Saturday 9 April 2016



அஷ்ட கணபதியும், திரு நீற்று செபமும்!
அஷ்ட கணபதிக்கும் ஒரே மந்திரம்
அகத்தியர் தனது “அகத்திய வாத சௌமியம்” என்னும் நூலில் அஷ்ட கணபதி பற்றியும், அந்த கணபதியை வணங்கும் மூல மந்திரம் பற்றியும், அந்த மூல மந்திரத்தை பயன் படுத்தி பல்வேறு நோய்களை தீர்க்கும் முறையினையும் அருளியிருக்கிறார்.
ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
ஓமப்பா ஆதி கணபதி தானொன்று
உறுதியுள்ள மகா கணபதி தானொன்று
தாமப்பா நடன கணபதிதானொன்று
சங்கையுள்ள சக்தி கணபதி தானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க்கேளு
நன்மையுள்ள வால கணபதிதானொன்றே.
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமமே உக்கிர கணபதிதானொன்று
நன்றான மூல கணபதிதானொன்று
நாட்டமுட அஷ்டகணபதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க்கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து ஓம்கிலி அங்உங்கெண்ணே
ஆதி கணபதி,
மகா கணபதி,
நடன கணபதி,
சக்தி கணபதி,
பால கணபதி,
உச்சிட்ட கணபதி,
உக்கிர கணபதி,
மூல கணபதி
என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார்.
இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது
“ஓம் கிலி அங் உங்”
என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை பின் வருமாறு விளக்குகிறார்.
எண்ணமுடன் இடதுகையால் விபூதிவைத்து
ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி
சொன்னமொழி தவறாமற்சுழியைப்பார்த்து
சுத்தமுடன் ஓம்கிலி அங்உங்கென்று
தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத்
தான்செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால்
முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே
மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே.
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
கெடியான குன்மமுடன் காசந்தீரும்
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம்
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப்போகும்
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே.
இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார்.
இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment