Friday, 6 June 2014


பிரபஞ்சத்தின் இயக்கமெல்லாம் ஒரு பூஜ்ஜிய(சூன்யம்) நிலையிலிருந்தே உருவானது. ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்தே எல்லாம் உருவானது. இயக்கங்கள் அனைத்துமே நேர், எதிர் கூறுகளின் கூட்டுத் தொகுப்பே. சமமான இடத்தை தோண்டும் போது ஒரு பள்ளமும், அதே அளவிலான மேடும் உருவாகிறது. ஆக ஒன்றுமில்லாத சமமான இடத்திலிருந்து ஏதோ ஒன்று உருவாகும் போது அதற்கு எதிரான மற்றொன்று உருவாகியே தீரும் இது இயற்கையின் விதி.

இதையே நாம் அனுபவமாக இரவு-பகல், இன்பம் - துன்பம், அகம்-புறம், ஆண்-பெண், லாபம்-நஷ்டம், பாசிடிவ்-நெகடிவ், சிவம்-சக்தி என்று காண்கிறோம். ஒரு விளையாட்டை எடுத்துக் கொண்டால் கூட ஒருவன் வெற்றியடைகிறான் என்றால் மற்றொருவன் தோல்வி அடைந்தே தீருவான் அது விதி.

இதையே கணித அடிப்படையில் பார்த்தோமானால் 1 -1= 0 . இது ஒரு சமன்பாடு. அதாவது +1 யும் -1 யும் கூட்டினால் வருவது 0 . இதில் சூக்குமம் என்ன வென்றால் 0 லிருந்தே +1ம், -1ம் உருவாகிறது. நமது பொதுவான வாழ்க்கைத் தத்துவமும் இந்த அடிப்படையில்தான் அமைந்துள்ளது. அதுவே கீதையின் தத்துவமான ''எதை நீ கொண்டு வந்தாய் ? அதை இழப்பதற்கு. எதை நீ படைத்தாய் ?அதை வீணாக்குவதற்கு. எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்து எடுக்கப்பட்டது. எதை நீ கொடுத்தாயோ அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது''. எல்லாம் பூஜ்ஜியமே. பூஜ்ஜிய நிலையில் ஆரம்பித்து பூஜ்ஜிய நிலையிலேயே முடிவதுதான் மனித வாழ்வு. இந்த உலகின் எந்தக் கோணத்தில் இருந்து எதைப் பார்த்தாலும் இதுவே இயற்கையின் நிதர்சனம்.

ஆனால், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பூஜ்ஜியம் என்கிற சூனியம் என்பது ஒன்றுமே இல்லாதது அல்ல. அது அனைத்தையும் தன்னுள் ஒடுக்கி சமநிலையில் இயங்காமல் அமைதியாக இருப்பது. பூஜ்ஜியம் என்பது இதன் உட்கருத்து இதுவே. இறையாற்றலைப் போல சம நிலையில் அதாவது சுத்த வெளியாக இருக்கும் வரை எந்தச் சிக்கலும் இல்லை. அதெல்லாம் நடக்கிற கதையா ? என்று கேட்டால், முடியும். முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை. நம் முன்னோர்கள் அவ்வாறு வாழ்ந்து காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்களையே நாம் ரிஷிகள் என்றும், மகான்கள் என்றும், அவதார புருஷர்கள் என்றும், முனிவர்கள், சித்தர்கள் என்றும் போற்றி வணங்குகிறோம். நம் உடல் நிலையில் கூட இந்த சம நிலைத் தத்துவமே செயல்படுகின்றது. இரத்தஅழுத்தம், சர்க்கரை, ஹார்மோன்கள் சுரப்பது இவையெல்லாம் கூடினாலோ குறைந்தாலோ சிக்கல்தான். சமநிலையில் இருக்கும் வரை பிரச்சினைகள் இல்லை, வியாதிகள் இல்லை. இது வரவு செலவு கணக்காகட்டும், நம் பிறவிக் கணக்காகட்டும் எல்லாவற்றிலும் இந்த சமநிலைத் தத்துவம் செயல்படும். Tally அதாவது 0 ஆக வேண்டும். இந்த பூஜ்ஜிய நிலையைப் புரிந்துகொண்டு நெறியுடன் வாழ்வோமானால் நாமும் பூஜ்ஜிய நிலையை அடையலாம். அதுவே பிறவியின் நோக்கம். அதுவே பிறப்பின் இரகசியம். அதுவே மோட்ச நிலை. அதுவே பேரின்ப நிலை. அமைதிநிலை. சிதம்பர இரகசியமும் அதுதான்.

ஒரு குழந்தையானது நிமிர்ந்து அமரவோ அல்லது நிற்க்கவோ செய்யும் வரை அதற்கு மனவளர்ச்சி என்பது கிடையாது. மனவளர்ச்சி அடைந்த பிறகுதான் சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் ஆரம்பிக்கிறது. அதன் பிறகு கேள்விகளுக்கு முடிவு என்பது இல்லை. கருவில் இறையாற்றலின் வசப்பட்டிருந்த போது இருந்த 'ஸோஹம்'(நானும் நீயும் ஒன்று) என்ற நிலை வெளியே வந்த உடன் 'கோஹம்'(நான் யார்) என்ற நிலைக்கு வந்து விடுகின்றது. மீண்டும் 'சோஹம்' என்ற நிலைக்கு வருவதுதான் முக்தி என்றும், ஞானம் என்றும், மோட்சம் என்றும், விடுதலை என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு மூலாதாரத்தில் விளங்கும் சக்தியை ஸுஷும்னா நாடி வழியாக சகஸ்ராரத்தில் உள்ள சிவனிடம் கொண்டு சேர்ப்பது ஒன்றுதான் வழி. அதற்கு பூஜை, மந்திரங்கள், ஜபம், கோவில், திருவிழாக்கள், வேத சாஸ்த்திர புராணிதிகள் எல்லாம் ஆரம்ப நிலைதானே அன்றி, யோகம்(ஒன்று சேரல்) மட்டுமே சிவசக்தி ஐக்கியத்தை ஏற்படுத்தும் என்று கண்டுதான் பிரம்ம வித்தையைத் தந்தார்கள்.

விந்துவும், நாதமும், மேருவில் ஓங்கிடிற்
சந்தியிலான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே. தி.ம-619

விந்துவும் நாதமும் தலைக்குச் சென்று ஒடுங்கினால் முடிவடையும். சமாதியில் கூடிடும். முடிவில்லாத அறிவின் சிறந்த பொருள் அழகிய வெளிச்சம் தோன்றிடும். மூலாதாரத்து சக்தி தலைக்குப் போனால் இறைவனைக் காணலாம். அதாவது இந்திரியங்களை ஜெயித்தவன், வைராகி, தர்மன், தேவர்கள், பிரம்மா யாராக இருந்தாலும் சரி யார் யோகியோ அவனுக்கே மோட்சம். அதற்கு ஆத்மாவைத் தெரிந்து கொள்ள வேண்டும். சற்குருவின் உபதேஷத்தினால்தான் அது சித்தியாகும். அதற்கே அஷ்டாங்க யோகம், குண்டலினி யோகம் எல்லாம். நம் சுழுமுனை நாடியில் இயங்கும் மூலாதாரம் தொடங்கி ஆக்ஞா வரை உள்ள ஆறு ஆதாரங்களில் நடக்கும் பரிவர்த்தனத்தின் முழுமையே மனம். புற உலகில் புலன் மயக்கத்தில் விளங்கும் இது ஒரு பௌதிக விஷயமாகக் காட்சியளிக்கிறது. இந்த பௌதிக ஓட்டத்தை நிறுத்திவிட்டுப் பார்த்தால் நமக்குள் இருக்கும் மௌனத்தை(ஆத்மாவை) தெரிந்து கொள்ளலாம். அதுவே உண்மை நிலை. அதுவே ஸ்திரமாகும் போது சமாதி எனப்படுகிறது

No comments:

Post a Comment