Saturday, 9 April 2016

கர்ம வினை


குறிப்பு 1 : இந்தக் கட்டுரையை எந்த மதத்தினரும் படிக்கலாம். மதம் வேறு என்றாலும் கூற வரும் கருத்து அனைவருக்கும் உகந்ததே.

குறிப்பு 2 : நாத்திகர்களுக்கான கட்டுரை அல்ல. தொடர்வது அவரவர் விருப்பம்.

இந்து மதம் பழமையான மதம் மட்டுமல்ல யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாதது. இவர் தான் தலைவர், குரு, கடவுள், உருவாக்கியவர் என்று எந்த அடையாளமும் இல்லாதது. யாரும் யாரையும் கட்டுப்படுத்த இந்து மதத்தில் முடியாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலர் உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டு இருந்தாலும், அவர்கள் கூறுவதை யாரும் காது கொடுத்து கேட்பதில்லை, கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை காரணம் இங்கு யாரும் யாருக்கும் கட்டளை இட முடியாது. இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது. இந்து மதத்தில் அவரவர் நிர்ணயிப்பதே அவரவர்க்கு கட்டுப்பாடுகள். Image Credit – Pagecovers.com

ஒரு இடத்தில் கட்டுப்பாடு இருந்தால், அதே போல இன்னொரு இடத்தை உருவாக்கி அந்தக் கட்டுப்பாட்டை மீறலாம் யாரும் வந்து ஏன் செய்கிறாய் என்று கேட்க முடியாது, அது அநாகரீகமாக இல்லாத வரை. புறக்கணிக்கலாம், எதிர்ப்புக் குரல் எழலாம் ஆனால், எதையும் தடுக்க அதிகாரமில்லை.

சொல்லப்போனால் உலகில் உள்ள மதங்கள் அனைத்துமே நல்ல விசயங்களையே போதிக்கிறது நாம் தான் பிரச்சனையான விசயங்களை / கட்டுப்பாடுகளை புகுத்தி அனைவருக்கும் சிக்கலை ஏற்படுத்துகிறோம்.

பண்டைய காலம் தொட்டே இந்து மதத்தில் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு மறைமுகக் காரணம் இருக்கும். நேரடியாக அதைப் பார்க்கும் போது மூட நம்பிக்கை போல தோன்றினாலும் அதன் உண்மையான பின்னணி காரணம் ஏதாவது ஒரு அறிவியல் உண்மையைக் கொண்டு இருக்கும். இது தெரியாத வரை நமக்கு அது மூட நம்பிக்கையாகத் தோன்றும். ஒரு சில நல்ல விசயங்களை செய்யக் கூறினால் செய்ய மாட்டார்கள் ஆனால், அதே அதற்கு ஏதாவது கட்டுக்கதையைக் கூறினால், அதற்காக பயந்து கொண்டு அதைச் செய்வார்கள். புதிதாக பார்க்கிறவர்களுக்கு அது மூட நம்பிக்கையாக இருக்கும். ஆராய்ந்து பார்த்தால், அதில் உள்ள அறிவியல் உண்மை புலப்படும். தற்போதைய விஞ்ஞானிகள் இத்தனை தொழில்நுட்பத்தை வைத்து கண்டறியும் பல விசயங்களை நம் முன்னோர்கள் முன்பே கண்டறிந்து இருக்கிறார்கள்.

