Friday 20 December 2013

கேள்வி வரும் புத்தாண்டை சிறப்பாக வெற்றிகரமாக அமைத்துக் கொள்ள பத்து வழிகள் சொல்லுங்களேன்.. சத்குரு: நம் வாழ்க்கையை கோஷங்கள், கொள்கைகள், விதிமுறைகள் கொண்டு அமைக்க முற்படுவதைப் போல் முட்டாள்தனம் ஏதுமில்லை. எல்லாவற்றையும் கொள்கைகள் கொண்டு நடத்த முற்பட்டால், வாழ்க்கையில் ஆனந்தத்தைத் தொலைத்துவிட்டு இயந்திரங்களாக நடமாட வேண்டி வரும். இப்பொழுதெல்லாம் யாரையாவது பார்த்து சந்தோஷமாக புன்னகைத்தால், பதிலுக்குக் கூடப் புன்னகைக்காமல், அவர்கள் நம்மை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு வாழ்க்கை உயிரற்று வெறுமையாகிவிட்டது. மனைவியிடம் சில நிமிடங்கள் பேச வேண்டும், வெளியில் செல்கையில், பக்கத்து வீட்டு மனிதருக்கு கையசைக்க வேண்டும், தினமும் குழந்தைக்காக இத்தனை நிமிடங்கள் செலவு செய்ய வேண்டும் என்றெல்லாம் கணக்கிட்டு வாழ்க்கையை நடத்தினால், அது உங்கள் உயிர்த்தன்மையைக் கொன்றுவிடும். நீங்கள் மனைவியிடம் பேசுவதற்காக ஒதுக்கிய நேரத்தில் நீங்கள் சொல்வதைக் கேட்க அவளுக்கு விருப்பமில்லை என்றால், என்ன செய்வீர்கள்? உங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு இதுபோன்ற கொள்கைகள் பயன்படாது. வாழ்க்கையை அடிப்படையான உயிர்த்தன்மையின் மீது அமைக்க வேண்டும். வாழ்க்கையை அந்தந்த சூழ்நிலைக்கேற்ப, அவசியம் பொறுத்து, தேவையானவற்றை நாம் தான் செய்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment