Friday, 22 May 2015

சர்க்கரைநோய் தீர்க்கும் சரியான
ஆசனங்கள் (பாகம் 4)
(3-ம்பாகத் தொடர்ச்சி)
கணையம்:-
கணையம் என்ற ஜீரண உறுப்பு வயிற்றில் இரைப்பைக்குக் கீழே அமைந்திருக்கிறது. இது திராட்சைக் குலையினைப் போன்ற அமைப்பினையுடையது. நாளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் பணியாற்றும் இரட்டைச் சுரப்பியென்று இதனைக் குறிப்பிடுவார்கள். உணவு இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு இறங்கும்போது கணையம் கணையநீரைச் சுரந்து ஜீரணத்துக்கு உதவி, நாளச்சுரப்பியாக இயங்குகிறது. கணையத்தில் நாளமில்லாச் சுரப்பிகள் இன்சுலின் என்ற ஜீவரசத்தைச் சுரக்கின்றன. இந்த இன்சுலின் என்ற ஹார்மோன் தான் நாம் உண்ணும் உணவிலுள்ள சர்க்கரைப் பொருளை ஜீரணித்து உதவுகிறது. அப்போது கணையம் நாளமில்லாச் சுரப்பியாகப் பணியாற்றுகிறது.
சர்க்கரைநோய்:-
நமது உணவில் நார்ச்சத்து, தாது உப்புக்கள் மாவுப் பொருட்கள் கொழுப்பு, இரும்புச்சத்து, புரதச்சத்து, சர்க்கரை போன்ற பலவகையான சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை ஒவ்வொன்றும் ஜீரணத்தின்போது மாற்றங்களுக்கு உள்ளாகி இரத்தத்தோடு கலக்கின்றன. இந்த வகையில் நாம்சாப்பிட்ட உணவிலுள்ள சர்க்கரையும் இரத்தத்தோடு கலந்து எடுத்தச் செல்லப்படுகிறது. இப்படிச் சர்க்கரைச்சத்து கலந்த இரத்தம் கணையத்தின் வழியே செல்லுகின்றபோது கணையத்திலுள்ள கணையத் திட்டுக்கள் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரந்து இரத்தத்தோடு கலக்கச்செய்து சர்க்கரையை ஜீரணித்து மாற்றிவிடுகின்றன. ஏதாவதொரு காரணத்தால் கணையம் தனது செயல்திறன் குன்றி இன்சுலினைச் சுரக்கத்தவறினால், இரத்தத்திலுள்ள சர்க்கரை வேதிமாற்றத்துக்க உள்ளாகாமல் இரத்தத்தோடு கலந்த உடம்பில் ஓடுகிறது.
விஞ்ஞானமும் மருத்தவமும் எவ்வளவோ முன்னேறி வந்திருக்கின்றபோதும் மனிதனை வாட்டுகின்ற சில நோய்களை விரட்டிவிட முடியவில்லை. அத்தயைக தீர்க்கவே முடியாத நோய்களுள்ளே மருத்துவ உலகுக்கு ஒரு மாபெரும் சவாலாக இன்றுவரை சர்க்கரைநோய் இருந்துவருகிறது. கிணற்றில் தண்ணீர் வற்றிப்போனால் கிணற்றைத் தூர்வாரியோ, ஆழப்படுத்தியோ சரக்கும் தண்ணீரைப் பெறவேண்டு மேயல்லாது, வேறு கிணற்றிலேயிருந்து தண்ணீரைக் கொண்டுவந்து, வறண்ட கிணற்றில் ஊற்றிக்கொண்டு பயன்பெறுவது போன்ற முறைதான் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதாகும். என்ன செய்யமுடியும். மருத்துவத்தில் இதைத்தவிர வேறுவழிமுறைகள் எதுவுமில்லை.
