Tuesday 5 April 2016

சிவவாக்கியர்



சொற்குருக்க ளானதும் சோதிமேனி யானதும்
மெய்க்குருக்க ளானதும் வேணபூசை செய்வதும்
சத்குருக்க ளானதும் சாத்திரங்கள் சொல்வதும்
மெய்க்குருக்க ளானுதும் திரண்டுருண்ட தூமையே.
கைவ்வடங்கள் கொண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டுநீர் எண்ணியெண்ணி பார்க்கிறீர்
பொய்யுணர்ந்த சிந்தையை பொருந்திநோக்க வல்லிரேல்
மெய்கடந்த தும்முளே விரைந்து கூடலாகுமே.
ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னைநீ மதிமயக்க லாகுமோ
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.
இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம் வலக்கை சூல மான்மழு
எடுத்தபாதம் நீண்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லரோ.
நாழியப்பும் நாழியுப்பும் நாழியான வாறுபோல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்துவாழ்ந் திருந்திடும்
ஏறில்ஏறும் ஈசனும் இயங்குசக்ர தரனையும்
வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீண் நரகிலே.
தில்லைநா யகன்னவன் திருவரங் கனும்அவன்
எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன்என்பிரான்
முத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர்
சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
அத்தனாடல் கண்டபின் அடங்கலாடல் காணுமே.
உற்றநூல்க ளும்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்துவீர்
செற்றமாவை உள்ளரைச் செறுக்கறுத்து இருத்திடில்
சுற்றமாக உம்முளே சோதியென்றும் வாழுமே.
போதடா வெழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே.
அகாரமென்ற வக்கரத்துள் அவ்வுவந்து தித்ததோ
உகாரமென்ற வக்கரத்தில் உவ்வுவந்து தித்ததோ
அகாரமும் உகாரமுஞ் சிகாரமின்றி நின்றதோ
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.
அறத்திறங்க ளுக்கும்நீ அகண்ட ம்எண் திசைக்கும்நீ
திறத்திறங்க ளுக்கும்நீ தேடுவார்கள் சிந்தைநீ
உறக்கம்நீ உணர்வு நீஉட்கலந்த சோதிநீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினும் குடிகொளே.
அண்டம்நீ அகண்டம்நீ ஆதிமூல மானநீ
கண்டம்நீ கருத்தும்நீ காவியங்க ளானநீ
புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்
கொண்ட கோல மானநேர்மை கூர்மையென்ன கூர்மையே.
மையடர்ந்த கண்ணினார் மயங்கிடும் மயக்கிலே
ஐயிறந்து கொண்டுநீங்கள் அல்லல்உற் றிருப்பிர்காள்
மெய்யடர்ந்த சிந்தையால் விளங்குஞான மெய்தினால்
உய்யடர்ந்து கொண்டுநீங்கள் ஊழிகாலம் வாழ்விரே.
கருவிருந்து வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குருவிருந்த சொன்னவார்த்தை குறித்து நோக்கவல்லிரேல்
உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்றுநீர்
திருவிலங்கு மேனியாகிச் சென்றுகூட லாகுமே.
தீர்த்தமாட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தமாடல் எவ்விடந் தெளிந்த நீ ரியம்புவீர்
தீர்த்தமாக உம்முளே தெளிந்துநீர் இருந்தபின்
தீர்த்தமாக வுள்ளதும் சிவாயவஞ் செழுத்துமே.
கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்தவாய் விழுந்துபோன பாவமென்ன பாவமே
அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பதோர்
எழுத்திலா எழுத்திலே இருக்கலாம் இருந்துமே.
கண்டுநின்ற மாயையும் கலந்துநின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லிரேல்
பண்டைஆறும் ஒன்றுமாய்ப் பயந்தவேத சுத்தராய்
அண்டமுத்தி ஆகிநின்ற வாதிமூலம் ஆவிரே.
ஈன்றவாச லுக்குஇரங்கி எண்ணிறந்து போவிர்காள்
கான்றவாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
நான்றவாச லைத்திறந்து நாடிநோக்க வல்லிரேல்
தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே.
உழலும்வாச லுக்குஇரங்கி ஊசலாடும் ஊமைகாள்
உழலும்வாச லைத்துறந்து உண்மைசேர எண்ணிலிர்
உழலும் வாச லைத்துறந்து உண்மைநீர் உணர்ந்தபின்
உழலும்வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே.
மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே யிருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலமுண்ட கண்டராணை அம்மைஆணை உண்மையே.
இருக்கவேணும் என்றபோ திருக்கலாய் இருக்குமோ
மரிக்கவேணும் என்றலோ மண்ணுளே படைத்தனர்
சுருக்கமற்ற தம்பிரான் சொன்ன அஞ் செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தென்ப பதங்கெடீர்.
அம்பத்தொன்றில் அக்கரம் அடங்கலோர் எழுத்துமோ
விண்பரந்த மந்திரம் வேதநான்கும் ஒன்றலோ
விண்பரந்த மூலஅஞ் செழுத்துளே முளைத்ததே
அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே.
சிவாயம் என்ற அக்ஷரஞ் சிவனிருக்கும் அக்ஷரம்
உபாயமென்று நம்புவதற்கு உண்மையான அக்ஷரம்
கபாடம்அற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம்இட் டழைக்குமே சிவாயஅஞ் செழுத்துமே.
உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவுமல்ல சொந்தமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசலான தானுமல்ல
உரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே.
ஆத்துமா வனாதியோ ஆத்துமா அனாதியோ
மீத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ
தாக்கமிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ
வீக்கவந்த யோகிகாள் விரைந்துரைக்க வேணுமே.
