Friday 22 May 2015

சர்க்கரைநோய் தீர்க்கும் சரியான
ஆசனங்கள் (பாகம் 5)
(4-ம்பாகத் தொடர்ச்சி)
சர்ப்பாசனம்:-
சர்ப்பாசனத்துக்கும் சர்க்கரை நோய்கும் சம்பந்தமில்லை. ஆனால் சர்ப்பாசனத்துக்கும் உடம்புக்கும் தொடர்பு இருக்கின்றது. ஒரு ஆசனத்தைச் செய்கின்றபோது அதன் இயக்கம் உடம்பில் அபாரமாகச் செயற்படகிறது. அந்த வகையில் ஒரேயொரு ஆசனம்கூட எத்தனையோ நல்ல விளைவுகளை உடம்பில் உண்டாக்குகிறது. பொதுவாக முதுகெலும்பில் ஒரு ஆசனம் சிறப்பாக இயங்குகின்றபோதே தண்டுவடமும் மூளையும் சுறுசுறுப்படைகின்றன. அப்போது தண்டுவடத்தோடு தொடர்புடைய பல நரம்பு மையங்கள் விழிப்படைகின்றன. இந்த நரம்பு மையங்களை வர்மமுடிகள் என்று சொல்லுகிறோம். இந்த விழிப்பினால் அந்த நரம்பு மையத்தோடு தொடர்புடைய உடம்பின் பகுதிகளெல்லாம் நலம்பெறுகின்றன.
சர்க்கரைநோய் குணமாவதோடு, உடம்பின் இதரபகுதிகளும் ஆரோக்கியமாக இருக்கவேண்டியது அவசியமென்பதற்காக ஒருசில ஆசனங்களை இடையில் நுழைக்க வேண்டியது தவிர்க்க முடியாமலுள்ளது. கணையம் என்ற ஒரு உறுப்பு மட்டுமே நமது உடம்பல்ல. இதயம், நுரையீரல், கல்லீரல், வயிறு, குடல், தண்டுவடம் இப்படி எல்லாப் பாகங்களும் எப்போதும் வலிமையாக இருந்தாக வேண்டும். அந்த வகையில் அமைக்கப்பட்டுப் பயிலும் ஆசனத்தொகுப்புத்தான் நமக்குப் பூரண நலத்தைத் தரமுடியும். அத்துடன் ஒரு ஆசனம் உடம்பில் உண்டாக்கிய விளைவுகளை, அடுத்துப் பயிலும் ஆசனம் சமன்செய்து புதிய விளைவைத் தருவதாக அமையவேண்டும். இந்த வகையில் சர்ப்பாசனத்துக்கும் நமது உடம்புக்கும் நிறையத் தொடர்புண்டு.
ஒருவருக்குச் சர்க்கரை நோய் மட்டுமல்லாது வாயுத்தொல்லை, கழுத்துவலி, தோள்வலி, இருதயவலி இப்படி வெவ்வேறு துன்பங்களும் இருக்கலாமல்லவா? இங்கே கூறப்பட்டுள்ள முறைகளைக் கொண்டு ஆசனங்களைத் தொடங்கும் ஒரு பயிற்சியாளர் பூரண உடல்நலத்தோடு விளங்க இந்தப்பயிற்சிகள் உபயோகமாக இருக்கும்.
சர்ப்பாசனம்:-
சர்ப்பம் என்றால் பாம்பு என்று பொருள். இவ்வாசனம் பாம்பு நமிர்ந்து படம் எடுப்பது போன்ற தோற்றத்தைத் தருவதால் இதற்கு சர்ப்பாசனம் என்ற பெயர் வந்தது. இதையே புஜங்காசனம் என்றும் சொல்வதுண்டு.
செய்முறை:-
விரிப்பின்மேல் கவிழ்ந்து படுக்க வேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் கவிழ்த்து இரண்டு காதுகளுக்கும் பக்கம் பக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை ஒருமுறை ஆழ்ந்து இழுத்து, இழுத்த மூச்சு முழுவதையும் வெளியே விட்டுவிடவேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் வசமாக ஊன்றிக்கொண்டு மார்பு, கழுத்து, வயிறு இவற்றை மேலே நிமிர்த்த வேண்டும் இடுப்பும் அதன் கீழ்ப்பகுதிகளும் நன்கு தரையில் படிந்திருக்கவேண்டும். பாதங்கள் தரையில் படியும்படியாக கால்கள் இரண்டும் நீட்டிய நிலையில் இருக்கவேண்டும். அதேசமயம் கால்கள், கைகள் இவற்றை விறைத்து நீட்டிக் கொள்ளக்கூடாது. எவ்வளவுக்கு அண்ணாந்து மேலே பார்க்கமுடியுமோ அவ்வளவிற்கு அண்ணாந்து கூரையைப் பார்க்கவேண்டும். மூச்சில்லாத இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். இந்தப்பத்து நொடிநேரம் சுவாசம் இல்லாமல் வெற்று நுரையீரலோடு இருக்க முடியாதவர்கள் இலேசாக சுவாசித்துக் கொள்ளலாம். பழகப்பழக இந்தநிலை சரியாக வந்துவிடும்.
பின்னர் கவிழ்ந்து தலையை மட்டும் ஒருக்களித்து வைத்துக்கொண்டு சில நொடிகள் இளைப்பாறிவிட்டு மீண்டும் செய்ய வேண்டும். இப்படிச் சர்ப்பாசனத்தை ஐந்து அல்லது ஆறு தடவைகள் செய்யவேண்டும். சாதாரணமாக உடல் நலத்துக்கு இது போதும். சிலருக்கு நெஞ்சுவலி, மூச்சிரைப்பு இருக்கலாம் இவர்கள் இவ்வானத்தை முதலில் ஐந்து முறை செய்து பழக்கத்தில் வந்தபின்னர் கூடுதலாகப் பத்து தடவைகள் செய்யவேண்டும். இதற்குமேல் வேண்டாம்.
கழுத்து எலும்பு தேய்ந்ததால் கழுத்துவலி இருப்பவர்கள் சர்ப்பாசனத்தை நான்கு தடவை செய்துவிட்டு சர்ப்பாசனத்திலேயே கண்டக்கிரியா என்ற பயிற்சியைச் செய்யவேண்டும். கைகளை ஊன்றி நிமிர்ந்தும் சர்ப்பாசனத்தில் இருந்தபடியே கழுத்தை இடதுபக்கமாகத் திருப்பி, நீட்டியிருக்கும் இடதுகால்பாதத்தை இரண்டு அல்லது மூன்று நொடிகளும்இ பின்னர் அப்படியே வலது பக்கமாகக் கழுத்தைத் திருப்பி, நீடடியிருக்கும் வலதுகால்பாதத்தை இரண்டு அல்லது மூன்று நொடிகளும் பார்த்துவிட்டுக் குப்புறப்படுத்து இளைப்பாற வேண்டும். பின்னர் மீண்டும் எழுந்து இம்மாதிரியே செய்யவேண்டும். இவ்வாறு மூன்றுமுறை சர்ப்பாசனத்தில் கண்டக்கிரியா செய்தால் போதும்.

கண்டக்கிரியா செய்யும்போது இடதுபக்கம் ஒருமுறையும் வலதுபக்கம் ஒருமுறையும் தருpம்பிப் பார்ப்பதற்குப் பதிலாக இடது - வலது, மீண்டும் இடது – வலது என்று இரண்டு சுற்றுக்கள்கூட ஒரு முறை சர்ப்பாசனத்தில் இப்பயிற்சியைச் செய்யலாம். பின்னர் மீண்டும் ஒருமுறை சர்ப்பாசனத்தில் இவ்வாறே கண்டக்கிரியா செய்யலாம். ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் கழுத்துவலி முற்றும் குணமாகிவிடும். கழுத்துப்பட்டை போடவேண்டிய அவசியம் இருக்காது.

சர்ப்பாசனத்தின் பயன்கள்:-
இப்பயிற்சியால் நுரையீரல் வளம்பெறுகிறது. இதயம் வலிமைப்பட்டு இதயத்துடிப்பு சமப்படுத்தப்; படுகிறது. இதயபலவீனத்தைப் போக்குகிறது. இதயத்தின் வால்வுகளுக்கு நல்ல பயிற்சி கிட்டுகிறது.
இதயத்தைச் சுற்றியுள்ள எண்டோகார்டியம், எபிகார்டியம், மயோகார்டியம், பெரிகார்டியம் என்னும் நான்கு உறைகளும் வலிமை பெறுகின்றன. இதனால் இதயப்பிணிகள் எளிதாக அகலுகின்றன.
இடை, பிங்கலை நரம்புகளின் இயக்கம் செம்மைப்படுகிறது. இடை, பிங்கலை நரம்புகள் முதுகெலும்பிலே சந்திக்கின்ற முதலாவது சந்திப்பு இடுப்புப் பகுதியில் தான் இருக்கின்றது. இந்த முதலாவது சந்திப்பை யோகநூல் மூலாதாரம் என்றும், உடற்கூறறு விஞ்ஞானிகள் இதனை பெல்விக் பிளக்ஸஸ் (Pelvic Plexusள) என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த இடத்தில் இவ்வாசனத்தின் இயக்கம் அபாரமானதாக இருக்கிறது. இதனால் இடுப்பு வலிகள் அகலுகின்றன.
பிடரி எலும்புகளுக்கு சர்ப்பாசனமும், கண்டக்கிரியாவும் அற்புதமான பயனைத் தருகின்றன. தீர்வே இல்லாத கழுத்துவலித் துன்பம் நீங்குவது மட்டுமன்றிக் கழுத்துப்பட்டை போட்டுக்கொள்ளும் அவசியமும் அகலுகின்றது. முதுகெலும்பை மிக இலகுவாக வளைத்துப் பயிற்சி கொடுப்பதில் சீரிய ஆசனம் இது. தோள் எலும்புகள்இ தோள்மூட்டுக்கள், கைஎலும்புகள் ஆகியவை பலம்பெறுகின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்பை, சிறுநீர்க்குழாய் போன்ற உறுப்புக்கள் இதனால் வளம்பெறுகின்றன. பெண்களுக்குப் பிரசவத்தின் பின்னால் உண்டாகும் வயிற்றுச் சரிவைத் தடுக்கிறது. கருப்பை, ஓவரி, மார்பகங்கள் ஆகிய பகுதிகளுக்கு நல்ல பயிற்சி கிட்டுகிறது. கர்ப்பிணிகள் இவ்வாசனத்தைச் செயயக்கூடாது.
சலபாசனம்:-
கால்களை நீட்டிக்கொண்டு கவிழ்ந்து படுக்கவேண்டும். நெற்றி அல்லது மோவாயைத் தரையில் பொருத்திக்கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் உடம்பை ஒட்டிப் பக்கத்தில் நீட்டிக்கொண்டு கைகளை இறுக்கமாக முஷ்டிபிடித்துக் கொள்ளவேண்டும். மூச்சை இழுத்து உள்ளே அடக்கிக்கொண்டு முஷ்டிபிடித்த கைகளைத் தேவைப்பட்டால் தரையில் ஊன்றிக்கொண்டு இரண்டு கால்களையும் நீட்டிய நிலையில் பளிச்சென்று மேலே உயர்த்தவேண்டும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். கால்களைக் கீழே இறக்கி சற்று இளைப்பாறிக்கொண்டு மீண்டும் இம்மாதிரியே செய்யவேண்டும். இப்படி நான்கு முறைகள் செய்தால் போதும்.

ஆசனத்தில் கால்களை உயர்த்தி இருக்கின்றபோது கால்கள் வளையக்கூடாது. சிரமம் இல்லாதபடி கால்களை நன்கு நீட்டிய நிலையில் எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தினால் போதும். அதேசமயம் முடிந்தவரை கால்களையும் விறைப்பாக நீட்டவேண்டும். சிலருக்கு மூச்சை அடக்கிக்கொண்டு இவ்வாசனத்தைச் செய்வது சிரமமாக இருக்கும். அவர்கள் மூச்சை வெளியேற்றிவிட்டோ அல்லது கொஞ்சமாக மூச்சை உள்ளே அடக்கிக்கொண்டோ செய்தால் போதும். இப்படிச் செய்வதில் பிழையேது, மில்லை. ஆயினும் இவ்வாசனத்தின்போது மூச்சை உள்ளே அடக்கிய நிலைதான் சரியான மூச்சின் நிலையாகும்.
சிலருக்கு இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்த முடியாமலிருக்கும். அவர்கள் மூச்சை அடக்கிக்கொண்டு, முஷ்டிபிடித்த கைகளைத் தொடைகளுக்குக்; கீழே தாக்குக் கொடுத்துக்கொண்டு கால்களை உயர்த்தினால் எளிதாக ஆசனம் வந்துவிடும். ஆசனம் நன்கு கைவந்த பின்னர் கைமுஷ்டிகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு செய்யலாம். அல்லது எப்போதும் தொடைகளுக்குக் கீழே கைமுஷ்டியை வைத்துக்கொண்டும் செய்யலாம். பிழையில்லை.
இன்னும் சிலருக்குத் தொடைகளுக்குக் கீழே கைமுஷ்டிகளை தாக்குக் கொடுத்துக்கொண்டாலும் இரண்டு கால்களையும் மேலே உயர்த்த முடியாமலிருக்கும். இப்படிப்பட்டவர்கள் மூச்சை அடக்கியபடி ஒவ்வொரு காலாக உயர்த்திச் செய்யலாம். இதனை ஏகபாத சலபாசனம் என்று கூறுவார்கள்.
சிலநாள் பயிற்சிக்குப் பின்னர் முயற்சி செய்தால் இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்த வந்துவிடும். இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்துவதற்கும் ஒவ்வொரு காலாக உயர்த்திச் செய்வதற்கும் கிடைக்கின்ற பலன்களில் வித்தியாசமில்லை. ஆயினும் இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்திச் செய்வது இவ்வாசனத்தின் முழுப்பயனையும் பெறுகின்ற சரியான முறையாகும்.
பயன்கள் (முதற்பயன்)
சலபாசனத்தில் நமது உடம்புக்கு மூன்று வகைகளில் அற்புதமான பயன்கள் கிட்டுகின்றன. முதலாவதாக இவ்வாசனம் உடம்பின் நரம்பு மண்டலத்தில் வலுவாக இயங்கி, ஒரே சமயத்தில் நரம்பு மண்டலம் முழுவதையும் சுறுசுறுப்படையச் செய்கிறது. இடைநரம்பு, பிங்கலைநரம்பு என்று சொல்லப்படும் இடதுகால் நரம்பையும் வலதுகால் நரம்பையும் இயக்கி இவற்றோடு தொடர்புடைய நரம்பு மண்டலத்தின் எல்லாப் பகுதிகளையும் சுறுசுறுப்பும் வலிமையும் பெறச்செய்கிறது. சலபாசனம் என்ற இந்த ஒரே ஆசனத்திலேயே நமது உடம்பில் அமைந்துள்ள சுமார் நாற்பத்தெட்டு வர்மமுடிகள் ஒரேசமயத்தில் சுறுசுறுப்பும், தூண்டுதலும் பெறுகின்றன.
வர்மப்புள்ளிகள்:-
நமது உடம்பில் 72,000 நரம்புகள் இயங்குகின்றன. இவ்வளவு நரம்புகளுக்கும் இடை, பிங்கலை, தணடுவடம் ஆகிய மூன்று நரம்புகள் ஜீவ ஆதாரமாக இருந்து நமது உடலை இயங்கச் செய்கின்றன. இந்த மூன்று நரம்புகளும் முதுகெலும்புத் தொடரில் ஆறு ஆதாரகமலங்களாக இணைந்து மூளைக்குச் செல்வதை பத்மாசனம் பற்றிய விளக்கத்தின்போது எழுதியிருந்தேன்.
இந்த ஆறு ஆதாரகமலங்கள் எனப்படும் ஆறு இணையங்களும் உடம்பெங்கும் பரவியுள்ள நரம்புத் தொகுதிகளோடு தொடர்பு கொண்டவையாகும். இப்படி உடம்பு முழுவதும் பரவி அமைந்துள்ள நரம்புத் தொகுதிகள் மொத்தம் 96 என்று யோகசாஸ்திரம் கூறுகிறது. இந்த 96 நரம்புத் தொகுதிகளையே நாம் 96 வர்மமுடிகள் என்று கூறுகின்றோம். அந்த வகையில் சலபாசனம் நமது உடம்பிலுள்ள நாற்பத்தெட்டு வர்மமுடிகளை ஒரேசமயத்தில் இயக்குகிறது. இதனால் உடம்பு அற்புதமாகச் சுறுசுறுப்படைகிறது. சோம்பல் அடியோடு அகலுகிறது.

No comments:

Post a Comment