சர்க்கரைநோய் பரம்பரையாக வருகின்ற நோய், அது நம்மையும் பற்றிக்கொள்ளுமோ என்ற அச்சத்துடன் பலபேர் வாழ்கிறார்கள்;. யோகாசனங்கள் போன்ற சரியான முறையொன்று இருக்கின்றதே என்பதையும் இதன்மூலம் சர்க்கரை நோயை முற்றாகக் குணப்படுத்த முடியுமே என்பதையும், பரம்பரையாக வருவதென்றாலும் அதைத் தடுத்து ஒரு புதிய பாரம்பரியத்தைப் படைத்துவிடலாமே என்பதையும் மக்கள் உணரத் தொடங்கிவிட்டால் சர்க்கரை நோய் மட்டுமல்ல எந்த நோயும் அணுகாமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
பிறப்பிலேயே யாரும் பிறவிச்சர்க்கரை நோயாளியாகப் பிறப்பதில்லை. இயற்கை ஒவ்வாருவருக்கும் கணையத்தைப் படைத்துத்தான் வதை;திருக்கிறது. இருப்பினும் இந்நோய் இடைக்காலத்தில் வருவதற்குக் காரணம் உடல்உழைப்பு இல்லாததுதான் என்றாலும், கடினாக உழைப்பவர்களுக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. நல்ல உடற்பயிற்சி செய்யும் பயில்வான்கள்கூடச் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். வயிற்றிலுள்ள உறுப்புக்களுக்கு சரியானபடி இரத்தஓட்டமும், பயிற்சியும் இல்லாமையே இதற்கெல்லாம் காரணமாகும்.
உடற்பயிற்சிகள் உடம்மை எடுப்பாக வைத்திருக்க உதவலாம். ஆனாலும் வயிற்றின் உள்ளுறுப்புக்களுக்கும் ஜீவ ஆதாரமான கோளங்களுக்கும் (Glands) சரியான பயிற்சி வேண்டும். அப்போதுதான் அந்த உறுப்புக்கள் நல்ல நிலையில் ஆரோக்கியமாகத் தமது பணி குன்றாமல் நெடுநாள் உழைத்துப் பணியாற்றக் கூடியனவாக இருக்கும். இவவாறு உடம்பின் வெளி உறுப்புக்களுக்கும், உள்ளுறுப்புக்களுக்கும் சேர்த்துப் பயிற்சி தரவேண்டுமானால் அது யோகாசனங்களால் மட்டுமே முடியும். வேறெந்த வழியிலும் எளிதாக இதைப் பெறமுடியாது. ஆகவே மனித உடம்பு பூரண நலத்தோடு விளங்க வேண்டுமானால் யோகாசனப் பயிற்சி அவசியமாகும். இவ்வாறு யோகாசனப்பயிற்சி செயவதன்மூலம் விஞ்ஞானத்துக்கும், மருத்துவத்துக்கும் சவாலாக இருக்கின்ற சர்க்கரை நோய்க்கு மட்டுமன்றி மற்ற எல்லாக் கொடிய நோய்களுக்கும் யோகாசனங்களால் முடிவுகட்டிவிடலாம். இனி ஆசன விளக்கத்துக்கு வருவோம்.
ஹஸ்த வஜ்ராசனம்:-
செய்முறை:-

வஜ்ராசனத்தில் அமரவேண்டும். இடதுகையை முழங்கைவரை மடித்து மடிமேல் வைத்துக் கையை வயிற்றோடு பொருத்திக்கொள்ள வேண்டும். பின்னர் மூச்சை நன்கு வெளியேற்றிவிட்டு முன்னால்குனிந்து நெற்றியைத் தரையை நோக்கிக் கொண்டுவரவும். வலது கையைப் பக்கத்தில் ஊன்றிக் கொள்ளலாம். அல்லது எப்படி வேண்டுமானாலும் வசதிப்படி வைத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் பத்துநொடி இருந்தால் போதும் பின்னர் நிமிர்ந்து மூச்சை இழுத்துக்கொளலாம்.
இரண்டொரு சுவாசங்கள் இளைப்பாறிய பின்னர் வலது கையை மடக்கி மடிமேல்வைத்து வயிற்றோடு பொருத்திக்கொண்டு, மூச்சை வெளியேற்றிவிட்டு, முன்னால் குனிந்து முன்போலவே பத்து நொடிகள் இருந்தபின் நிமிர்ந்துகொள்ளவும். இவ்வாறு இடதுகை ஒருமுறை வலதுகை ஒருமுறை என்று செய்தால் அது ஒருசுற்று ஹஸ்தவஜ்ராசனம் செய்ததாகும். இதைப்போல ஆரம்பத்தில் மூன்று சுற்றுக்கள் செய்தால் போதும். ஒருவாரம் அல்லது பத்துநாள் பயிற்சிக்குப் பின்னர் நான்கு அல்லது ஐந்து சுற்றுக்கள் செய்தால் போதும். அதற்குமேல் தேவையில்லை. இதைப்போலவே இரண்டு கைகளையும் பொருத்திக் கொண்டும் செய்யலாம் (படத்தைப் பார்க்கவும்).
