Tuesday 19 February 2013


தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

இதயநோய்களுக்குச் சிறந்த டானிக். காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் மருந்து. உடல் சூட்டைத் தணித்துக் குளிர்ச்சி தரும் காய்கறி. நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை எளிதாகக் குறைக்கப் போதுமான அளவு சத்தும், குறைந்த அளவு கலோரியும் கொண்ட காய்கறி. மஞ்சள் காமாலை, தலை வழுக்கை எனப்பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் அரிய காய்கறியான புடலங்காய் பேதி மருந்தாகவும் பயன்படுகிறது.

புடலங்காயின் தாயகம் இந்தியாதான். காய்ச்சல் நேரத்தில் காய்ச்சலை மட்டுப்படுத்தப் புடலங்காய் பொறியல் செய்து சாப்பிட்டால் போதும். சிலர் அலுவலகம் வரும் வரை நன்றாய் இருப்பார்கள். தம் இருக்கையில் அமர்ந்ததும் காய்ச்சல் ஏற்பட்டுவிடும். ஏதேனும் ஒரு காய்ச்சல் மாத்திரையை அப்போது போட்டுக்கொள்வார்கள். காய்ச்சல் உடனே குணமாகும். பிறகு, மாலை அலுவலகத்திலிருந்து புறப்படும் போது மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுவிடும். இப்படி விட்டுவிட்டுக்காய்ச்சல் ஏற்படும் உடல்வாகைப் பெற்றவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் புடலங்காய்ப் பொறியல், கூட்டு என்று தயாரித்துச் சாப்பிட்டால் போதும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகம் தரும் காய்கறி இது. பிறகு இதுபோன்ற திடீர்க்காய்ச்சல் ஏற்படாது.

கவலையை விரட்டும் காய்!
அதிக உழைப்பு, கவலை, நோய் முதலியவற்றால் அல்லல்படுபவர்களுக்கு நெஞ்சுத்துடிப்பு மிகவேகமாய் இருக்கும். சிலருக்கு இதயவலியும் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் புடலங்காயைச் சாப்பிடவேண்டும். மேலும், அவர்கள் அதிகாலையில் புடலைக் கொடியில் இளந்தரான இலையைப் பறித்து, சாறாகப் பிழிந்து வைத்துக்கொண்டு, ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை வீதம் சாப்பிட வேண்டும். இதனால், இதயம் கடும் முயற்சி செய்து இயங்குவது சமமாகி சாதாரணமாக இயங்க ஆரம்பிக்கும்.

வழுக்கைத் தலையா?
இளமையிலேயே வழுக்கைத் தலையுள்ளவர்கள் மேற்கண்ட முறையில் புடலங்காய் இலைச்சாற்றைத் தயாரித்து தினமும் ஒரு கப் அருந்தி வரவேண்டும். வாரத்தில் மூன்று நான்கு நாள்களாவது புடலங்காயையும் உணவுடன் சேர்த்து வரவேண்டும். விரைவில் இவர்களுக்கு வழுக்கை விழுந்த இடத்தில் முடிமுளைக்க ஆரம்பிக்கும்! இதற்காகவாவது வீட்டில் புடலைக் கொடியை வளர்த்துத் தினமும் பசுமையான இலைகளைப் பறித்துச் சாறாக்கி அருந்த வேண்டும்.

காய்ச்சல் நேரத்தில் புடலங்காயைத் தண்ணீரில் கொதிக்க வைத்துக் காய்ச்சிக் கஷாயமாய் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பித்தம் சம்பந்தமான காய்ச்சல், நாக்குவறட்சி, மலச்சிக்கல் போன்றவையும் இந்தக் கஷாயத்தை அருந்துவதால் குணமாகும். கஷாயம் நன்கு பயன்தரச் சிறிதளவு தேனையும் சேர்த்து அருந்தலாம்.

காய்ச்சல் கடுமையாய் இருந்தால் 50 கிராம் புடலங்காய்த் துண்டுகளையும் 50 கிராம் கொத்துமல்லியையும் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப்போட்டு, மறுநாள் அதை வடித்து அருந்த வேண்டும்.

பித்தநோயைக் குணப்படுத்த இலைக்கஷாயத்துடன் கொத்தமல்லியையும் சேர்த்து அருந்தலாம்.

வாந்தி எடுக்க வைக்கவும் இந்த இலைச்சாறு பயன்படும். இதில் கொத்துமல்லி சேர்க்கக்கூடாது.

கீல்வாதம் குணமாகும்!
கல்லீரல் கோளாறு, கீல்வாதம் முதலியவற்றுக்கு இலைக் கஷாயத்தை தைலம் போல மேல் பூச்சாக உடல் முழுவதும் தேய்க்க நற்பயன் கிடைக்கும்.

மஞ்சள் காமாலையைக் குணமாக்க முப்பது முதல் ஐம்பது கிராம்வரை எடையுள்ள புடலங்காய்க்கொடியின் இலைகளைக் கொத்துமல்லியுடன் இரவு முழுவதும் ஊறப்போட்டு, காலையில் அதை வடித்து, மூன்று வேளைக்குச் சமமாகப் பிரித்து வைத்துக்கொண்டு அதை அருந்த வேண்டும்.

நாட்டு மருத்துவத்தில் முக்கியமான மருந்தாய் இருக்கும் புடலை இலை இப்போது இந்திய இயற்கை மருத்துவத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

குழந்தைகளுக்குப் பேதி மருந்தாகவும், வாந்தி எடுக்க வைக்கும் மருந்தாகவும் இந்த இலைச்சாற்றையே பயன்படுத்தலாம்.

புடலங்காயின் தாவர விஞ்ஞானப் பெயர், டிரிச்சோ சன்தீன் ஆங்கினா (Trichosanthes anguina) என்பதாகும்.

100 கிராம் புடலங்காயில் கிடைக்கும் கலோரி அளவு 18 தான். போதுமான அளவு புரதம், கொழுப்பு. நார்ச்சத்து, மாவுச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரிபோபிலவின், நியாஸின் போன்றவை இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதை நன்கு சேர்த்துக்கொண்டால் உடல் எடையைப் படிப்படியாகக் குறைத்துவிடலாம்; உடலுக்குச் சத்துணவும் கிடைக்கும். உடலும் பலவீனமடையாது.

புடலையைக் காயாகத்தான் வேகவைத்துச் சமைத்து உண்ணவேண்டும். பழுத்த புடலையை உண்ணக்கூடாது. அது எளிதில் செரிமானம் ஆகாது. பழுத்த புடலையின் உள்ள காய்களை மட்டும் காயவைத்து, அதை இரவில் ஊறவைத்துத் தண்ணீரை வடிகட்டி அருந்தினால் பேதி ஆகும். பழுத்த புடலங்காயில் உள்ள விதைகளைப் பேதிமருந்தாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு தினசரி புடலங்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் இதயநோயின்றியும், உடல் எடை அதிகரிக்காமலும், அடிக்கடி காய்ச்சல் ஏற்படாமலும் வாழலாம். ஆரோக்கியமாய் வாழப்பயன்படும் அரிய மருந்து, புடலை

No comments:

Post a Comment