அறிவிலே பிறந்திருந் தஆகமங்க ள்ஓதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மையொன் றறிகிலீர்
உறியிலே தயிரிருக்க ஊர்புகுந்து வெண்ணைய் தேடும்
அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே.
இருவரங்க மும்பொருந்தி என்புருகி நோக்கிலீர்
உருவரங்க மாகிநின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர்
கருவரங்க மாகிநின்ற கற்பனை கடந்தபின்
திருவரங்க மென்றுநீர் தெளிந்திருக்க வல்லிரே.
கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்துருத்தி மெய்யினாற் சிவந்தஅஞ் செழுத்தையும்
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடிதேவரென்ன துன்னதென்னவும்
கண்ணிலே கண்மணிஇருக்கக் கண்மறைந்த வாறுபோல்
எண்ணில் கோடி தேவரும் இதின்கணால் விழிப்பதே.
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே.
மிக்கசெல்வம் நீர் படைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்
மக்கள் பெண்டீர்சுற்ற மென்று மாயைகாணும் இவையெல்லாம்
மறலிவந் தழைத்தபோது வந்துகூட லாகுமோ.
ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே
ஒருவராகி இருவராகி இளமைபெற்ற ஊரிலே
அக்கணிந்து கொன்றை சூடிஅம்பலத்தில் ஆடுவார்
அஞ்செழுத்தை ஓதிடில் அனேகபாவம் அகலுமே.
மாடுகன்று செல்வமும் மனைவிமைந்தர் மகிழவே
மாடமாளி கைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
உடல்கிடந் துயிர்கழன்ற உண்மைகண்டு உணர்கிலீர்.
பாடுகின்ற உம்பருக்குஆடுபாதம் உன்னியே
பழுதிலாத கன்மகூட்டம் இட்டஎங்கள் பரமனே
நீடுசெம்பொன்னம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே
நீலகண்ட காளகண்ட நித்யகல்லி யாணனே.
கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானமுற்ற நெஞ்சகத்தில் வல்லதேதும் இல்லையே
ஊனமற்ற சோதியோடு உணர்வுசேர்ந்து அடக்கினால்
தேனகத்தின் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே.
பருகியோடி உம்முளே பறந்துவந்த வெளிதனை
நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அதாகுமே
உருகியோடி எங்குமாய் ஓடும்சோதி தன்னுளே
கருதடா உனக்குநல்ல காரணம் அதாகுமே.
சோதிபாதி யாகிநின்று சுத்தமும் பலித்துவந்து
போதியாத போதகத்தை ஓதுகின்ற பூரணா
வீதியாக ஓடிவந்து விண்ணடியின் ஊடுபோய்
ஆதிநாதன் நாதனென்று அனந்தகாலம் உள்ளதே.
இறைவனால் எடுத்தமாடத் தில்லையம்ப லத்திலே
அறிவினால் அடுத்தகாயம் அஞ்சினால்அமர்ந்ததே
கருவில்நாத முண்டுபோய் கழன்றவாசல் ஒன்பதும்
ஒருவராய் ஒருவர்கோடி உள்ளுளே அமர்ந்ததே.
நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கியோடும் வாயுவை
அன்பினால் இருந்து நீரருகிருத்த வல்லிரேல்
அன்பர் கோயில்காணலாம் அகலும் எண்டிசைக்குளே
தும்பியோடி ஓடியே சொல்லடா சுவாமியே.
தில்லையை வணங்கிநின்ற தெண்டனிட்ட வாயுவே
எல்லையைக் கடந்துநின்ற ஏகபோக மாய்கையே
எல்லையைக் கடந்துநின்ற சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையும் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே.
உடம்புயிர் எடுத்ததோ உயிருடம்பு எடுத்ததோ
உடம்புயிர் எடுத்தபோது உருவமேது செப்புவீர்
உடம்புயிர் எடுத்தபோதஉயிஇறப்ப தில்லையே
உடம்புமெய் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே.
அவ்வெனும் எழுத்தினால் அகண்டம்ஏழு மாகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும்உவ்வு மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே.
மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்க ளாவது மறத்திலூற லன்றுகாண்
மந்திரங்க ளாவது மதத்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மானமேதும் இல்லையோ.
என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை
பன்னுகின்ற செந்தமிழ் பதங்கடந்த பண்பென
மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல்
என்னகத்துள் ஈசனும் யானுமல்ல இல்லையே.
ஆலவித்தில் ஆல்ஓடுங்கி ஆலமான வாறுபோல்
வேறுவித்தும் இன்றியே விளைந்துபோகம் எய்திடீர்
ஆறுவித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்ததே
பாருமித்தை உம்முளே பரப்பிரம்மம் ஆவிரே.
அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பது இங்கிலை
சவ்வுதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால்
அவ்வுமுவ்வும் அவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே.
நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்துநின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே.
இரண்டுமொன்று மூலமாய் இயங்குசக் கரத்துளே
சுருண்டுமூன்று வளையமாய்ச் சுணங்குபோல் கிடந்ததீ
முரண்டெழுந்த சங்கினோசை மூலநாடி ஊடுபோய்
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே.
கடலிலே திரியும்ஆமை கரையிலேறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல்
மடலுளே இருக்கும்எங்கள் மணியரங்க சோதியை
உடலுளே நினைத்துநல்ல உண்மையானதுஉண்மையே.
மூன்று மண்டலத்தினும் முட்டிநின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்
ஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்லவெங்கும் இல்லையே.


1 comment:

  1. https://www.facebook.com/maatamilpotri/posts/2793780087502211

    ReplyDelete