குறிப்பு:-
இவ்வாசனத்தைச் செய்யும்பொழுது சிலர் மூச்சை உள்ளே அடக்கி வைத்துக்கொண்டு செய்வார்கள். அப்படிச் செய்யக்கூடாது. மூச்சு நுரையீரலிலும் வயிற்றிலும் நிறைந்திருந்தால் முன்னால் குனிவது சிரமமாக இருக்கும். கை வயிற்றில் புதைந்து அழுத்துகின்ற போது இன்னும் கடினமாக இருக்கும். ஆகவே மூச்சை வெளியெற்றி விட்டுத்தான் செய்யவேண்டும். வேறுசிலர் நன்றாகப் படியும்படி குனிய வேண்டுமென்பதற்காகப் பிருஷ்டங்களைத் தூக்கிக் கொள்வார்கள். அப்படியும் செய்யக்கூடாது. குனியும்போது நெற்றி தரையில் படவேண்டும் என்ற அவசியமில்லை. தொந்தி இருப்பவர்கள் அப்படிச் செய்யவும் முடியாது. ஆகவே பயிற்சியாளர்கள் சரியான ஆசனநிலையை மனதிற்கொண்டு, தங்களால் முடிந்தவரை குனிந்து செய்யலாம். நாளடைவில் சரியான நிலைக்கு வந்தவிடும். எந்த யோகாசனமாக இருந்தாலும் அது மிகச்சரியாக வரவேண்டுமென்று கருதி உடம்பை வருத்திக்கொண்டு ஆசனங்களைப் பயிலக்கூடாது.
வஜ்ரமுத்ரா
செய்முறை:-
முதலில் வஜ்ராசனத்தில் அமரவேண்டும் நிமிர்ந்த நிலையில் மூச்சை வெளியேற்றிவிட்டுப் படத்தில் காட்டியுள்ளது போலக் கைகளைப் பின்பக்கமாக் கோர்த்துக்கொண்டு மேலே உயர்த்தியபடி முன்னால் குனிந்து பத்து நொடிகள் இருக்கவும். பின்னர் நிமிர்ந்து கொள்ளலாம். இரண்டொரு சுவாசங்கள் இளைப்பாறிக் கொண்டு நான்கு அல்லது ஐந்து முறைகள் செய்தால் போதும். அதற்குமேல் வேண்டாம்.
ஹஸ்த வஜ்ராசனத்துக்குச் சொல்லப்பட்ட கவனிப்பு முறைகளை இதற்கும் எடுத்துக் கொள்ளவும்: பின்னால் கைகளை உயர்த்துகின்றபோது கைகள் சரியாக உயரவில்லை என்பதற்காக முரட்டுத்தனமாக முயற்சி செய்யவேண்டாம். நன்கு படியும்படியாகக் குனிய வேண்டுமென்பதற்காகவும் உடம்பை வருத்தவேண்டாம். கருவுற்ற தாய்மார்கள் இவ்விரண்டு ஆசனங்களையும் செயயவேண்டாம்.
வஜ்ராசனத்தின் பொதுப்பயன்கள்:-
வஜ்ராசனம் என்பது ஒரே ஆசனம்மதான் ஹஸ்தவஜ்ராசனம், வஜ்ரமுத்ரா என்று நான் பிரித்து எழுதியிருப்பவை வஜ்ராசனத்தின் கிளை ஆசனங்களாகும். இம்மாதிரிப் பதினைந்திற்கும் அதிகமான கிளையாசனங்கள் வஜ்ராசனத்துக்கு உண்டு. என்றாலும் சர்க்கரை நோய்க்காக இரண்டு கிளையாசனங்களை மட்டுமே இங்கே அறிமுகம் செய்திருக்கின்றேன்.
வஜ்ராசனத்தால் இடுப்புஎலும்புகள், முதுகெலும்பு, தோள்பட்டைஎலும்புகள், முழங்கால், கணுக்கால்கள் வலிமைபெறுகின்றன. யானைக்கால் நோய் ஆரம்பநிலையில் இருந்தால்; அதை வஜ்ராசனம் முற்றாகக் குணப்படுத்துகிறது. முறையாக ஐந்து வேளையும் தொழுகை செய்யும் இஸ்லாமிய சகோதரர்கள் யாருக்கும் யானைக்கால்நோய் வருவதில்லை. காரணம் அவர்கள் தொழுகையின் போது அதிகநேரம் வஜ்ராசனத்திலே இருப்பதுதான்.
இது நமது ஜிரணமண்டலத்தில் இயங்கும் சுரப்பிகளின் சுரப்புக்களைக் கட்டுப்படுத்துகிறது. நல்ல பசியையும் சுகமான ஜீரணத்தையும் தருகிறது. இவ்வாசனத்தின்போது சுவாசம் நிதானப்படுவதால் நுரையீரல், இதயம் இவைகளின் இயக்கமும் இதயத்துடிப்பும் சிறப்பாகச் சமப்படுகின்றன. இதனால் இதயபலவீனம் அகன்று இதயம் வலிமை பெறுகிறது. ஹஸ்தவஜ்ராசனம், வஜ்ரமுத்ரா இவ்விரண்டு ஆசனங்களால் வயிற்றுத் தொந்தி வேகமாகக் கரைகிறது. குடல்புண்இ வயிற்றுப்புண் ஆகியவை குணமாகின்றன. மலச்சிக்கல் அடியோடு அகலுகிறது. சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாய்கள், சிறுநீர்ப்பை ஆகியவை வலிமை பெறுகின்றன. சிறநீரகக் கோளாறுகள் வேகமாக அகலுகின்றன. சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவது தடுக்கப்படுகிறது.
கல்லீரல் வலிமையும் புத்துணர்வும் பெறுகிறது. இன்சுலின் என்ற ஹர்மோனைச் சுரக்கும் கணையம் சுறுசுறுப்படைகிறது. தனது பணியைச் செம்மையாகச் செய்கிறது. இதனால் சர்க்கரைநோய் வெகுவாகக் கட்டுப்படுகிறது. தொடர்ந்து காலை, மாலை என இருவேளையும் இவ்வாசனங்களைப் பழகுவதால் செயலிழந்த நிலையில் இருக்கும் கணையம் செயற்படத் தொடங்கி, தொடர்ந்த பயிற்சியால் சர்க்கரை நோய் குணமாகிறது. நாள்பட்ட சர்க்கரை நோயாளிகள் இவற்றோடு இன்னும் கூடுதலாகச் சில ஆசனங்களைச் செய்ய வேண்டியிருக்கும். என்றாலும் சர்க்கரை நோயாளிகள் இதுவரை அறிமுகமாகியுள்ள இந்த ஆசனங்களைத் தொடர்ந்து செய்தால் படிப்படியாக நலம்பெற்று வருவதை உணரலாம்.
பெண்களுக்கு இவ்வாசனத்தொகுப்பு அற்புதமான பயன்களைத் தரவல்லதாகும். வயிற்றுத் தொந்தியைக் குறைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது. ஓவரி, கருப்பை சமபந்தமான உபாதைகள் அகலுகின்றன. மறறும்படி பொதுவாக எல்லோருக்கும் இதில் சொல்லப்பட்டுள்ள எல்லாப் பலன்களும் கிட்டுகின்றன. இவ்வாசனங்களைச் சிறுவர் சிறுமியர்களும் முதியவர்களும் பொதுவான உடல்நலத்திற்காக் காலை மாலை இரண்டு வேளைகளிலும் பழகலாம். சர்க்கரை நோயாளிகள் மட்டும்தான் பழகவேணடுமென்ற அவசியமில்லாமல் இவை எல்லோருக்கம், எல்லா வயதினருக்கும் பயன்தரக் கூடியவை. பெண்கள் மாதவிலக்குக் காலங்களில் ஆசனப்பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். கருவுற்ற பெண்கள் ஹஸ்தவஜ்ராசனம், வஜ்ரமுத்ரா இவை இரண்டையும் செய்யக்கூடாது. வஜ்ராசனம் மட்டும் செய்யலாம்

No comments:

Post a Comment