விளையாட்டு வீரர்களே உலர் திராட்சைகளை சாப்பிடுங்க உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இந்த உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும், அமினோ அமிலங்களும் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கின்றன. மேலும் பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு தேவையான உடல் வலிமையை உலர் திராட்சை தருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் மத்தியில் சாப்பிடக்கூடிய ஊக்கமளிக்க கூடிய உணவாக பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக தொலைதூர ஓட்டப்பந்தயங்கள் போன்றவற்றில் எண்டியூரன்ஸ் என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் நீண்டநேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல்வலிமை மிக மிக அவசியம். தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்பவர்கள் உலர் திராட்சையை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கின்றது. பொதுவாக தாக்குப்பிடிக்கத் தக்க உடல்வலிமையை பெறுவதற்காக போட்டியாளர்கள் பலவகையான வழிமுறைகளை கடைபிடிப்பார்கள். கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் செயற்கையான இனிப்பு மிட்டாய்களை மெல்வது போட்டியாளர்கள் பலரும் செய்யக்கூடிய ஒன்று. ஆனால் அப்படியான செயற்கை இனிப்புக்களை மெல்வதை விட, இயற்கையான முறையிலேயே இப்படியான தாக்குப்பிடிக்கத்தக்க வலிமையை பெறமுடியும் என்று கலிபோர்னிய பல்கலைக்கழகத்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது உலர் திராட்சைப்பழங்களை மென்று சாப்பிடுவதன் மூலம் விளயாட்டுப்போட்டிகளில் தேவைப்படும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல் வலிமையை பெற முடியும் என்று இவர்கள் தங்கள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். உலர் திராட்சையை சாப்பிட்டவர்கள் ஒரு புறமும், தண்ணீர் மட்டும் குடித்து விட்டு செல்பவர்கள் ஒரு புறமும், வேறு சிலர் கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் இனிப்புகளை சாப்பிட்டவர்கள் ஒரு புறமுமாக ஒடினார்கள். போட்டியின் இறுதியில் வெறும் தண்ணீர் குடித்துவிட்டு ஓடியவர்களை விட, இனிப்புகளையும் உலர் திராட்சைகளையும் சாப்பிட்டுவிட்டு ஓடியவர்கள் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை ஒரு நிமிட நேரம் முன்னதாக ஓடி முடித்தார்கள். இதிலிருந்து, கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் இனிப்புக்களுக்கு சம்மாக உலர் திராட்சைகளும் நீடிக்கத்தக்க உடல் வலிமையை தருவதாக தெரிவித்திருக்கும் ஆய்வாளர்கள், உலர் திராட்சைகள், இயற்கையான ஊக்கசக்தியாக விளங்குவதாக தெரிவித்திருக்கிறார்கள். உலர் திராட்சைகளில் காணப்படும் அதிகமான பொட்டாஷியம் மற்றும் இரும்புசத்து, விளையாட்டு போட்டிகளுக்கு தேவைப்படும் நுண்ணிய சக்தியாக செயற்படுவதால் இவை போட்டியாளர்களுக்கு இயற்கையான ஊக்கமருந்தாக பயன்படுவதாகவும், செயற்கையான இனிப்புகளில் இருக்கும் கூடுதல் சர்க்கரை இதில் இல்லாமலிருப்பது கூடுதல் நன்மை பயக்கும் என்று சென்னையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் கவுசல்யாநாதன் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment