Tuesday 5 April 2016

சிவவாக்கியர்



உண்டகல்லை எச்சிலென்று உள்ளெறிந்து போடுறீர்
கண்டஎச்சில் கையலோ பரமனுக்கு ஏறுமோ
கண்டஎச்சில் கேளடா கலந்தபாணி அப்பிலே
கொண்டசுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே.
ஓதிவைத்த நூல்களும் உணர்ந்து கற்ற கல்வியும்
மாதுமக்கள் சுற்றமும் மறக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ வெங்குமாகி நின்றதோ
சோதிபுக் கொளித்தமாயம் சொல்லடா சுவாமியே.
ஈணெருமை யின்கழுத்தில் இட்டபொட் டணங்கள் போல்
மூணுநாலு சீலையில் முடிந்தவிழ்க்கும் மூடர் காள்
மூணுநாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை
ஊணிஊணி நீர்முடிந்த உண்மைஎன்ன உண்மையே.
சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல்
காயமான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே
கூவமான கிழநாரிக் கூட்டிலே புகுந்தபின்
சாவல்நாலு குஞ்சதஞ்சும் தாம்இறந்து போனதே.
மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலுகட்ட றுப்பிரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே.
செம்பினில் களிம்புவந்த சீதரங்கள் போலவே
அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை
வெம்பிவெம்பி வெம்பியே மெலிந்துமேல் கலங்கிட
செம்பினில் களிம்புவிட்ட சேதியேது காணுமே.
நாடிநாடி உம்முளே நயந்துகாண வல்லிரேல்
ஓடியோடி மீளுவார் உம்முளே அடங்கிடும்
தேடிவந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடிகால மும்முகந்து இருந்தவாறு எங்ஙனே.
பிணங்குகின்றது ஏதடா பிரஞ்ஞைகெட்ட மூடரே
பிணங்கிலாத பேரொளிப் பிராணனை அறிகிலீர்
பிணங்குவோர் இருவினைப் பிணக்கறுக்க வல்லிரேல்
பிணங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்க லாகுமே.
மீனிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
மீனிருக்கும் நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
மானிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
மானுரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.
ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம்நீங்கள் ஆற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது.
அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பது
முக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டது
மைக்கிடில் பிறந்திறந்து மாண்டுமாண்டு போவது
மொக்கிடீர் உமக்குநான் உணர்த்துவித்தது உண்மையே.
ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாறு எங்ஙனே
செய்யதெங்கு இளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே
ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே.
நவ்வுமவ்வை யுங்கடந்து நாடொணாத சியின்மேல்
வவ்வுயவ்வு ளுஞ்சிறந்த வண்மைஞான போதகம்
ஒவ்வுசுத்தி யுள்நிறைந்த துச்சியூ டுருவியே
இவ்வகை அறிந்த பேர் கள்ஈசன்ஆணை ஈசனே.
அக்கரம் அனாதியோ வாத்துமம் அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ.
பார்த்ததேது பார்த்திடில் பார்வையூ டழிந்திடும்
சுத்ததாய் இருப்பிரேல் குறிப்பிலச் சிவமதாம்
பார்த்தபார்த்த போதெலாம் பார்வையும் இகந்துநீர்
பூத்த பூவுங் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே.
நெத்திபத்தி உழலுகின்ற நீலமா விளக்கினைப்
பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன்
உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேலொளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே.
நீரையள்ளி நீரில்விட்டு நீ நினைத்த காரியம்
ஆரையுன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரையுன்னி வித்தையுன்னி விதத்திலே முளைத்தெழுந்த
சீரையுன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.
நெற்றியில் தியங்குகின்ற நீலமா விளக்கினை
உய்த் துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியைப்
பத்தியில் தொடர்ந்தவர் பரமயம தானவர்
அத்தலத்தில் இருந்தபேர்கள் அவரெனக்கு நாதரே.
கருத்தரிக்கு முன்னெலாங் காயம்நின்றது எவ்விடம்
உருத்தரிக்கு முன்னெலா முயிர்ப்புநின்றது எவ்விடம்
அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்றது எவ்விடம்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாய மென்று கூறுவீர்.
கருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்ற தேயுவில்
உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்புநின்றது அப்புவில்
அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்ற வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாய மென்று கூறுமே.
தாதரான தாதரும் தலத்திலுள்ள சைவரும்
கூதரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த காரியம்
வீதிபோகு ஞானியை விரைந்துகல் எறிந்ததும்
பாதகங்களாகவே பலித்ததே சிவாயமே.
ஓடியோடி பாவியழைத்து உள்ளங்கால் வெளுத்ததும்
பாவியான பூனைவந்து பாலிலே குதித்ததும்
பணிக்கன் வந்து பார்த்ததும் பாரமில்லை என்றதும்
இழையறுந்து போனதும் என்னமாயம் ஈசனே.
சதுரம்நாலு மறையும்எட்டு தானதங்கி மூன்றுமே
எதிரதான வாயுவாறு எண்ணும் வட்ட மேவியே
உதிரந்தான் வரைகள்எட்டும் எண்ணுமென் சிரசின்மேல்
கதிரதான காயகத்தில் கலந்தெழுந்த நாதமே.
நாலொடாறு பத்துமேல் நாலுமூன்றும் இட்டபின்
மேலுபத்து மாறுடன் மேதிரண்ட தொன்றுமே
கோலிஅஞ் செழுத்துளே குருவிருந்து கூறிடில்
தோலுமேனி நாதமாய்த் தோற்றிநின்ற கோசமே.
கோசமாய் எழுந்ததுங் கூடுருவி நின்றதும்
தேசமாய் பிறந்ததும் சிவாயம்அஞ் செழுத்துமே
ஈசனார் இருந்திடம் அனேகனேக மந்திரம்
ஆகமம் நிறைந்துநின்ற ஐம்பத்தோர் எழுத்துமே.
அங்கலிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும்
பொங்கு தாமரையினும் பொருந்துவார் அகத்தினும்
பங்குகொண்ட சோதியும் பரந்தஅஞ் செழுத்துமே
சிங்கநாதஓசையும் சிவாயமல்ல தில்லையே.
உவமையில்லாப் பேரொளிக்குள் உருவமானது எவ் விடம்
உவமையாகி அண்டத்துள் உருவிநின்றது எவ் விடம்
தவமதான பரமனார் தரித்துநின்றது எவ்விடம்
தற்பரத்தில் ஜலம்பிறந்து தாங்கிநின்றது எவ்விடம்.
சுகமதாக எருதுமூன்று கன்றையீன்றது எவ்விடம்
சொல்லுகீழு லோகமேழும் நின்ற வாறது எவ்விடம்
அளவதான மேருவும் அமைவதானது எவ்விடம்
அவனுஅவளும்ஆடலால் அருஞ்சீவன் பிறந்ததே.
உதிக்குமென்றது எவ்விடம் ஒடுங்குகின்ற துஎவ்விடம்
கதிக்குநின்றது எவ்விடங் கன்றுறக்கம் எவ்விடம்
மதிக்கநின்றது எவ்விடம் மதிமயக்கம் எவ்விடம்
விதிக்க வல்ல ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.
திரும்பியாடு வாசலெட்டு திறமுரைத்த வாசலெட்டு
மருங்கிலாத கோலமெட்டு வன்னியாடு வாசலெட்டு
துரும்பிலாத கோலமெட்டு கத்திவந்த மருளரே
அரும்பிலாத பூவும்உண்டு ஐயனாணை உண்மையே.
தானிருந்து மூலஅங்கி தணலெழுப்பு வாயுவால்
தேனிருந்து வரைதிறந்து தித்தியொன்று ஒத்தவே
வானிருந்த மதியமூன்று மண்டலம் புகுந்தபின்
ஊனிருந்த தளவுகொண்ட யோகிநல்ல யோகியே.
முத்தனாய் நினைந்தபோது முடிந்த அண்டத்துச்சிமேல்
பத்தனாரும் அம்மையும் பரிந்துஆடல் ஆடினார்
சித்தரான ஞானிகாள் தில்லையாடல் என்பீர்காள்
அத்தனாடல் உற்றபோது அடங்கலாடல் உற்றதே.
ஒன்றுமொன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றுமின்றும் ஒன்றுமே அனாதியான தொன்றுமே
கன்றல்நின்று செம்பொனைக் களிம் பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வ ம்உம்முளே அறிந்ததே சிவாயமே.
நட்டதா வரங்களும் நவின்ற சாத்திரங்களும்
இட்டமான ஓமகுண்டம் இசைந்தநாலு வேதமும்
கட்டிவைத்த புத்தகம் கடும்பிதற்று இதற்கெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறியவே.
வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி
சட்டமீ படத்திலே சங்குசக் கரங்களாய்
விட்டதஞ்சு வாசலில் கதவினால் அடைத்தபின்
முட்டையில் எழுந்தசீவன் விட்டவாறது எங்ஙனே.
கோயில்பள்ளி ஏதடா குறித்துநின்றது ஏதடா
வாயினால் தொழுதுநின்ற மந்திரங்கள் ஏதடா
ஞாயமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியிற் காணலாம் இறையையே.
நல்லவெள்ளி ஆறதாய் நயந்தசெம்பு நாலதாய்
கொல்லுநாகம் மூன்றதாக் குலாவு செம்பொன் இரண்ட தாய்
வில்லினோசை ஒன்றுடன் விளங்கஊத வல்லிரேல்
எல்லையொத்த சோதியானை எட்டுமாற்ற லாகுமே.
மனத்தகத்து அழுக்கறாத மவுனஞான யோகிகள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்
மனத்தகத்து அழுக்கறுத்த மவுனஞான யோகிகள்
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே.
உருவுமல்ல ஒளியுமல்ல ஒன்றதாகி நின்றதே
மருவுமல்ல கந்தமல்ல மந்தநாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாக நின்ற நேர்மை யாவர்காண வல்லிரே.
ஒரெழுத்து உலகெலாம் உதித்தஉட் சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை
நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே.
ஆதியந்த மூலவிந்து நாதமைந்து பூதமாய்
ஆதியந்த மூலவிந்து நாதம்ஐந்து எழுத்துமாய்
ஆதியந்த மூலவிந்து நாதமேவி நின்றதும்
ஆதியந்த மூலவிந்து நாதமே சிவாயமே.
அன்னமிட்ட பேரெலாம் அனேககோடி வாழவே
சொன்னமிட்ட பேரெலாந் துரைத்தனங்கள் பண்ணலாம்
வின்னமிட்ட பேரெல்லாம் வீழ்வர்வெந் நரகிலே
கன்னமிட்ட பேரெலாம் கடந்துநின்ற திண்ணமே.
ஓதொணாமல் நின்ற நீர்உறக்கம்ஊணும்அற்றநீர்
சாதிபேதம் அற்றநீர் சங்கையன்றி நின்றநீர்
கோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்றநீர்
ஏதுமின்றி நின்ற நீர்இயங்குமாறது எங்ஙனே.
பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்கு நாள் சடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ
நிலம்பிறந்து வானிடிந்து நின்ற தென்ன வல்லிரே.
துருத்தியுண்டு கொல்லருண்டு சொர்னமான சோதியுண்டு
திருத்தமாய் மனதிலுன்னித் திகழவூத வல்லிரேல்
பெருத்த தூணிலங்கியே பிழம்பதாய் விரிந்திடும்
நிருத்தமான சோதியும் நீயுமல்ல இல்லையே.
வேடமிட்டு மணிதுலக்கி மிக்கதூப தீபமாய்
ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர்
தேடிவைத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூசை பூசையென்ன பூசையே.
முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டுகொண்டு நின்றிடம் கடந்துநோக்க வல்லிரேல்
முட்டுமற்று கட்டுமற்று முடியினின்ற நாதனை
எட்டுதிக்கும் கையினால் இருத்தவீட தாகுமே.
அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே
நெருக்கியேறு தாரகை நெருங்கிநின்ற நேர்மையை
உருக்கியோர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே
இருக்கவல்ல பேரலோ இனிப்பிறப்பது இல்லையே.
மூலவட்ட மீதிலே முளைத்தஅஞ் செழுத்தின்மேல்
கோலவட்ட மூன்றுமாய் குலைந்தலைந்து நின்றநீர்
ஞாலவட்ட மன்றுளே நவின்றஞான மாகிலோ
ஏலவட்ட மாகியே யிருந்ததே சிவாயமே.
சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள்
முச்சதுரம் எட்டுளே மூலாதார அறையிலே
அச்சமற்ற சவ்வுளே அரியரன் அயனுமாய்
உச்சரிக்கு மந்திரம் உண்மையே சிவாயமே.


No comments:

Post a Comment