இந்து மதத்திற்கு என்று ஒரு பெரிய சிறப்பு உள்ளது. அது தான் Flexibility. காலத்திற்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொண்டே இருக்கும். எந்த புதிய விசயங்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டது. தண்ணீர் போல இடத்திற்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்ளும். உதாரணத்திற்கு முற்காலத்தில் இருந்த பிற்போக்குத் தனங்கள் தற்போது இல்லை அல்லது குறைந்து விட்டது. இதைத் தான் செய்து ஆக வேண்டும் என்று கட்டுப்படுத்த யாருமே இல்லாதது தான் இந்த Flexibility க்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். இந்து மதத்தை சார்ந்தவர்கள் பெரும்பான்மையோர் தீவிர மதப் பற்றாளர்கள் கிடையாது. இதன் காரணமாகத் தான், இந்து மதப் பற்றாளர்கள் குரல் கொடுக்கும் போது பெரிய அளவில் மக்களிடம் இருந்து ஆதரவு கிடைப்பதில்லை. தற்போதைய சூழ்நிலையில் இது கொஞ்சம் மாற்றம் கண்டு வருவதாக அறிகிறேன்.

இந்து மதம் என்பது மதம் என்பதையும் தாண்டி ஒரு வாழ்வியலாகத் தான் கருதப்படுகிறது. அதாவது மக்கள் கோவிலுக்கு வருகிறார்கள் என்றால் அதற்கு பூ, தேங்காய், மாலை, நெய், பால், சந்தனம் etc என்று நிறைய வாங்குகிறார்கள். இதனால் இது தொடர்புடைய வியாபாரம் நடைபெறுகிறது. இதனால் நல்லதோ கெட்டதோ பலரும் இதனால் பயன் பெறுகிறார்கள். இது சம்பந்தப்பட்ட விவசாயத்தில் உள்ளவர்கள் பலன் பெறுகிறார்கள். தற்போது இது கமர்சியலாகி விட்டாலும், முன்பு இது போன்ற விசயங்களை மனதில் வைத்தே இவை உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். பலருக்கு இந்தக் காரணிகள் தான் வாழ்க்கை கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.

பண்டிகைகள், திருவிழா என்று பல வருவது அனைத்து மக்களும் கூடவும், சந்தோசத்தை பகிரவும், குடும்பமாக இணையவும், இதன் மூலம் பலரின் வியாபாரம் விரிவடையவும் என்று செல்கிறது. இது மதம் என்ற அளவிலும் பார்க்கலாம் அல்லது அதன் மூலம் நடக்கும் குடும்பக்களுக்கிடையேயான உறவுகளை பலப்படுத்தும் ஒரு காரணியாகவும் பார்க்கலாம். பார்ப்பவரின் எண்ணங்களைப் பொறுத்தது.

தற்போது தான் தலைப்பிற்கே வருகிறேன். கர்மவினை பற்றிக் கூறும் போது இந்து மதம் பற்றிய சிறு முன்னுரை இருந்தால், நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் கூறியது தான் மேலே இருப்பவை. சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், இந்து மதம் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் “FLEXI” மதம்.

இந்து மதத்தை (உதாரணத்திற்கு) இரு வகையாகப் பிரிக்கலாம் அதாவது காலங்கள் மாறினாலும் அடிப்படைத் தத்துவங்கள், அறநெறிகள், நம்பிக்கைகள் போன்ற மாறாத விசயங்கள். இன்னொரு வகை “FLEXI மதம்” அதாவது காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டே இருப்பது. இந்த முதல் பிரிவில் தான் “கர்மவினை” என்பது வருகிறது. இதிலும் யாரோ தனிப்பட்ட ஒருவர் கூறியதை அனைவரும் பின்பற்றுவதில்லை, பல அறிஞர்கள் தங்கள் அனுபவத்தின் வாயிலாகக் கூறியதை நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இது தான் என்று யாரும் அறுதியிட்டுக் கூறவில்லை என்றாலும், இது தான் நமது இந்து மதத்தின் நம்பிக்கை என்றாகி விட்டது. பல தத்துவங்கள், அறிஞர்களின் தொகுப்பே இந்து மதம். கர்மவினை பற்றி பலர் கூறி இருந்தாலும் “விவேகானந்தர்” கூறியது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று கூறலாம்.

கர்மவினை என்பது இந்து மதத்தில் மட்டுமே உள்ளது. பலரின் தெரியாத / புரியாத கேள்விகளுக்கு இது விடை கூறுகிறது ஆனால், கூறப்படும் விடையை ஏற்றுக்கொள்ள சிரமமாக இருக்கிறது. இதற்குக் காரணம் நம்மால் அதை ஜீரணிக்க முடியாதது தான்.

முன் குறிப்பிலேயே கூறி இருந்தாலும், திரும்பவும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன். பின்வருபவை கர்மவினை / இந்து மதக் கோட்பாடுகள் / ஆத்மா / மறுபிறவி / பாவ புண்ணியம் போன்ற ஏதாவது ஒன்றில் நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தான். எனக்கும் பல விசயங்களுக்கு பதில் தெரியாது ஆனால், அதற்கு எங்கோ பதில் இருக்கும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

இந்து மதத்தில் தான் “ஏன்? எதற்கு? எதனால் நடக்கிறது?” என்பதற்கு பதில் இருக்கிறது. அந்த பதில் தான் “கர்மவினை”. எந்த மத்தினராக இருந்தாலும், எல்லோருக்கும் சில பொதுவான கேள்விகள் இருக்கும். “நல்லவனாக இருக்கிறான் ஆனால், ஏன் அவன் கஷ்டப்படுகிறான்? அவர் எந்த தவறும் செய்யவில்லையே…! பின் ஏன் அவருக்கு இவ்வளவு சிரமம். நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லையே ஏன் எனக்கு இவ்வளவு துன்பம்? அவன் அவ்வளவு அநியாயம் பண்ணுறான் ஆனால், சுகமாக இருக்கிறானே! எப்படி? ஊரையே அடித்து உலையில் போட்டு இருக்கிறான் ஆனால், அவன் நல்லாத்தானே இருக்கிறான்!” இந்தக் கேள்விகள் இல்லாத மனிதர் இந்த உலகிலேயே இருக்க முடியாது

“கர்மவினை / ஆத்மா / மறுபிறவி / பாவ புண்ணியம்”. பற்றி. 

இந்து மத தர்மப் படி ஒருவன் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் அதற்குண்டான பலனை அவன் பெற்றே ஆக வேண்டும் என்பது நியதி. இந்தப் பிறவியில் இல்லை என்றாலும் அடுத்த / அதற்கடுத்த பிறவியில் அதை அவன் அடைந்தே தீர வேண்டும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பதை காண வாய்ப்புக் கிடைக்கும். தற்போது இங்கே மறுபிறவி என்பது வருகிறது. இந்த மறுபிறவி என்பது எத்தனை இருக்கும் என்பது பற்றி எனக்குத் தெரியாது / புரிந்து கொள்ள அனுபவமில்லை.

ஒருவர் ஒரு பிறவியில் இறந்தால் அழிவது அவரது உடல் மட்டுமே, ஆத்மா அல்ல. பாவ புண்ணியங்களைக் கொண்ட அந்த ஆத்மா தன்னுடைய கர்மவினைகளை (நல்லது கெட்டதை) அனுபவிக்க சரியான உடல் கிடைத்தால் அதில் புகுந்து விடும். நான் கூறுவது ஆத்மா, ஆவி அல்ல . உதாரணத்திற்கு அந்த ஆத்மா அவரின் தலைமுறையில் யாருடைய பிறப்பு தன் கர்ம வினைகளை அனுபவிக்க பொருத்தமாக உள்ளதோ அவரின் உடலில் இணைந்து விடும். எனக்கு இதில், ஆத்மா அவரின் தலைமுறை மக்களிடையே மட்டுமே போகுமா அல்லது வேறு சம்பந்தமில்லாத ஒருவரின் உடலுக்கும் போகுமா என்பது பற்றி எனக்கு கேள்விகள் / சந்தேகம் இருக்கிறது.

நீங்கள் நடிகர் திலகம் அவர்கள் நடித்த “கர்ணன்” படம் பார்த்து இருப்பீர்கள். அதில் கர்ணனை அனைவரும் தாக்கியும் அவர் சாக மாட்டார் காரணம், அவர் செய்த தர்மங்கள் / புண்ணியம். அவரை அழிக்க வேண்டும் என்றால், அவரிடம் உள்ள புண்ணியம் அனைத்தும் தீர வேண்டும். இதற்காகத் தான் கிருஷ்ணர் அந்தணர் வேடம் பூண்டு கர்ணனிடம் இருக்கும் புண்ணியத்தை யாசகம் கேட்பார். தன்னுடைய புண்ணியங்களை கர்ணன் தாரை வார்த்துக்கொடுத்ததும் அடுத்த தாக்குதலில் இறந்து விடுவார். இந்த விசயம் ஓரளவு உங்களுக்கு கர்மவினை / பாவ புண்ணியம் பற்றி புரிந்து கொள்ள உதவும் என்று நினைக்கிறேன்.

தற்போது நீங்கள் சிரமம் அனுபவித்துக்கொண்டு இருந்தால், அது போன பிறவியின் வினைப்பயனாகத் தான் இருக்க வேண்டும். இவ்வாறு கூறுவதை ஏற்றுக் கொள்வது என்பது சிரமமான ஒன்று தான். இதை Just like that மறுத்து பேசி விட முடியாது. இதற்காக நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும். பழைய பின்னனிகளை தேடிப் பார்க்க வேண்டும். நம் முன்னோர்கள் செய்த தவறுகள் என்ன என்று தேடித் பார்த்தால் ஒருவேளை உங்களுக்கு இதற்கு விடை கிடைக்கலாம்.

உதாரணத்திற்கு என்னுடைய முன்னோர்கள் அநியாய வட்டிக்கு மக்களிடம் பணத்தைப் பெற்று அதிகளவில் நிலங்களை வாங்கிப் போட்டார்கள். “பணம் தேவைப் படுவதால் தானே மக்கள் வருகிறார்கள் நான் ஒன்றும் ஏமாற்றவில்லையே!” என்று நீங்கள் நினைத்தால்…! அது தவறு. நம்மிடையே முடியாமல் தான் வருகிறார்கள் ஆனால், நாம் அதை சாதமாகப் பயன்படுத்திக்கொண்டு அநியாய வட்டி வசூலித்தால், அதுவும் தவறே. எங்கள் விசயத்தில் நடந்தது அநியாய வட்டி. இதன் காரணமாக என்னுடைய அப்பா கடன் பிரச்சனையால் வட்டி கட்டியே எங்கள் நிலம் அனைத்தையும் இழக்க வேண்டி வந்தது. அதாவது “வட்டியில் சம்பாதித்த பணம் வட்டி கட்டியே போகும்” என்ற முன்னோர் வாக்கிற்கேற்ப.

கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என்று வாங்கும் நபர்கள், தற்போது புண்ணியத்தின் பலனால் பெரும் பணக்காரராக இருக்கலாம் ஆனால், அவர்களின் இறுதிக் காலத்தில் அல்லது அவரது அடுத்த தலைமுறையை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், பெரும் துன்பத்தில் இருப்பார்கள். உங்கள் கிராமங்களிலேயே உங்கள் தாத்தா பாட்டி அம்மா அப்பாவிடம் கேட்டுப் பார்த்தீர்கள் என்றால் பல கதைகளைக் கூறுவார்கள். பலரின் சாபம், வயிறெரிந்து கொடுக்கப்படும் பணம் அவர்களை நிம்மதியாக வாழ விடாது.

சரிங்க! நான் போன பிறவியில் நிறைய பாவம் செய்து விட்டேன் போல அதனால் சிரமப்படுகிறேன் என்று வைத்துக்குங்க… இந்தப் பிறவியில் நல்லது செய்கிறேன் எனவே, இந்த வினைப்பயனில் இருந்து தப்பித்துக்கொள்ளலாமா! என்று கேட்டால்…

முடியாது. நீங்கள் செய்த பாவத்தின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும் அதில் இருந்து நீங்கள் எக்காலத்திலும், எத்தனை பிறவி எடுத்தாலும் தப்பிக்கவே முடியாது ஆனால், இந்த தாக்கத்தின் அளவைக் குறைக்க முடியும்.

எப்படி?

கர்மவினை நீங்கள் செய்த தவறுக்கு எப்படி தண்டனை / சிரமம் கொடுக்கிறதோ அதே போல நீங்கள் செய்யும் நல்லதுக்கும் உங்களுக்கு அது நன்மை செய்தே ஆக வேண்டும். இது நியதி. இதில் இருந்து கர்ம வினை கூட தப்பிக்க முடியாது. அதாவது “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை “மெய்வருத்தக் கூலி தரும்” என்பதும். அதே விதி இங்கேயும் பின்பற்றப் படுகிறது. நீங்கள் கடந்த பிறவியில் நிறைய பாவம் செய்ததால், இந்தப் பிறவியில் நீங்கள் பல சோதனைகளை சந்திக்க வேண்டும் அதில் இருந்து தப்பிக்கவே முடியாது ஆனால், நீங்கள் நல்ல விசயங்கள் பல செய்வதன் மூலம் இதன் கடுமையான தாக்கத்தில் இருந்து கொஞ்சம் இளைபாறுதல் பெறலாம். புரியும் படி கூறுவதென்றால், பாலைவனத்தில் நடக்கும் போது கொஞ்சம் ஜில்லுனு ஜுஸ் கிடைத்த மாதிரி ஆனால், நீங்கள் வெயிலில் தான் நிற்க முடியும், அதை தவிர்க்க முடியாது.

எப்படி?

நீங்கள் செய்த நல்ல விசயத்திற்கான பலனை கர்மா கொடுத்தே ஆக வேண்டும். நல்ல விசயம் என்பது ஒருவருக்கு உதவி செய்வது மட்டுமே அல்ல, உங்களின் நேர்மை, ஒருவரின் மிக நெருக்கடியான நேரத்தில் செய்யப்படும் சிறு உதவி, மற்றவர்களை வாய்ப்புக் கிடைத்தும் ஏமாற்றாமை, அடுத்தவரின் துயரத்தில் பங்கெடுப்பது etc ஆகவே, இதற்கான நற்பலனை கர்மா அவ்வப்போது கொடுக்கும் ஆனால், உங்களை சிரமப்படுத்தியே கொடுக்கும்.

எப்படி?

உங்களுக்கு ஒரு முக்கியப் பிரச்சனைக்காக பெரும் பணம் தேவைப்படுகிறது ஆனால், கிடைக்காது. ஏன்? வினைப்பயன். எனவே நீங்கள் பணத்தை திரட்ட படாதபாடு படுவீர்கள். யாரிடம் எல்லாமோ கேட்பீர்கள் ஆனால், கதறினாலும் கிடைக்காது. கடைசி நேரத்தில் எங்கு இருந்தோ உங்களுக்கு உதவி வரும்.

எப்படி?

அது நீங்கள் இந்தப் பிறவியில் செய்த நல்ல செயலுக்கான பலன். இவ்வளவு கஷ்டப்பட்டது சென்ற பிறவிக்கான வினைப் பயன். அதாவது கர்மாவால், நீங்கள் நல்லது பல செய்து இருந்தாலும் உங்களுக்கு சிரமம் இல்லாமல் ஒரு விசயத்தை நடத்திக்கொடுத்து விட முடியாது. ஆனால், சிரமப்படுத்தி இறுதியில் உதவி செய்து விடும், உங்களின் மிச்சம் இருக்கும் புண்ணியத்திற்கு ஏற்ப.

என்னுடைய வாழ்க்கையில் இது போல நிறைய நேர்ந்து இருக்கிறது. முதலில் எனக்குப் புரியவில்லை. பின்னர் ரொம்ப ஆராய்ந்து / என் அப்பாவிடம் விவாதம் செய்து காரணத்தைக் கண்டு பிடிப்பேன். இது எதனால் எனக்கு நடந்தது? ஏன் இன்னும் நடக்கிறது? நாம் இதில் இருந்து தெரிந்து கொண்டது என்ன? என்பன போன்றவை. நான் வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்டு இருக்கிறேன் ஆனால், ஓரளவு நேர்மையாகவே நடந்து கொண்டுள்ளேன் (என்று நினைக்கிறேன்). இதனால் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், இனி என்னால் தாக்குப் பிடிக்க முடியாது என்ற இக்கட்டான சூழ்நிலையில், எனக்கு எங்கிருந்தாவது ஒரு உதவி வரும். கடந்த பிறவியில் ஃப்ராடாக இருந்து இருப்பேன் போல உதவி கிடைக்கும் என்று நான் கற்பனையில் கூட நினைத்து இருக்க மாட்டேன் ஆனால், கிடைக்கும். அது தான் கர்மா.

இதன் காரணமாகவே எனக்கு எந்தக் கஷ்டம் வந்தாலும் கவலைப்பட மாட்டேன் (மன அழுத்தம் இருக்கும் அதை தவிர்க்க முடியாது) ஏனென்றால், அனைத்தும் முயற்சி செய்து இனி என்னால் எதுவுமே செய்ய முடியாது என்ற இக்கட்டான நிலை வரும் போது எனக்கு எப்படியும் உதவி கிடைக்கும். இது பொய்யில்லை 100% உண்மை.

இது உங்கள் வாழ்க்கையிலும் நிச்சயம் நடந்து இருக்கும் (கடைசி நேர உதவி) ஆனால், பிரச்சனை முடிந்ததால், ஏன் என்று நீங்கள் யோசித்து இருக்க மாட்டீர்கள். தற்போது, இது போல நடந்தது எப்படி என்று யோசித்துப் பாருங்கள், ஒருவேளை உங்களுக்கு அதற்கான விடை கிடைக்கலாம். ஒருவேளை யாருக்காவது நீங்கள் இக்கட்டான சூழ்நிலையில் உதவி புரிந்து மறந்து இருக்கலாம். நீங்கள் மறக்கலாம் ஆனால், கர்மா மறக்காது. உதவியை மட்டுமல்ல நீங்கள் செய்த தவறுகளையும் .

எவ்வளவு கூறினாலும் அனைவருக்கும் இருக்கும் சந்தேகங்கள் / கோபங்கள் எனக்கும் இருக்கிறது. சிறு குழந்தை சிரமப்படுகிறதே, அரசியல்வாதிகள் அநியாயம் செய்கிறார்களே, பெண்கள் வன்புணர்விற்கு ஆளாகிறார்களே, அப்பாவிகள் கொலை செய்யப்படுகிறார்களே, நல்லவர்கள் ஏமாற்றப்படுகிறார்களே, நல்லதுக்கே காலம் இல்லாமல் இருக்கிறது இதற்கெல்லாம் என்ன சொல்லப்போகிறீர்கள்? என்று நீங்கள் நினைக்கும் அதே கோபம் கலந்த விடை தெரியாத கேள்விகள் எனக்கும் உள்ளது.

தற்போது அநியாயம் செய்து கொண்டு இருந்தும் சுகமாக இருப்பவர்கள் கடந்த பிறவியில் நிறைய நல்லது செய்து இருக்கலாம். அந்த புண்ணியத்தின் பலனைத்தான் தற்போது அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் புண்ணியம் தீர்ந்து போனால் அடுத்த “நொடியே” கடும் சிரமத்தில் வீழ்வார்கள். இதை நாம் கண்ணால் காணவும் வாய்ப்பு இருக்கிறது, இல்லாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது ஆனால், வினைப்பயனை அனுபவிக்காமல் தவறு செய்தவர்கள் தப்பிக்கவே முடியாது.

காரணமில்லாமல் காரியமில்லை. நமக்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இவ்வாறு கூறுவதை கேட்கும் போது ஜீரணிக்க சிரமமாக இருக்கிறது ஆனால், இது தான் கர்மவினைப் படி உண்மை. நமக்குத் தான் அதற்கான விளக்கம் கிடைப்பதில்லை. அந்த விளக்கம் தான் கர்மவினை ஆனால், இதை ஏற்றுக்கொள்ள மனது மறுக்கிறது.

நான் முன்னரே கூறியபடி சில விசயங்களுக்கு நமக்கு பதில் கிடைக்கிறது. சிலவற்றிக்கு பதில் கிடைக்கவில்லை என்பதாலே நாம் கோபம் அடைகிறோம். இது போன்ற சிரமமான கேள்விகளுக்கு ஞாநிகளுக்கு தான் பதில் தெரியும். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு அல்ல. நான் கூறுவது நிஜ ஞானிகள், சாதுக்கள் பற்றி, டுபாக்கூர் கார்பரேட் சாமியார்கள் அல்ல. நான் கர்மவினை பற்றிக் கூறிய சில விசயங்கள் ஒரு சிலருக்கு புதிதாக இருக்கலாம் காரணம், அனுபவம் இல்லாதது. எனக்கு வாய்ப்புக் கிடைத்து சிலது புரிந்து கொண்டது போல, அடுத்த கட்டத்திற்கான கேள்விகளுக்கான பதில் அந்த அளவிற்கு அனுபவம் பெற்றவர்களுக்கு / ஞாநிகளுக்குத் தான் தெரியும். இதிலும் L1 L2 L3 L4 சப்போர்ட் போல இருக்கிறது .

ரஜினி அடிக்கடி கூறுவார் “சில கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டு இருக்கிறேன்” என்று. முன்பு இதை கேட்கும் போது எனக்கு கிண்டலாகத் தான் தெரிந்தது ஆனால், இதெல்லாம் புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் போது தான் ரஜினி கூறியது எவ்வளவு உண்மை என்று புரிந்தது. இது போல தனக்குப் புரியாத விசயங்களுக்குத் தான் விடை தேடி இமயமலையை சுற்றிக்கொண்டு இருக்கிறாரோ என்னவோ!

மேற்கூறியது எதுவுமே நான் படித்து தெரிந்து கொண்டதல்ல. வாய்ப்புக் கிடைக்கும் போது எனக்கு என் அப்பா கூறியது. என் அப்பா கூறியதை நான் அனுபவங்களில் மேம்படுத்திக் கொண்டு இருக்கிறேன், அவ்வளவு தான். எனக்கும் ஆயிரம் விடை தெரியாத கேள்விகள் உள்ளது. இதை எல்லாம் நான் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நான் இங்கே இருக்க முடியாது. இதற்குண்டான வழியில் தான் இருக்க முடியும். எனவே நமக்கு வாய்ப்புக் கிடைக்கும் போது காரணங்களை தெரிந்து கொள்ளலாம் / தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

விவேகானந்தர் எழுதிய 1920 – 1930 ல் வெளிவந்த “கர்மவினை” என்ற புத்தகத்தை எனக்கு என் அப்பா கொடுத்தார். அதன் அருமை தெரியாமல் எங்கோ தொலைத்துவிட்டேன். இன்று வரை அதற்காக வருத்தப்படுகிறேன். தேடினால் இதனுடைய மறுபதிப்பு கிடைக்கலாம் இருந்தாலும், அந்த பழைய புத்தகத்தின் மதிப்பு தனி தானே! ஒருவேளை இதற்கும் ஏதாவது காரணம் இருக்கலாம் நான் தான் கண்டு பிடிக்க வேண்டும்.

நாம் நம் கடமையை சரியாகச் செய்ய வேண்டும், நம்முடைய தவறுகளுக்கு கர்மாவை காரணம் காட்டி தப்பிக்கப்பார்த்தால் அது நம் தவறு, கர்மாவின் தவறல்ல. அப்படி நினைக்க வைத்து உங்களை மேலும் சிரமப்படுத்துவது கர்மாவின் நோக்கமாக இருக்கலாம், அதனால் நீங்கள் அதற்கு இடம் கொடுக்காமல் தொடர்ந்து போராடி கஷ்டத்திற்கே கஷ்டம் கொடுத்தால், வேறு வழியில்லாமல் கர்மாவே “என்னடா! இவன் எப்படி பால் போட்டாலும் அடிக்கறானே என்று.. சரி! கொஞ்சம் சிரமத்தை குறைப்போம்” என்று முடிவு செய்யும்.

விதியைக் காரணம் காட்டி நீங்கள் தப்பித்துக்கொள்ள முயற்சித்தால் Pls Attention your honour உங்களை கர்மா அவ்வாறு செய்ய / நினைக்க வைத்து உங்களை தந்திரமாக பலி வாங்கி, மேலும் மேலும் தவறு செய்யத் தூண்டி உங்களை சிரமத்தில் ஆழ்த்தப் பார்க்கிறது என்று அர்த்தம். எனவே நீங்கள் நமக்கு சிக்கல் வருகிறது என்று உணர்ந்து உஷாராகி தவறு செய்யாமல் எதிர்த்துப் போராடி வினைப்பயனை குறைக்கப் பார்க்க வேண்டும். இது புரியாமல் நீங்கள்… “அட போப்பா.. நேரமே சரியில்லை.. விதிப்படி நடக்கட்டும்” என்று பயந்து விலகினால் கர்மா குஷியாகி உங்களைப் போட்டுத் தாக்கும். சோம்பேறிகளும் கோழைகளும் மட்டுமே விதியைக் குற்றம் கூறுவார்கள்.

இறுதியாக, கர்மா பஞ்ச் வசனம் மட்டும் தான் பேசாது மற்றபடி தவறு செய்பவர்களை, கொடுஞ்செயல் புரிபவர்களை அடித்து துவம்சம் செய்து விடும். அது எப்போது என்பது தான் யாருக்கும் தெரியாது. உங்களின் தவறுகளை நிறுத்தி நல்லது செய்யவில்லை என்றால், பெரும் சிக்கலில் மாட்டுவீர்கள். கர்மா ஒரு “சூப்பர் கணினி” போல, நீங்க என்ன செய்தாலும் கவனித்து அதில் உள்ள பாவ புண்ணியங்களை கணக்கெடுத்துக்கொண்டே இருக்கும். 

முடிந்த வரை, குழப்பாமல் எளிமையாக எழுதி இருப்பதாக நினைக்கிறேன். உங்களுக்கு இது வரை படித்ததில் சில புரிந்தது போலவும் சில புரியாதது போலவும் இருக்கும். இருப்பினும் “கர்மவினை” குறித்து உங்களுக்கு ஓரளவு புரிதல் கிடைத்து இருக்கும் என்று நம்புகிறேன். மேலே நான் கூறியதில் தவறுகள் இருக்கலாம் எனவே, இதை ஒரு மேலோட்டமான தகவலாக எடுத்துக்கொண்டு, மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இது குறித்த புத்தகங்களைப் படியுங்கள். குறிப்பாக விவேகானந்தர் எழுதிய “கர்மவினை”. இந்தக் கட்டுரை எழுத தூண்டுதலாக இருந்தது.

இந்து மதத்தின் அறநெறிகளை, கர்மவினைகளை, பாவ புண்ணியங்களை நம்புவர்களுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.
thanks to 

No comments:

Post a Comment