் கணித அறிவினை மேம்படுத்துதல், இப்பள்ளிகளில் சரியான ஆசிரியர்-மாணவர் விகிதத்தை பராமரித்தல், திறன் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கி, மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களை பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட ஊக்குவித்தல், மாணவர்களின் உடல், மனம் மற்றும் பொது இயல்பு ஆகியவற்றை யோகா, விளையாட்டுக்கள், நுண்கலைப் பயிற்சிகள் மற்றும் ஆரோக்கிய விழிப்புணர்வுக் கல்வி போன்றவற்றின் மூலம் மேம்படுத்துதல், சமூக நலப் பணித் திட்டங்கள் மூலம் அவர்களுக்குள் சமூகப் பொறுப்பினை ஏற்படுத்துதல் மற்றும் இப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை பராமரிப்பதில் உதவுதல் என பல செயல்பாடுகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இப்பள்ளி மாணவர்களின் பொது மற்றும் வாழ்க்கை அறிவை மேம்படுத்துவதற்காக கோடைகால சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் கோவை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 3 நாள் முகாம் ஏப்ரல் 30 முதல் நடந்தது. கோவை மாவட்டத்தின் 7 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு, கலை, கைத்தொழில், யோகா, விளையாட்டு, ஓவியம், வர்ணம் தீட்டுதல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். மேலும் இயற்கையைப் பற்றிய விழிப்புணர்வுக்காக, ஈஷா வித்யா பள்ளி மாணவர்களுடன் இணைந்து, கோவை அருகே நீலகிரி வனச்சரகத்தில் அமைந்திருக்கும் கல்லார் தோட்டக் கலைப் பண்ணைக்கு சுற்றுலா சென்று வந்தனர்.
அங்கு மாணவர்களுக்கு காடுகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இயற்கையில் அனைத்து உயிரினங்களும் எப்படி ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன என்றும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் மற்ற உயிரினங்களின் வாழ்க்கைச் சூழலை குலைக்காமல் இருப்பதற்கு செய்ய வேண்டியவற்றைப் பற்றியும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நாம் மரங்களைப் பாதுகாக்கவில்லை, மரங்கள்தான் நம்மை பாதுகாக்கின்றன என்பதை மாணவர்கள் இங்கு அனுபவப்பூர்வமாக உணர்ந்தனர். நாம் அனைவரும் இயற்கையுடன் நெருக்கமான நட்புணர்வுடன் இருப்பதற்கு என்ன செய்வது என்பதைப் பற்றி தங்களது கருத்துக்களை மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர். பிறகு அனைவரும் அந்த பண்ணையை சுற்றிலும் மண்டிக் கிடந்த பிளாஸ்டிக் மற்றும் மற்ற குப்பைகளை சுத்தம் செய்தனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி பாடத்திட்டத்தைத் தவிர, வாழ்க்கைக்குப் பயன்படும் மற்ற விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும், தங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வரவும் இந்த முகாம் மிகவும் உதவி செய்தது.
இதே போன்ற மற்றொரு முகாம் தர்மபுரி மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்காக வரும் மே 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment