Tuesday 24 February 2015

Raja Kannan added 2 new photos — with Swami Nirakara and 9 others.
சத்குரு பரப்பிரம்மாவைத் தேடி...
பகுதி I
நேற்று தேனிக்கு அருகிலுள்ள போடி நாயக்கனூரில் நண்பரின் திருமணம். 7.30 லிருந்து 9 மணிக்குள்ளாக முகூர்த்தம், நான் காலை 10 மணிக்கு போடி நாயக்கனூர் பஸ் நிலையத்தில் இறங்கி,
"பாஸ்...! நான் பஸ் ஸ்டேன்டுல எறங்கிட்டேன்"
அலைபேசியில் அறிவித்தேன்.
"கல்யாணம் முடிஞ்சு நாங்க கிளம்பப்போறோம், சீக்கிரம் வந்தால் சாப்பாடு காலியாகாது" என்றது எதிர்முனை. அடித்துப்பிடித்து ஓடியதில் பலனில்லாமல் இல்லை, கல்யாண சாப்பாடு கல்யாண சாப்பாடுதான்!
அங்கிருந்த நண்பர்கள் யாரும் ஈஷா அன்பர்கள் அல்லர். ஆனால், அவர்கள் திருப்பூரில் பணியாற்றுவதால் சத்குருவைப் பற்றியும் ஈஷாவை பற்றியும் அறிவர். அவர்களிடம், சத்குரு சென்ற ஜென்மத்தில் வாழ்ந்த இடத்திற்கு செல்லலாம் என்றால் அது செல்லுபடி ஆகாது. இந்தியா-தென் ஆப்ரிக்கா உலகக் கோப்பை ஆட்டம் வேறு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அவர்கள் திருப்பூர் வண்டியில் ஏறிவிட்டார்கள். நான் தனியாகத் தான் மதுரையிலிருந்து வந்திருந்தேன். இப்போதும், தனியாகத்தான் செல்ல வேண்டும். கல்யாணம் தேனிக்கு அருகில் என்றதுமே, M.சுப்புலாபுரம் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால், தனியாக செல்வதில் சற்று தயக்கம். மணி 11 மணிக்கும் மேலாக ஆகியிருந்தது. வெய்யில் ஒருவித களைப்பைத் தந்தது. சிவனே என்று மதுரைக்குத் திரும்பிடலாம் என எனக்குள் பேசியவாறே "ஒரு டீ" ஆர்டர் செய்தேன்.
"அண்ணே இங்க M.சுப்புலாபுரம் எங்க இருக்கு, எப்படி போகணும்!"
"தெரியாது! ஆனா... பஸ் இங்க வரும்!"
டீ குடித்து முடிப்பதற்குள் பஸ் வந்தால் போகலாம்! இல்லையென்றால் வீட்டிற்குத் திரும்பலாம்! என்றிருந்தேன்.
சத்குரு முந்தைய பிறவியில் பிறந்த ஊர் (விருதுநகர் அருகில் நடுவப்பட்டி) என்னுடைய ஊருக்கு 15கி.மீ தொலைவில்தான் இருக்கிறது என்று தெரிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அங்கிருந்து கோபத்துடன் சத்குரு நீங்கியதாகவும் அவர் வாழ்ந்த வீடு கூட இடிந்து இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். எனவே அங்கு செல்வதற்கு எனக்கு அதிக ஆர்வமிருக்கவில்லை. இப்போது கண் முன்னே நம்முடன் நேரடியாக சத்குரு நமக்கு அருளிச் செல்கிறார். பின்பு ஏன் அங்கு சென்று அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வேறு!
ஆனால், முன் ஜென்மம் பற்றி அரட்டை அடிப்பது அலாதியான சுவாரஸ்யம் உண்டு. எனக்குமட்டுமல்ல பலருக்கும். இன்றும் கூட பல திரைப்படங்களும் முன் ஜென்மக் கதைகளை மையமாக வைத்து வந்த வண்ணம் உள்ளன.
"அண்ணே ஸ்கோர் என்ன.." ஒரு ஆட்டோ காரர் டீக்கடைக் காரரிடம் கேட்டார். அவர் சொன்ன ஸ்கோரை கேட்டுவிட்டு "அப்பாடா எப்படியும் முன்னூறுக்கு கொண்டாந்துருவாய்ங்க!" என்று சொன்னபோது அவர் முகத்தில் பெரிய சவாரி கிடைத்த சந்தோஷம்.
சுமாராக இருந்த அந்த டீயைக் குடிக்க சற்று நேரம் பிடித்தது. சரி! பஸ் வருவதாகத் தெரியவில்லை. மதுரை பஸ் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தேன். அங்கு M.சுப்புலாபுரம் பஸ் நின்றுகொண்டிருந்தது. ஆம்! அந்த டீக்கடைக்காரர் தவறுதலாகச் சொல்லியிருக்கிறார்.
உடனே எதுவும் யோசிக்காமல் ஏறி அமர்ந்துகொண்டேன். பஸ் கிளம்பியது. பயணக் களைப்பில் லேசான தலைவலி இருந்தது. பஸ் நகரத்தை விட்டு M.சுப்புலாபுரம் கிராமம் நோக்கிச் செல்ல செல்ல எனது களைப்பும் தலைவலியும் காணமல் போய் ஒருவித சுகமான நிலையை உணர்ந்தேன்.
பஸ் விட்டு இறங்கியதும் சத்குரு பரப்பிரம்மா கல்வி அறக்கட்டளை என்ற போர்டு என்னை வரவேற்றது. அந்த தெருவிலேயே நடந்து சென்றேன்.
"இங்க சத்குரு கோயில் எங்க இருக்கு" ஒரு அம்மாவிடம் கேட்டேன்.
"இப்புடி போயி, அப்புடி போனா அங்க இருக்கு" என்று கைகளை அசைத்துச் சொன்னார்.
அங்கு சென்றேன். அங்கே ஒரு காளியம்மன் கோயிலும் ஒரு விநாயர் கோயிலும் இருந்தது. தயங்கியபடியே விநாயகர் கோயில் வாசலில் நின்றபடி,
"சத்குரு கோயில்...?!" என்றேன்.
"வாங்க உள்ள வாங்க!" காவி வேட்டி கட்டியவர் வரவேற்றார்.
உள்ளே நுழைந்தவுடன் ஒரு விநாயகர் தெரிந்தார். இடது புறத்திலிருந்து அறைக்கு முன்னே சத்குரு பரப்பிரம்மா படம் கொண்ட காலண்டரும் உள்ளே சத்குருவின் திருவுருவங்களும் இருந்தன.
அந்த பூசாரி எல்லா கோயிலிலும் செய்வதுபோல் முதலில் விநாயகருக்கு தீபம் காட்டிவிட்டு, பின் சத்குரு உருவங்களுக்கு தீபம் காட்டி திருநீரை எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
பொதுவாக கிராமத்துப் பூசாரிகள் தங்கள் கைகளாலேயே பூசி விட்டு விடுவார்கள். ஆனால், அவர் என்னை எடுத்துக்கொள்ளச் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. அந்த திருநீரு ஈஷா திருநீரைப் போலவே இருப்பதை என்னால் உணரமுடிந்தது.
சத்குரு சந்நிதியின் முன்பிருந்த இடத்தில் உட்கார்ந்து தியானம் செய்ய நினைத்தேன். ஆனால், பூசாரி என் அருகில் வந்து உட்கார்ந்தார். என்னிடம் அவர் கேள்விகள் கேட்க நினைப்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
பூசாரி என்னிடம் என்ன கேட்டார், அங்கு நான் உணர்ந்த அனுபவங்கள் என்ன, சுப்புலாபுரம் போக நினைப்பவர்கள் எப்படிப் போகலாம்! எப்போது போகலாம்? நாளைக்கு சொல்கிறேன்!

No comments:

Post a Comment